சேத்துமான் விமர்சனம்: சேத்துமான் சுவைக்க அல்ல சிந்தனையை தூண்டி சிந்திக்க வைக்கும் அருமருந்து | ரேட்டிங் – 3/5
நீலம் புரொடக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது சேத்துமான்.
இதிpல் மாணிக்கம், அஸ்வின், பிரசன்னா பாலசந்திரன், சுருளி, குமார், சாவித்திரி, கன்னிகா, அண்ணாமலை, நாகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு- பிரதீப் காளிராஜா, இசை-பிந்து மாலினி, எழுத்து- தமிழ், பெருமாள் முருகன், பிஆர்ஒ-குணா.
ஆதிக்க சாதியினரின் சண்டையில் கிராமமே அழிந்து போக, அனாதையாகும் சிறுவன் குமரேசனை எடுத்து வளர்க்கிறார் தாதா பூச்சியப்பா, கூடை பின்னி விற்று குமரேசனை படிக்க வைக்கிறார். நன்றாக படிக்கும் குமரேசன்,தாதா மீது அதிக பாசத்தோடு இருக்கிறார். மற்ற நேரங்களில் பூச்சியப்பன் பண்ணையார் வெள்ளையனுக்கு உதவியாக வேலைகளை செய்கிறார். வெள்ளையனுக்கு மனைவியின் எதிர்ப்பையும் மீறி சேத்துமான்(பன்றிக்கறி) சாப்பிட ஆசை வர, அதற்காக தெரிந்த நண்பர்களை (கூறு) பத்து பங்குக்கு சேர்க்கிறார். பூச்சியப்பனும், வெள்ளையனும் தேடி அலைந்து சேத்துமானை வாங்கி நிலத்தில் சமைக்க ஏற்பாடு செய்கின்றனர். அங்கே வெள்ளையனிடம் பகையாக இருந்து வரும் பங்காளியும் அங்கே வந்து பங்குக்கு நிற்க, சமைக்க ஆரம்பித்தது முதல் முடியும் வரை சண்டை சச்சரவுமாக இருக்கிறது. சமைத்த பின் சாப்பிடும் போது பங்காளிகளுக்குள் சண்டை அதிகாமாகி கைகலப்பில் முடிகிறது. இதனை தடுக்க வரும் பூச்சியப்பனுக்கு என்னவானது? சிறுவன் குமரேசனின் நிலை என்ன? சண்டை போட்ட பண்ணை பங்காளிகள் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை.
தாத்தா பூச்சயப்பனாக மாணிக்கமும், சிறுவன் குமரேசனாக அஸ்வினும் ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தமான நடிப்பிலும், உரையாடல்களிலும், செய்கைகளிலும் அச்சுஅசலான கிராமத்து மண் வாசனை கலந்து தாத்தா, பேரன் உறவுகளின் ஆழத்தை உணர்வு பூர்வமாக உணர செய்து மெய் சிலிக்க வைத்துள்ளனர்.
பிரசன்னா பாலசந்திரன் பண்ணையார் வெள்ளையனாக பேச்சு வழக்கு, சண்டை, நடை, உடை, பாவனை என்று அசத்தல் நடிப்போடு மனைவி விஜயலட்சுpமியாக வரும் சாவித்திரிக்கு ஈடு கொடுத்து வாங்கி கட்டிக் கொள்வது படத்தின் ஹைலைட்ஸ்.
மற்றும் சுருளி, அழுத்தமாக உரிமைக்காக கருத்துக்களை பதிவு செய்யும் குமார், கன்னிகா, அண்ணாமலை, நகேந்திரன் ஆகியோர் படத்தின் கல்தூண்கள்.
ஒளிப்பதிவு- பிரதீப் காளிராஜா, ஒவ்வொரு காட்சியையும் தன் தோளில் சுமந்து படமாக்கியிருப்பதன் அதிர்வை படத்தில் உணர முடிகிறது. கடைசி நிமிடங்களிலும் தன்னுடைய காட்சிக்கோணங்களால் மிரள வைத்திருக்கும் உழைப்பிற்கு பாராட்டுக்கள்.
இசை-பிந்து மாலினி, படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்.
இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி சிறுகதையை தழுவி படத்தை இயக்கியுள்ளார் தமிழ். படத்தில் தாத்தா-பேரன் பாசம், வெள்ளையன்-பூச்சியப்பா நட்பு, பங்காளி பகை கலந்து சேத்துமான் கறி சாப்பிட எடுக்கும் முயற்சியில் இறுதியில் பலியானது யார் என்பதை அழுத்தத்தோடு இயக்கியுள்ளார் தமிழ். தலித் மக்கள் மீது வன்முறை நடத்தும் காட்சிகளை ஒவியமாக காண்பித்து முடித்து அதன் பின் கதைக்களம் 2016ல் தொடங்குவது போல் காட்டி தலித் மக்களின் வாழ்வியலையும், அவலங்களையும் நம் கண் முன்னே நிறுத்தி அவர்களின் துன்பங்களை பகிர்ந்து, வசனங்களில் அழுத்தத்தை கொடுத்து, சண்டையில் நகைச்சுவை கலந்து அறுசுவை விருந்து படைத்துள்ளார் இயக்குனர் தமிழ். வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் நீலம் புரொடக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ள சேத்துமான் சுவைக்க அல்ல சிந்தனையை தூண்டி சிந்திக்க வைக்கும் அருமருந்து.