செம்பியன் மாதேவி சினிமா விமர்சனம் : செம்பியன் மாதேவி கலப்பு காதலின் விபரீத விளைவு | ரேட்டிங்: 2.5/5

0
233

செம்பியன் மாதேவி சினிமா விமர்சனம் : செம்பியன் மாதேவி கலப்பு காதலின் விபரீத விளைவு | ரேட்டிங்: 2.5/5

டைரக்டர் லோக பத்மநாபன் எழுதி, நடித்து, இசையமைத்து 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில்  தயாரித்திருக்கும் படம் செம்பியன் மாதேவி. இதில் இவருடன் அம்ச ரேகா, செய்பீம் மொசக்குட்டி, மணிமாறன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – கே.ராஜ சேகர், இசையமைப்பாளர் – லோக பத்மநாபன், பின்னணி இசை ஏ.டி.ராம், எடிட்டர் – ராஜேந்திர சோழன், பாடல்கள் – அரவிந்த், லோக பத்மநாபன், வா கருப்பன், நடனம்- சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி, சண்;டை – மெட்ரோ மகேஷ், பிஆர்ஒ- ஜெ.கார்த்திக்

வட தமிழகத்தின் சாதி பாகுபாடு நிறைந்த செம்பியன் கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு தலித் இளைஞர் படுகொலை செய்யப்படுவதிலிருந்து கதைக்களம் தொடங்குகிறது. பின்னர் 2014ல் கதை பயணிக்கிறது. பத்து ஆண்டுகளாக தன் மகனின் கொலைக்கு காரணம் தெரியாமல் சட்ட ரீதியாக நீதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார் தந்தை. இந்நிலையில் அவரது மகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாதேவி(அம்சரேகா)  படிப்பு முடித்தவுடன் வேலைக்கு சென்று தன் குடும்பத்தின் நிலையை உயர்த்தி தன் தந்தையின் தொலைந்த கனவை நிஜமாக்க நினைக்கிறார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லும் மாதேவியை ஒரு தலையாக காதலிக்கிறார் உயர் சாதியைச் சேர்ந்த வசதி படைத்த இளைஞர் வீரன் (லோக பத்மநாபன்). முதலில் சாதி வேறுபாடு காரணமாக இந்த காதலை புறக்கணிக்கும் மாதேவி , வீரனிடம் பின்னர் மனதை பறிகொடுத்து காதலிக்க தொடங்குகிறார். இவர்களின் காதல் நெருக்கமாக கர்ப்பமாகிறார் மாதேவி, தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தும் மாதேவி, போலீசிடம் புகார் கொடுக்க செல்வதாக வீரனிடம் காட்டமாக சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் வீரன் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு குழப்பத்தில் தன் சாதி சமூக நண்பர்களின் உதவியை நாடுகிறார். அவர்களும் லோக பத்மநாபனுக்கு உதவி செய்வதாக சொல்லி, அவனின் சாதி வெறி பிடித்த சித்தப்பாவிடம் நடந்தவற்றை சொல்கின்றனர். அதே சமயம் பத்து ஆண்டுகளுக்கு பிறகு மகனின் சாவின் மர்மத்தை கண்டுபிடிக்கும் மாதேவியின் தந்தை எடுத்த முடிவு என்ன? இதற்கிடையே வீரனின் சாதி வெறி பிடித்த சமூகத்தார் சேர்ந்து மாதேவியை என்ன செய்தார்கள்? சாதி பாகுபாடு நிறைந்த கிராமத்தில் காதலர்களை சேர்ந்து வைத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கிராமத்து இளைஞன் வீரனாக படத்தின் இயக்குனர் லோக பத்மநாபன் நடித்துள்ளார். காதல், நடனம், ஆக்ஷன் என்று தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது காதலி மாதேவியாக அம்சரேகா காதலால் தொலைத்த வாழ்க்கையை மீட்க எடுக்கும் போராட்டத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

இவர்களுடன் ஜெய்பீம் மொசக்குட்டி நகைக்சுவை எடுபடவில்லை, மணிமாறன், ரெஜினா மற்றும் கிராமத்து முகங்கள் நடிப்பில் கவனிக்க வைத்துள்ளனர்.

கிராமத்து கதைக்களத்திற்குகேற்றவாறு வயல்வெளி, மலைக்கோயிலுக்கு செல்லும் பாதை, புதர்கள் நிறைந்த ஆரவாரமற்ற இடங்கள், தெருக்கள், வீடுகள், கோழிப்பண்ணை என்று முடிந்தவரை காட்சிக்கோணங்களை அமைத்துள்ளார்.

பாடல்களின் வரிகள் புரியும்படி நேர்த்தியாக கொடுத்து இசையமைத்துள்ளார் லோக பத்மநாபன், ஏ.டி.ராம்மின் பின்னணி இசை பரவாயில்லை.

ராஜேந்திர சோழனின் படத்தொகுப்பு சில இடங்களில் தடுமாறினாலும், அனைத்து காட்சிகளையும் ஒன்றிணைக்கும் இடத்தில் சிறப்பாக கொடுத்துள்ளார்.

செம்பியன் மாதேவி படத்தை எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்து இசையமைத்து பன்முக திறமையை வெளிப்படுத்தியுள்ளார் லோக பத்மநாபன். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து சாதி வெறியால் நடந்தேறும் அநியாய கொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் சுட்டிக் காட்டும் கண்ணாடியாக சிறு துளியாக பிரதிபலிக்க நினைத்து இயக்கியிருக்கிறார் லோக பத்மநாபன்.

மொத்தத்தில் 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லோக பத்மநாபன் தயாரித்திருக்கும் செம்பியன் மாதேவி கலப்பு காதலின் விபரீத விளைவு.