சுழல் விமர்சனம்: சுழல் பார்ப்பவர்களை தங்கள் (வெப்) வலைக்குள் இழுத்து சுழன்று அடிக்கும் சுனாமி போல் வசூலில் துவம்சம் செய்து வெற்றி வாகை சூடும் | ரேட்டிங் – 3.5/5
வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் எட்டு தொடர்களை கொண்ட மெகா வலை தொடர் சுழல். முதல் நான்கு பாகத்தை பிரம்மாவும், ஐந்து முதல் எட்டு பாகம் வரை அனுசரண்.எம் ஆகியோர் இயக்கியுள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்துள்ள அற்புதமான வலைத்தொடர் சுழல்.
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், நிவேதிதா சதிஷ், சந்தானபாரதி, எஸ்.பிரேம்குமார், ஹரீஷ்; உத்தமன், நித்தீஷ் வீரா, ஈ.குமாரவேல், எம்.இந்துமதி, லதா ராவ், கோபிகா ரமேஷ், எஃப் ஜே, எம்.பழனி, எஸ்.ஜீவா, யூசுப் உசேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-முகேஷ், இசை-சாம்.சி.எஸ்.,எடிட்டர்-ரிச்சர்ட் கெவின், சண்டை- திலீப் சுப்புராயன், தினேஷ் சுப்புராயன், உடை- பூர்ணிமா, நடனம்-ஸ்ரீகிரிஷ், தயாரிப்பு நிர்வாகி-கௌதம் செல்வராஜ், துணை தயாரிப்பு நிர்வாகி-எஸ்.குகபிரியா, எஸ் நந்தகுமார், ஒலி வடிவமைப்பு-சச்சின் சுதாகரன், ஹரிஹரன், பிஆர்ஒ-யுவராஜ்.
சாம்பலூரில் சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் தொழிற் சங்கத் தலைவர் சண்முகம் (பார்த்திபன்) தலைமையில் நடக்கிறது. அன்றிரவே அந்த தொழிற்சாலை தீ விபத்து ஏற்படுகிறது, பார்த்திபனின் இளைய மகள் நிலாவும் (கோபிகா ரமேஷ்) காணாமல் போகிறாள். இதற்கு காரணம் பார்த்திபன் தான் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர். அதே சமயம் பார்த்திபனின் மகள் காணாமல் போன விசாரணையும் நடக்கிறது. பார்த்திபனின் மூத்த பெண் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) தன் தங்கை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து அவரும் தீவிரமாக தேடுகிறார். இந்த இரண்டு விசாரணைகளையும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரெஜினா (ஸ்ரேயா ரெட்டி), சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி (கதிர்) இந்த மர்மங்களை தேடிச் செல்கின்றனர். கதிருக்கு சிசிடிவி கேமிரா பதிவில் நிலா ஒரு மாருதி வேனில் கடத்தப்படுவதையும் அதன் பின் தான் நிலாவும், ஸ்ரெயா ரெட்டியின் மகன் அதிசயம் உடன் சென்று விட்டார் என்பதை அறிகிறார். சில நாட்களுக்கு பிறகு நிலாவும் அதிசயமும் நீரில் மூழ்கி இறந்த சடலங்களை மீட்கிறார். இது தற்கொலையல்ல கொலை என்பதை கதிர் அறிகிறார். இந்த கொலைகளுக்கு காரணம் என்ன? யார் கொன்றார்கள்? தொழில்ற்சாலை தீ விபத்திற்கும், இந்த கொலைகளுக்கும் காரணம் என்ன? உண்மையான குற்றவாளியை இறுதியில் கண்டுபிடித்தனரா? என்பதே விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தொழிற்சங்க தலைவர் சண்முகமாக, இரண்டு பெண்களில் தந்தையாக, ரெஜினாவிடம் சண்டைபோடுவதும், மகள் நிலாவை நினைத்து அழுது புலம்புவதும், தன் தவற்றை உணர்ந்து சரணடைவதும் என்று நேர்த்தியான அக்மார்க் நடிப்பை வழங்கி கை தட்டல் பெறுகிறார்.
துடிப்பான இளமையான மிடுக்கான இன்ஸ்பெக்டர் சக்கரையாக தன் திறமையையும், உணர்ச்சிகளையும் எளிதாக காட்டி சிறப்பாக செய்திருக்கிறார் கதிர்.
நந்தினியாக தங்கைக்காக எடுக்கும் முயற்சிகள், மனதில் மறைந்திருக்கும் ரகசியங்கள், அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு மனதளவில் சாமளித்து இறுதியில் தன் கோபத்தை; வெளிப்படுத்தும் காட்சிகளில் மிளிர்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
உறுதியான மனம் படைத்த இன்ஸ்பெக்டர் ரெஜினாவாக கம்பீரமான தோற்றத்தில் ஸ்ரேயா ரெட்டி, மகனின் ரோல் மாடலாக, பாசத்தை பொழியும் அம்மாவாக, மகன் இறந்ததை தாங்க முடியாமல் நம்ப முடியாமல் மனம் உடைந்து அழும் நேரத்தில் கண் கலங்க வைத்து விடுகிறார்.
மகன் அதிசயாக நடித்திருக்கும் எஃப் ஜே, காதலி நிலாவாக கோபிகா ரமேஷ் இளம் வயது காதல் ஜோடிகளாக போடும் திட்டங்கள், எடுக்கும் முடிவுகள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இவர்களைச் சுற்றியே கதை சூழல்வதால் அதற்கேற்ற பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.
முதலிலிருந்தே வில்லனாக சித்தரிக்கப்படும் ஹரீஷ்; உத்தமன் கதாபாத்திரம் இறுதியில் பரிதாபத்தை வரவழைக்கிறது.
நிவேதிதா சதிஷ், சந்தானபாரதி, எஸ்.பிரேம்குமார், நித்தீஷ் வீரா, ஈ.குமாரவேல், எம்.இந்துமதி, லதா ராவ், எம்.பழனி, எஸ்.ஜீவா, யூசுப் உசேன் ஆகியோர் பக்க மேளங்கள்.
முகேஸின் ஒளிப்பதிவு இந்தத் தொடரின் முக்கிய நோக்கத்தை எந்த ஒரு இடர்பாடில்லாமல் நேர்த்தியாக கையாண்டுள்ளதற்கு காட்சிகளே உத்திரவாதம். மயான கொள்ளை திருவிழா, சிமெண்ட் தொழிற்சாலை தீ விபத்து, மலைப்பிரதேசங்கள், வீடுகள், கொலைகள் என்று இரவில் நடக்கும் சம்பவங்களை யதார்த்தமாக தன் காட்சிக்கோணங்களில் கொடுத்து அசரவைத்துள்ளார்.
மற்றும் சாம் சிஎஸ் மிகக் சிறந்த இசையமைப்பாளர் என்பதை உணர்த்தும் வகையில் சிறப்பாக வேலையைச் செய்துள்ளார்.
எடிட்டர்-ரிச்சர்ட் கெவின், சண்டை- திலீப் சுப்புராயன், தினேஷ் சுப்புராயன் ஆகியோருடன் மற்ற தொழில்நுட்பத் துறையினர் தங்கள் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
ஒன்பது இரவுகளில் நடக்கும் மயான கொல்லையில் நிகழ்ச்சியில் தொடங்கும் கதைக்கள நிகழ்வுகள். சுழலில், நிறைய சப்-பிளாட்டுகள் ஒவ்வொன்றும் பிரதான சதித்திட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இந்தத் தொடர் ஒரு சிறிய நகரத்தில் அதன் சமூக அமைப்பு, நுண் திருவிழாக்கள் மற்றும் பண்டைய தொன்மங்கள் மற்றும் கலாச்சாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளதால் ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்குகிறது, இந்த சிக்கலான விஷயத்தை திரைக்கு கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள். பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், புஷ்கர் காயத்ரி இந்த கிங் கதையை எழுதி, வலைதொடருக்கு மாற்றியமைக்கும் பணியை பிரம்மாவிடமும், அனுசரணிடமும் ஒப்படைத்து சிறப்பாகச் செய்துள்ள காரணத்தால் வேறுஒரு உலகத்திற்குள் சென்றது போன்ற பிரமை ஏற்படுத்திவிடுகிறது. இது ஒட்டுமொத்த குழுவிற்கும் கடினமான பணியாக இருந்தாலும், அதை நேர்த்தியாக கையாண்டு ரசிகர்களுக்கு ஒரு க்ரைம் த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுத்து மீண்டும் வெற்றி தயாரிப்பாளர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
இளம் காதல், திருமணத்திற்கு புறம்பான விவகாரங்கள், மறைமுக ஓரின சேர்க்கையாளர், மதிக்கப்படாத திருநங்கைகள், ஊழல் போலீசார், தோல்வியுற்ற தாய்மார்கள் இவை அனைத்தின் மூலமாகவும், புஷ்கரும் காயத்ரியும் சோசலிசம் வரை, நேர்த்தியான பாதையில் நடப்பது, நல்ல நோக்கத்துடன் அடியெடுத்து வைப்பது என அனைத்திலும் அவர்கள் கருத்துகளை தங்களால் இயன்றதைச் சரியாகச் சொல்லவும், செய்யவும் முயற்சி செய்திருக்கிறார்கள். அனைத்து நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் இவர்களில் ஒட்டு மொத்த உழைப்பிற்கு கை மேல் பலனாக வெற்றி வாகை சூடியிருக்கும் இயக்குனர்களுக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்துள்ள எட்டு தொடர்கள் நிறைந்த சுழல் பார்ப்பவர்களை தங்கள் (வெப்) வலைக்குள் இழுத்து சுழன்று அடிக்கும் சுனாமி போல் வசூலில் துவம்சம் செய்து வெற்றி வாகை சூடும்.