சீசா சினிமா விமர்சனம் : சீசா தன்னிலை மறக்கும் விபரீத விளையாட்டு மோகத்தால் அழியும் இளம் தலைமுறையினர் | ரேட்டிங்: 3/5
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் டாக்டர்.கே.செந்தில் வேலன் எழுத அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
இதில் நடராஜன் சுப்ரமணியம் – முகிலன், நிஷாந்த் ரூசோ – ஆதவன், பாடினி குமார் – மாளவிகா, நிழல்கள் ரவி – கமிஷனர், ஜீவா ரவி – கிருஷ்ணமூர்த்தி, மாஸ்டர் ராஜநாயகம் – ஆதவன் வீட்டு வேலையாள், மூர்த்தி – ஆதவன் நண்பர்,ஆதேஷ் பாலா – சப் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், இயக்குநர் அரவிந்தராஜ் – மாளவிக்காவின் தந்தை, டாக்டர். கே.செந்தில்வேலன் – டாக்டர். கே.செந்தில்வேலன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : சரண் குமார், ஒளிப்பதிவு : பெருமாள் மற்றும் மணிவண்ணன், படத்தொகுப்பு : வில்சி ஜெ.சசி, மக்கள் தொடர்பு : கார்த்திக்.
தொழிலதிபரான ஆதவன் (நிஷாந்த் ரூசோ) தனது கல்லூரி தோழியான மாளவிகாவை (பாடினி குமார்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவரது பால்ய நண்பன் மூர்த்தி மருத்துவ மனையில் எம்பால்மராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தந்தையின் மறைவிற்கு பிறகு ஆதவன், மன உளைச்சல் ஏற்பட்டு பைபோலார் டிசாடர் என்ற நோயால் அவதிப்பட்டு விடியல் மருத்துவமனையில் டாக்டர். கே.செந்தில்வேலன் தலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாள் ஆதவன் மற்றும் மாளவிகா இருவரும் காணாமல் போக வீட்டில் வேலைகாரர் (மாஸ்டர் ராஜநாயகம்) கொலையுண்டு கிடக்க, செட்டிபாளையம் காவல் நிலையத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகிலன் (நட்டி) மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் (ஆதேஷ் பாலா) தீவிரமாக விசாரணையை தொடங்குகின்றனர். காவல் நிலையத்தில் ஆதவனின் பால்ய நண்பன் மூர்த்தியையும் விசாரிக்க அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாது என கூற எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், ஒருநாள் காணாமல் போன ஆதவன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மூர்த்தியை தேடி வர,அவனுடன் தன் வீட்டிற்கு செல்கிறான். அங்கு வீட்டிற்கு காவல் இருக்கும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்குகிறான் ஆதவன். தகவல் அறிந்து அங்கு இன்ஸ்பெக்டர் முகிலன் வர இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர். இன்ஸ்பெக்டர் முகிலன் விடியல் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு, டாக்டர் செந்தில்வேலனிடம் ஆதவனைப் பற்றி விசாரிக்கிறார். அவனுடைய சிகிச்சை பற்றி அறிந்து ஜெயிலில் தனி அறையில் வைக்கிறார்.அதன்பிறகு மூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இன்ஸ்பெக்டர் மர்மம் சூழ்ந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க திணறுகிறார். ஆதவனின் மனைவி மாளவிகா யாரால் கொலை செய்யப்பட்டார்? அதற்கு என்ன காரணம்? உண்மையான குற்றவாளி ஆதவனா? யார் அந்த மர்ம நபர் என்று இன்ஸ்பெக்டர் முகிலனால் கண்டுபிடிக்க முடிந்ததா? என்ற கேள்விகளுக்கான விடையை படத்தில் காணலாம்.
இன்ஸ்பெக்டர் முகிலனாக நட்டி நட்ராஜ் படம் முழுவதும் தன்னுடைய நேர்;த்தியான ஸ்டைலில் அதிரடி விசாரணை, அழுத்தமான மிரட்டலான கம்பீரமான கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.
இரு வேறு குணாதியங்களின் கலவையான இளைஞன் ஆதவனாக நிஷாந்த் ரூசோ, தன்னுடைய மனைவி இறப்பை தாங்க முடியாமல் கதறுவது ஆகட்டும், அதன்பின் எடுக்கும் முடிவு, மனநலம் பாதிக்கப்பட்டு கதறும் இடங்களில் உணர்ச்சிகளின் குவியலாக தன் யதார்த்த நடிப்பால் அதகளம் பண்ணுகிறார்.
ஆதவனின் மனைவி மாளவிகாவாக யாக பாடினி குமார் தன் கணவனின் சிகிச்சைக்காக உதவுவது, அக்காவாக தன் தம்பியின் நிலை கண்டு கலங்குவது, அவனை திருத்த முயல்வது, அதனால் ஏற்படும் பின்விளைவு எத்தகைய பெரிய இழப்பு ஏற்பட காரணமாகிறது, பின்னர் ஏற்படும் அவல நிலையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணனாக ஆதேஷ் பாலா தன் அனுபவ நடிப்புடன் முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வருவது படத்திற்கு கூடுதல் பலம்.
ஆதவனின்; நண்பராக மூர்த்தி, கொலை செய்யப்பட்ட வீட்டு வேலைக்காரராக மாஸ்டர் ராஜநாயகன், மாளவிகாவின் தந்தையாக இயக்குனர் அரவிந்தராஜ், கமிஷனராக நிழல்கள் ரவி, ஆதவனின் உறவுக்கரார் கிருஷ்ணமூர்த்தியாக ஜீவா ரவி, விடியல் மருத்துவமனை மருத்துவராக டாக்டர். கே.செந்தில்வேலன் மற்றும் பலர் மர்ம முடிச்சுகள் நிறைந்த கதைக்களத்திற்கு மேலும் மெருகு சேர்த்துள்ளனர்.
இசை : சரண் குமார், ஒளிப்பதிவு : பெருமாள் மற்றும் மணிவண்ணன், படத்தொகுப்பு : வில்சி ஜெ.சசி இயக்குனரின் எண்ணப்படி காட்சிப்படுத்தி கை தட்டல் பெறுகின்றனர்.
தனித்துவமான த்ரில்லர் கதைக்களம், வித்தியாசமான திரைக்கதை மற்றும் அற்புதமான நடிப்பிற்காக தனித்து நின்று என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிற செய்து மறக்க முடியாத அனுபவத்தை கொடுப்பதை உறுதி செய்துள்ளார் இயக்குனர் குணா சுப்பிரமணியம். இதில் காதல் கலந்து ஆன்லைன் கேமிங் அடிமையாதலுடன் எம்பாமிங் செயல்முறை பற்றி விளக்கமாக எடுத்துரைத்துள்ளார் இயக்குனர்.ஆன்லைன் கேமிங், தீவிரமான நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டால், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பணத்திற்காக குடும்பத்தாரை கூட அழித்து, கொலை உள்ளிட்ட அவநம்பிக்கையான செயல்களைச் செய்ய சிலரைத் தூண்டும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதற்கு இணையாக எம்பாமிங் என்ற சிக்கலான முறைகளை கையாண்டு கண்ணியமான பிரியாவிடையை பெற்ற அன்பானவர்களை பதப்படுத்தும் செயல்முறையை விளக்குகிறது. இந்த தனித்துவமான இரண்டு மைய புள்ளிகள் கதையின் சாரம்சமாக வைத்து மனநலம் பாதித்தவர்களை விட விளையாட்டு மோகம் எத்தகைய பாதக செயல்களை செய்ய வைக்கிறது என்பதை புரிய வைத்து, தற்போது பரவலாக நடக்கும் சம்பவங்களை விவரித்து இதற்கான காரணத்தையும், அதற்கான நடவடிக்கைகளையும் மனநல மருத்துவரான தயாரிப்பாளர் கே.செந்தில்வேலன் சொல்வது போல் கையாள வலியுறுத்தி அழுத்தமான பதிவை கொடுத்துள்ளார் இயக்குர் குணா சுப்ரமணியம்.
மொத்தத்தில் விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் சீசா தன்னிலை மறக்கும் விபரீத விளையாட்டு மோகத்தால் அழியும் இளம் தலைமுறையினர்.