சித்தா விமர்சனம் : சித்தா பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வதையும், கண்காணிப்பதும் அவசியம் என்பதை விழிப்புணர்வோடு எச்சரிக்கையோடு உணர்வுபூர்வமாக புரிய வைத்து நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கும் படம் | ரேட்டிங்: 3/5

0
407

சித்தா விமர்சனம் : சித்தா பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வதையும், கண்காணிப்பதும் அவசியம் என்பதை விழிப்புணர்வோடு எச்சரிக்கையோடு உணர்வுபூர்வமாக புரிய வைத்து நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கும் படம் | ரேட்டிங்: 3/5

ஏடாகி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் சித்தா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.யு. அருண்குமார்.

இதில் சித்தார்த், நிமிஷா விஜயன், அஞ்சலி நாயர்,சஹஷ்ரா ஸ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம், பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்;கள்:-முகப்பு பாடல் – சந்தோஷ் நாராயணன், பாடல்கள் – திபு நைனன் தாமஸ், பின்னணி இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – பாலாஜி சுப்ரமணியம், படத்தொகுப்பு – சுரேஷ் ஏ. பிரசாத், கலை இயக்குனர் – சி.எஸ். பாலச்சந்தர், பாடல் வரிகள் – விவேக், யுகபாரதி, எஸ்.யு.அருண் குமார், ஒலி வடிவமைப்பு – வினோத் தணிகாசலம்,சண்டைப் பயிற்சி – டேஞ்சர் மணி , மக்கள் தொடர்பு-சுரேஷ் சந்திரா, டிஒன் ரேகா.

பழனியில் ப்ளஸ் டூ முடித்த பின்னர் தன் அண்ணனின் திடீர் மரணத்தால் தன் அண்ணி (அஞ்சலி நாயர்) மற்றும் அண்ணன் மகள் சுந்தரி  என்கிற சேட்டை (சஹஷ்ரா ஸ்ரீ) பார்த்துக் கொள்ளும் பொறுப்புடன் சுகாதரா அலுவல உயர் அதிகாரியாக வேலை செய்து கொண்டு அவர்களுடன் வசிக்கிறார் ஈஸ்வரன் என்கிற சித்தா (சித்தார்த்). அண்ணிக்கு தம்பியாகவும்,  அவரின் மகள் சேட்டைக்கு தந்தைக்கு நிகராக அன்பு செலுத்தி சேட்டையை பார்த்துக் கொள்கிறார். இதனிடையே தான் வேலை செய்யும்  சுகாதார அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளராக தன் பள்ளிகால காதலியான சக்தி (நிமிஷா விஜயன்) வந்து சேர்கிறார். அவர்களின் காதல் மீண்டும் ஊடலுக்கு பிறகு காதல் கைகூடுகிறது.  குழந்தைகளிடம் மிகுந்த அன்பு செலுத்தும் சித்தா தன் நண்பனின் அண்ணன் மகள் பொன்னியையும் பாசத்தோடு பழகுகிறார்.  இதனிடையே சேட்டையின் வகுப்பில் படிக்கும் தோழி பொன்னி (ஆபியா தஸ்னீம்) காணாமல் போகிறார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வரும் பொன்னியால் சித்தாவிற்கு பெரிய சிக்கல் வருகிறது. சிறுமியான பொன்னியை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து விட, அந்த பழி சித்தா மீது விழுகிறது. போலீஸ் நிலையத்திலும், தன் நண்பனின் வீட்டிலும் அவமானப்படும் சித்தா, தான் நிரபராதி என்று புரிய வைத்து பழியிலிருந்து மீண்டு வருகிறார். அதன் பின் தொடர்ச்சியாக பல குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து விடும் சைக்கோ கொலைகாரனை போலீஸ் வலை வீசி தேட ஆரம்பிக்கிறது. இந்த சமயத்தில் பேரடியாக சேட்டை காணாமல் போகிறார். அண்ணியும், சித்தாவும் நிலை குலைந்து போகின்றனர். சேட்டையை தேடி சித்தா தன் போலீஸ் நண்பருடன் தேட ஆரம்பிக்கிறார். இறுதியில் சித்தா சேட்டையை கண்டுபிடித்தாரா? சேட்டை யாரிடம் மாட்டிக் கொண்டாள்? சைக்கோ கொலைகாரனிடமிருந்து உயிரோடு சேட்டை மீட்கப்பட்டாளா? யார் கடத்தியது? கொலையாளியை கண்டு பிடித்தார்களா? என்பதே பதற செய்யும் க்ளைமேக்ஸ்.

ஈஸ்வர் என்கிற சித்தாவாக சித்தார்த் பொறுப்புள்ள இளைஞராக தன் அண்ணன் குடும்பத்தின் மேல் பாசத்தோடும், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை முதல் காட்சியிலேயே புரிய வைத்து விடுகிறார். எந்தப் படத்திலும் காட்சிப்படுத்தப்படாத கண்ணியமான சித்தப்பா என்கிற ஸ்தானத்தை உயர்வாக தன் நடிப்பில் மூலம் பதிய வைத்துள்ளார் சித்தார்த். வீண் பழியை சுமக்கும் போது அவமானத்தால் ஏற்படும் மனவலி, மனஉளைச்சலை தத்ரூபமாக தன் முகபாவனையில் பிரதிபலித்துள்ளார்.ஒவ்வொரு காட்சியிலும் தன் அண்ணன் மகளுக்காக மெனக்ககெடலும், கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலையில் காணாமல் போகும் போது அதிர்ச்சியும், தேடுதலின் போது இறந்த குழந்தையை அடையாளம் காட்டச் செல்லும் போது அது சேட்டை இல்லை என்று உறுதியான மனப்பான்மையுடன் அடித்து சொல்லும் சித்தார்த்தின் இயல்பான நடிப்பு கண் கலங்கச் செய்து விடுகிறது. இறுதியில் சைக்கோ கொலைகாரனை பழி வாங்க புறப்படும் போது காட்டும் ஆக்ரோஷம், கண்டுபிடித்த பின்னர் பாலியல் வன்கொடுமையால் சேட்டை படும் துன்பத்தை கண்டு பொங்கி அழுவது என்று மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார். இந்த படத்தில் முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் சித்தார்த்திற்கு நடிப்பிற்காக நிச்சயமாக நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் படமாகவும், விருதுகள் வாங்கிக் கொடுக்கும் படமாகவும் அமையும்.

காதலியாக நிமிஷா விஜயன் சித்தார்த்திடம் கடுமையாக நடந்து கொள்ளும் போதும், சித்தார்த் தொட வரும் போது காட்டும் உணர்ச்சிகள் ஏதோ மர்மம் இருப்பதை முதலிலேயே உணர்த்தி விடுகிறார். தன்னுடைய இயல்பான நடிப்பாலும் வசனத்தாலும் வசீகரிக்கிறார்.

அண்ணியாக அஞ்சலி நாயர், தன் கணவனின் தம்பியை தன் பிள்ளையாக பாவிக்கும் கதாபாத்திரம். சித்தார்த்தின் மீது பழி சுமத்தும் போது கதறும் கதறல், அதன் பின்னர் தன் மகளுக்கு அறிவுரை கூறி புரிய வைக்கும் போது சித்தார்த் பார்க்கும் பார்வையில் ஏற்படுத்தும் சங்கடம் என்று படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

சேட்டையாக சஹஷ்ரா ஸ்ரீ எட்டு வயது குழந்தையாக தேர்ந்த நடிப்பு அசத்துகிறது. சித்தாவிடம் பாசத்தை காட்டும் போதும், சைக்காவிடம் மாட்டிக் கொண்டு பயத்துடன் அழும் போதும் நடிப்பால் மிரள வைத்து பதற வைத்துவிடுகிறார். பொன்னியாக எஸ்.ஆபியா தஸ்னீம் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து பங்களிப்பை கொடுத்திருப்பது சிறப்பு. இருவரும் இந்த படத்தில் யதார்த்தமான நடிப்பு படத்தின் வெற்றியில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

இவர்களுடன் போலீஸ் நண்பராக பாலாஜி, போலீஸ் பெண் உயர்அதிகாரி, சித்தார்த்தின் நண்பர்கள் என்று ஒவ்வொருவரும் புதுமுகங்கள் என்றாலும் அபரிதமான அழுத்தமான நடிப்பு படத்திற்கு பலம். இவர்களுடன் சைக்கோ வில்லனாக வரும் நபர் நல்லவராக காட்டிக் கொண்டு, கெட்டவராக வலம் வந்து சட்டென்று மாறும் மனோநிலையுடன் காட்சிகளுக்குகேற்றவாறு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இறுதிக்காட்சியில் குழந்தை சேட்டையை காப்பாற்றும் ஆட்டோவில் வரும் பெண்மணியின் பங்களிப்பு படத்தில் கைதட்டல் பெறுகிறது.

விவேக், யுகபாரதி, எஸ்.யு.அருண் குமார் ஆகியோரின் பாடல் வரிகளுக்கேற்ற திபு நைனன் தாமஸ் இசையும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்தின் மெய் சிலிர்க்கும் காட்சிகளுக்கும், சம்பவங்களுக்கும் உறுதியான பக்கபலமாக இருந்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

ஒவ்வொரு காட்சிகளையும் திக் திக் நிமிடங்கள் வரை தன் காட்சிக் கோணங்களால் திக்குமுக்காட வைத்து விட்டார் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்.

படத்தொகுப்பு – சுரேஷ் ஏ. பிரசாத் விறுவிறுப்பான கச்சிதமான எடிட்டிங்.

சித்தப்பாவின் சுருக்கம் மட்டுமல்ல (சித்தா)ர்த்தின் சுருக்கமான பெயருக்கு பொருத்தமான டைட்டில் சித்தா. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராட்சசன், போர் தொழில் போன்ற படங்கள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிகரமாக ஒடியதோ, அதே போன்று சித்தா படம் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை காட்சிகளில் விவரிக்காமல் காட்சிகளின் வசனங்களிலேயே காட்;டி அதன் கொடூரத் தன்மையை புரிய வைத்து அடுத்தது என்ன நடக்கும் என்ற பதட்டத்தை ஏற்படுத்தி அழுத்தமான பதிவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.யு. அருண்குமார். குழந்தைகளை சுலபமாக ஏமாற்ற கையாளப்படும் பரிசுப்பொருட்கள், விரும்பும் உணவுகள் குறிப்பாக முக்கியமானது மொபைல் போனின் தாக்கம் எவ்வாறு குழந்தைகளை ஈர்க்கிறது அதனால் அவர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் சைக்கா மனிதர்களால் அவர்களின் எதிர்காலமே சூன்யமாக மாறிவிடும் அபாயத்தையும் உயிர் பலியையும் தத்ரூபமான காட்சிக் கோணங்களால் புரியவைத்து அதன் அணுகுமுறையில் உணர்;த்தியிருக்கும் உணர்வுபூர்வமான படம். பார்ப்பவர்களுக்கு காட்சியில் நெருடலோ, முகம் சுளிக்கும் வகையிலோ காட்சிப்படுத்தாமல் இயல்பாக காட்சிகளின் வீரியத்தை விரசம் இல்லாமல் காட்டி அசத்தியுள்ளார் இயக்குனர் எஸ்.யு. அருண்குமார். இறுதியில் குற்றவாளியை பிடித்து தண்டனை தருவதற்கு போலீஸ் இருக்க, பழி வாங்குவதை விட்டுவிட்டு  கடினமான சூழ்நிலையில் குடும்பத்தை பார்த்துக் கொண்டு உறுதுணையாக ஆதரவாக இருப்பதே சிறந்தது என்பதை உணர்த்தும் படம். கச்சிதமான நடிகர்களின் தேர்வு, திரைக்கதையில் விறுவிறுப்பு, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, யதார்த்தமான கதைக்களம், சமூக அக்கறையோடு எழுதி இயக்கியிருக்கும் எஸ்.யு. அருண்குமாரின் கடின உழைப்பு படத்திற்கு பெரிய ப்ளஸ்ஸாக இருந்து வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. நிச்சயம் அருண்குமார் இந்த படத்தின் மூலம் கவனிக்கப்படும் இயக்குனராக வலம் வருவார் வாகை சூடுவார்.

மொத்தத்தில் ஏடாகி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் சித்தா பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வதையும், கண்காணிப்பதும் அவசியம் என்பதை விழிப்புணர்வோடு எச்சரிக்கையோடு உணர்வுபூர்வமாக புரிய வைத்து நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கும் படம்.