சலார் பார்ட் 1 – சீஸ் பயர் சினிமா விமர்சனம் : நட்பின் அடையாளத்துடன் பலமான ராஜ்ஜியத்திற்கும், அரியாசனத்திற்கும் நடக்கும் அக்ஷனில் அதிர வைக்கும் யுத்தம் | ரேட்டிங்: 3.5/5
ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் சலார் பார்ட் 1 : சீஸ் பயர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல்
இதில் பிரபாஸ் – தேவா-சலார், பிருத்விராஜ் சுகுமாரன் – வர்தராஜா-வர்த மன்னார், ஸ்ருதி ஹாசன் – ஆத்யா, ஜெகபதி பாபு -ராஜ மன்னார், பாபி சிம்ஹா – பாரவா, ஈஸ்வரி ராவ் – தேவாவின் தாய்,ஸ்ரேயா ரெட்டி – ராதா ராம மன்னார், ஜான் விஜய் – ரங்கா, மைம் கோபி – பிலால் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :இசை -ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு – புவன் கவுடா, எடிட்டர் – உஜ்வல் குல்கர்னி, தமிழ்நாடு வெளியீடு – ரெட் ஜெயண்ட் மூவீஸ், பிஆர்ஒ-யுவராஜ்.
தேவா கான்சாரை விட்டு வெளியேறுவதை படத்தின் ஆரம்பத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. கான்சாராவில் தேவாவும் ராஜ மன்னாரின் இரண்டாவது மனைவியின் மகன் வர்தராஜாவும் சிறு வயதிலிருந்தே உயிர் நண்பர்கள். பத்து வயதில் தேவா – சலார் (பிரபாஸ்) தனது உயிர் நண்பன் வர்தராஜா (ப்ரித்விராஜ்)க்காக எதிரிகளுடன் சண்டையிட்டு நண்பனுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கிறார். இதனால் தேவாவின் அம்மாவுடைய (ஈஸ்வரி ராவ்) உயிரை, தன் தந்தை ராஜ மன்னாரின் (ஜெகபதி பாபு) கட்டளையையும் மீறிக் காப்பாற்றுகிறான் வரதராஜா. கிராமத்தை விட்டு; தேவாவும் அம்மா ஈஸ்வரிராவும் வெளியேற ‘நீ கூப்பிட்டா நான் வருவேன்” என தன் நண்பன் வரதாவிற்கு சத்தியம் செய்துவிட்டு கான்சாரை கிராமத்தை விட்டு வெளியேறுகிறான் தேவா. அதன் பின் பல இடங்களில் ஏற்பட்ட இன்னல்களால் வசிக்குமிடத்தை மாற்றிக் கொண்டு இறுதியாக அசாமில் உள்ள டின்சுகியா கிராமத்தில் நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் பள்ளி நடத்தும் தன் தாயுடன் (ஈஸ்வரி ராவ்) மெக்கானிக் வேலை செய்து கொண்டு தேவா (பிரபாஸ்) ஏழு ஆண்டுகளாக வசிக்கிறார். அவரது தாயார் தேவாவைக் கடுமையாகக் கண்காணித்து, தன் மகன் எந்த மோதலுக்கும் செல்லாமல் வன்முறையில் இருந்து பாதுகாக்கிறார். தாய்க்கு கொடுத்த வார்த்தையின்படி தேவா தனது உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி தனது தாயுடன் கடந்த காலத்தை மறந்து சாதாரண வாழ்க்கை வாழ்கிறார். 2017 ஆம் ஆண்டில் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்) தனது தந்தை கிருஷ்ணகாந்துக்குத் தெரியாமல் நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வரும் போது தந்தையை பழி வாங்க காத்துக் கொண்டிருக்கும் ஓபுலம்மாவிடம் (ஜான்சி) மாட்டிக் கொள்கிறார். ஆத்யா கடத்தல் முயற்சியிலும் பெரும் ஆபத்தில் இருக்கும் ஆத்யாவை (ஸ்ருதி ஹாசன்) காப்பாற்ற்p ஈஸ்வரிராவிடம் அடைக்கலமாக நெருங்கிய நண்பர் பிலால் தங்க வைக்கிறார். இதனிடையே ஆத்யாவை பிடித்து வர ஒபுல்லா ஆட்களை அனுப்ப, தப்பிக்க போராடும் ஆத்யாவை தாய் ஈஸ்வரிராவ் காப்பாற்றுமாறு கட்டளையிட தேவா அடியாட்களை அடித்து நொறுக்கி ஆத்யாவை காப்பாற்றி பிலாலிடம் அனுப்புகிறார். அங்கே தேவா இருப்பதை அறிகிறார் ஒபுலம்மா அதிர்ச்சியாகி இத்தகவலை கான்சாரில் இருக்கும் ராஜ மன்னாரின் மகள் ராதா ராமமன்னாரிடம் (ஸ்ரேயா ரெட்டி) தெரிவிக்கிறார். கான்சாரில் தேவாவை தேடிக் கொண்டிருக்கும் காரணம் என்ன? என்பதை சஸ்பென்சாக வைத்து விட்டு கான்சாரில் நடக்கும் சம்பவங்களை கதை விவரிக்கிறது. கொந்தளிப்பான கான்சார் நகரத்தில், ராஜா மன்னார் (ஜெகபதி பாபு) மகனான வர்தாவை (பிருத்விராஜ் சுகுமாரன்) தனது வாரிசாக மாற்றத் தயாராகிறார். இந்த முடிவை எதிர்த்து மன்னாரின் அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களால் திட்டமிடப்பட்ட ஒரு ஆபத்தான சதியை ஏற்படுத்த தயாராகின்றனர். குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டுப் படைகள் அமர்த்தப்படுவதால் கான்சார் போர்காலத்திற்கு தயாராகிற நிலை உருவாகிறது. ராஜா மன்னாரின் மகளும் கான்சரின் பொறுப்பாளருமான ராதா, பேரரசின் 101 பழங்குடியினரின் பிரதிநிதிகளால் வாக்களிக்க அழைப்பதற்கு முன் ஒன்பது நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார். இந்த தருணத்தில் தன் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலின் கீழ், வர்தா தனது சிறு வயது உயிர் நண்பரான தேவாவை மீண்டும் அழைக்கிறார். தேவா ஆபத்தான பணியில் இறங்கி வர்தாவை காப்பாற்றுகிறாரா? போர் நிறுத்தம் ஏற்படுமா? அல்லது இரத்தக்களரி ஏற்படுமா? என்பது ஒரு புறம் இருந்தாலும், அதன் பின் தேவாவிற்கும் வர்தராஜாவிற்கும் ஏற்படும் மோதல் என்ன? உயிர் நண்பர்கள் பகையாளியானதென்ன? கான்சார் நண்பனின் சலாராக இருந்த தேவாவிற்கு பகை கிராமாக மாறியது ஏன்? என்பதை இரண்டாம் பாகத்திற்கான அடையாளமாக முக்கிய திருப்பமாக முடித்துள்ளனர்.
தாய்க்காக தேவாவாகவும் நண்பனுக்காக சலாராக உருமாறும் பிரபாஸ் கதாபாத்திரம் அற்புதம். பொறுமை, அமைதி, வெறித்த பார்வை, எதிர்த்து பேசாத, திருப்பி அடிக்காத தேவாவாக இருக்க அதன் பின்னர் தாயின் கட்டளைக்கு பின் உருமாறும் தெறிக்க விடும் சலாராக அதிரடி ஆக்ஷன் காட்சிகள் திறமையான அனுபவத்தையும், உணர்ச்சிகரமான தருணங்களையும் ஒருங்கிணைத்து அசாத்திய துணிச்சல் நிறைந்த ஆக்ரோஷ இளைஞனாக பிரபாஸ் ஜொலிக்கிறார். குறைவான வசனம் ஆனால் அதை ஆக்ஷனில் அதிரடியான நிறைவாக பூர்த்தி செய்துள்ளார். வெல்டன்.
வர்தராஜா என்கிற வர்த மன்னாராக பிருத்விராஜ் சுகுமாரன் அரசியல் சூறாவளியில் சிக்கிய ஒரு இளம் வாரிசின் பாதிப்பையும் உறுதியையும் சித்தரிக்கிறார், படம் விரிவடையும் போது, அவரது அழுத்தமான நடிப்பு கதைக்கு சிக்கலான ஒரு தருணத்தில்; கதாபாத்திரம் வலிமையையும் வீரத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஸ்ருதி ஹாசன், ஆத்யாவாக தனது பாத்திரத்தில், சமநிலை உணர்வைக் கொண்டு வந்து பெரும்பாலும் முதல் பாதி மற்றும் இரண்டாவது சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் இவரை முன்னிருத்தி தான் கதை பயணிக்கிறது.
ஜெகபதி பாபு கம்பீரமான ராஜ மன்னாராகவும், பாபி சிம்ஹா சதி திட்டத்தின் முன்னோடி பாரவாவாக, ஈஸ்வரி ராவ் கடிவாளம் போடும் ஆக்ரோஷ தேவாவின் தாய், ஸ்ரேயா ரெட்டி பழி வாங்க துடித்தாலும், பொறுமை காக்கும் மகள் ராதா ராம மன்னார், ஜான் விஜய் ஒவர் ஆக்டிங்கில் ரங்காவாக, மைம் கோபி திறமையாக காயை நகர்த்தும் நண்பர் பிலால் என்று அவரவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தை திறம்பட கையாண்டு கதையின் நகர்வுக்கும் திரைக்கதைக்கும் உயிர் கொடுத்துள்ளனர்.
இயக்குனர் பார்வைக்கேற்றவாறு தன் காட்சிக்கோணங்களால் நிலப்பரப்புகளின் பிரம்மாண்டத்தையும், ஆக்ஷனின் நுணுக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியதோடு காட்சிக்கு காட்சி பிரமிக்க வைக்கும் தலைசிறந்த படைப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் புவன் கவுடா.
ரவி பஸ்ரூரின் இசையும்,ஒலி வடிவமைப்பு மற்றும் ஸ்கோர் படத்தை மேலும் உயர்த்தி, காட்சிக்கு காட்சி முழுமையாக நிறைவு செய்கிறது.
எடிட்டர் – உஜ்வல் குல்கர்னியின் பணி அளப்பறியது. எதை விடுவது, எதை கொடுப்பது என்பதில் நிச்சயமாக தெரிந்து தெளிவாக கொடுத்துள்ளார். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பயனுள்ளதாக படத்தின் காட்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.
சலார் என்றால் பெர்ஷிய மொழியில் இராணுவத்தின் தளபதி என்று பொருள், பல அர்த்தங்களைக் கொண்ட இந்த பெயரில் ஒரு பணியை கொடுத்தால் நல்லதோ கெட்டதோ அதை முடித்து விட்டுத்தான் வெற்றிகரமாக திரும்புவான் என்பதாகும்.நேர்த்தியுடன் இயக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் அதிரடி ஆர்வலர்களுக்கு ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை கொடுப்பதில் உறுதி செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது. கதை திறமையாக பிணைக்கப்பட்டு விதிவிலக்கான திறமையுடன் படைக்கப்பட்டிருக்கும் கதாநாயகன், சவால்களை சந்தித்து, தளராத வலிமையுடன் தடையின்றி எதிரிகளை துவம்சம் செய்வதும் ஆழமான, உணர்ச்சிகரமான தருணங்களுக்கு இடையே படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. துணை கதாபாத்திரங்கள் நன்கு சித்தரிக்கப்பட்டு மோதல்களை மறக்கமுடியாததாக ஆக்குகிறது. இடைவிடாத ஆக்ஷனால் பார்வையாளர்களை திணறடிக்காமல் அவர்களை ஈடுபடுத்தும் வகையில் படம் அதன் வேகத்திலும் சிறந்து விளங்கி பொழுதுபோக்குடன் உணர்வுபூர்வமாகவும், நட்பின் தாக்கத்தை ஆழமாக நேர்த்தியாக வடிவமைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தத் திரைப்படம் அதிகாரம், விசுவாசம், துரோகம் மற்றும் கௌரவம், தலைமை உரிமை, அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட விசுவாசங்களின் சிக்கல்களை ஆராய்ந்து அதிகாரப் போராட்டங்கள் பற்றிய அழுத்தமான பதிவை வெளிப்படுத்தியிருப்பதில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார் பிரசாந்த் நீல்.
மொத்தத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் சலார் பார்ட் 1 : சீஸ் பயர் நட்பின் அடையாளத்துடன் பலமான ராஜ்ஜியத்திற்கும், அரியாசனத்திற்கும் நடக்கும் அக்ஷனில் அதிர வைக்கும் யுத்தம்.