சர்தார் விமர்சனம்: தண்ணீரை வணிகமயமாக்கும் மாஃபியாக்களை அழிக்கவும் மக்களை காப்பாற்றவும் புறப்படும் உளவாளியின் கதை | ரேட்டிங்: 4/5

0
1066

சர்தார் விமர்சனம்: தண்ணீரை வணிகமயமாக்கும் மாஃபியாக்களை அழிக்கவும் மக்களை காப்பாற்றவும் புறப்படும் உளவாளியின் கதை | ரேட்டிங்: 4/5

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து சர்தார் படத்தை இயக்கியிருக்கிறார் பி.எஸ்.மித்ரன்.
இதில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, யூகி சேது, முனிஷ்காந்த், யோக் ஜெப்பி, முகம்மா அலி பைக், இளவரசு, மாஸ்டர் ரித்விக், அசினாஷ், பாலாஜி சக்திவேல், சுவாமிநாதன், ஆதிரா பாண்டிலட்சுமி, டிஎஸ்ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை : ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ், எடிட்டிங் : ரூபன், சண்டைக்காட்சி : திலீப் சுப்பராயன்,கலை:கதிர், எழுத்து: எம்.ஆர்.பொன் பார்த்திபன், பிபின் ரகு, ரோஜூ, ஜீவீ,  நடனம் : ஷோபி பால்ராஜ், பாடல்கள்-யுகபாரதி, ஏகாதசி, அறிவு, ரோகேஷ், ஜிகேபி, உடை:பிரவீன் ராஜா, தயாரிப்பு நிர்வாகி:கிருபாகரன் ராமசாமி, கே.வெல்லதுரை, தயாரிப்பு மேற்பார்வை -ஏபி.பால்பாண்டி, பிஆர்ஒ: ஜான்சன்.

1988 இல் நாடக கூத்து பட்டரை கலைஞராக இருக்கும் சர்தார் (கார்த்தி). இவருடைய குடும்பத்தில் இரண்டு அண்ணன்கள் ராணுவத்தில் பணிபுரிய கார்த்தி மட்டும் உளவுத் துறையில் பணியாற்றுகிறார். இவருக்கு வந்த ரகசிய வாய் மொழி உத்தரவின்படி வங்கதேசத்தில் கப்பலில் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை உளவுத் துறையின் உளவாளியான சர்தார் (கார்த்தி) சுட்டுக்கொல்கிறார். இதனால், சர்தாரை இந்திய அரசு தேசத்துரோகியாக அறிவிக்க சர்தார் இந்தியாவிற்குள் வராமல் தானாகவே ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டு வங்கதேச சிறைக்குச் செல்கிறார். இவருக்கு இந்தியாவிலிருந்து முக்கிய நபராக இருப்பவரிடமிருந்து அழைப்பு வரும் வரை கைதியாகவே காலத்தை தள்ளுகிறார்.இந்தியாவில் சர்தார் காணாமல் போனவராகவே கருதப்படுகிறார். அதே சமயம் தேசத்துரோகி என்று இந்திய அரசு அறிவித்தவுடன், சர்தாரின் குடும்பமே தற்கொலை செய்து கொள்கிறது. இதில் உயிரோடு இருக்கும் சர்தாரின் மகன் விஜய் பிரகாஷ் ( கார்த்தி) மட்டும் போலீசாக இருக்கும் முனீஷ்காந்த் எடுத்து வளர்கிறார். இருந்தாலும் தேசதுரோகியின் மகன் என்ற அவப்பெயருடன் போராடி காவல் துறை அதிகாரியாக பணியில் சேர்க்கிறார். தன்னுடைய அவப்பெயரை மறைக்க பல நல்ல காரியங்கள், பலவழக்குகளை முடித்து கொடுத்து ஊடகங்களில் நல்ல பிம்பத்தை உருவாக்கி விளம்பரப்பிரியராக வாழ்கிறார். இதன் மூலம் காவல் துறையின் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பலமுறை ட்ரெண்டாக வைத்து வைரலாக்கி விடுகிறார். இதனிடையே விஜய் பிரகாஷ் (கார்த்தி) தன் வழக்கறிஞர் காதலி ராஷி கன்னா மூலம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.  ராஜ் பவனில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் காதலி ராஷி கன்னாவுடன் வரும் லைலா உளவுத் துறையின் முக்கிய ஆவணத்தை திருடி விட்டார் என்று  கோணத்தில் விஜய் பிரகாஷ் விசாரிக்க தொடங்குகிறார்.அதன் பின் கடற்கரையில் லைலா பிணமாக மீட்கப்படுகிறார். இதற்கு காரணம் யார் என்பதை ஆராயும் போது இந்தியாவில் ஒன் லைன் ஒன் பைப்- ஒரே நாடு ஒரே குழாய்  என்ற தண்ணீர் திட்டத்தை செயல்படுத்தும் இந்திய அரசின் ஆலோசகர் ரத்தோhர்(சங்கி பாண்டே) என்பதும் இவருடன் தொடர்புடைய தனது தந்தை உளவாளி  காணாமல் போன சர்தாரின் உண்மை ரகசியங்களை விஜய் பிரகாஷ் தெரிந்து கொள்கிறார். அதே சமயம் பங்களாதேஷ் சிறையில் 32 ஆண்டுகள் கழித்து சர்தார் எதிரிகளிடமிருந்து தப்பித்து இந்தியா வருகிறார். அதற்கான காரணம் என்ன? லைலாவிற்கும் தண்ணீர் திட்டத்திற்கும் சம்பந்தம் என்ன?, தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சர்தார் ஏன் கொன்றார்?  சர்தார் ரத்தோரின் தண்ணீர் திட்டத்திற்கு ஏன் எதிர்ப்பை தெரிவிக்கிறார்? இறுதியாக, சர்தாரும்,விஜய் பிரகாஷ_ம் சேர்ந்து ஒரே நாடு ஒரே குழாய் என்ற தண்ணீர் திட்டத்தை தடுத்து நிறுத்தினார்களா? அயல்நாட்டு சதியை முறியடித்தார்களா? என்பதே பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த க்ளைமேகஸ்.

கார்த்தி அப்பா சர்தாராகவும், மகன் விஜய் பிரகாஷாகவும் இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்தி பிரமாதப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தந்தை உளவாளி கேரக்டரில் இளமையில் ஆக்ரோஷம் நிறைந்த முரட்டு இளைஞனாகவும், வயதான தோற்றத்தில் கைகள் நடுங்க சண்டை போடும் விதத்தை கச்சிதமாக செய்துள்ளார். உளவாளியாக இருப்பவர்களின் வாழ்க்கை, மனநிலையை தத்ரூபமாக வெளிப்படுத்தி கை தட்டல் பெறுகிறார். அதே சமயம் கார்த்தி மகன் கதாபாத்திரத்தில் காவல் அதிகாரியாக துறுதுறுவென்று காரியங்களை சாதித்து விளம்பரப்படுத்தி அதகளமாக செண்டிமெண்ட் டச்சுடன் பேசி மனதை கவர்கிறார்.காதல், நடனம்,சண்டை ஆகியவற்றில் தனித்து நிற்கிறார்.

கதாநாயகியாக ராஷி கண்ணா வழக்கறிஞர் வேடத்திலும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, முனிஷ்காந்த்,லைலா, யூகி சேது, முனிஷ்காந்த், யோக் ஜெப்பி, முகம்மா அலி பைக், இளவரசு, மாஸ்டர் ரித்விக், அசினாஷ், பாலாஜி சக்திவேல், சுவாமிநாதன், ஆதிரா பாண்டிலட்சுமி, டிஎஸ்ஆர் ஆகியோர் இந்த படத்தின் அசத்தலான காட்சிகளுக்கு உத்திரவாதமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை மற்றும் பின்னணி இசையால் பல காட்சிகளுக்கு ஜீவநாடியாக இருந்து உயிர் கொடுத்துள்ளார்.

ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, காட்சிக் கோணங்களில் அசாத்திய நம்பிக்கையுடன் கையாண்டு, விறுவிறுவென்று  சண்டைக்காட்சிகள், பிரமாண்ட தண்ணீர் திட்ட தொழிற்சாலை, உளவுத் துறையின் செயல்பாடு, இரு வேறு காலகட்டங்களின் வேறுபாடுகள் என்று பார்த்து பார்த்து சிறப்பாக செய்திருப்பது பாராட்டுக்குரியது.

ரூபனின் எடிட்டிங் கச்சிதம். கலை இயக்குனரின் அட்டகாசமான அரங்க அமைப்புகள், திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம்.

இந்திய உளவுத்துறையில் பணியாற்றும் உளவாளியின் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்கள், சந்திக்கும் இடர்பாடுகள், குடும்பத்தின் அவலநிலை, தாய்நாட்டிற்காக அர்பணிக்கும் திறன் ஆகியவற்றை விவரித்து, அசத்தலான திரைக்கதை அமைத்ததுடன் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்பனை செய்வதால் எற்படும் ஆபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு கூடிய எச்சரிக்கையுடன் நல்ல கருத்துக்கள் நிறைந்த படமாக லாஜிக் பார்க்காமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் மித்ரன்.

மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் சர்தார் தண்ணீரை வணிகமயமாக்கும் மாஃபியாக்களை அழிக்கவும் மக்களை காப்பாற்றவும் புறப்படும் உளவாளியின் கதை.