சந்திரமுகி 2 திரைப்பட விமர்சனம் : சந்திரமுகி 2 அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் ரசித்து மகிழலாம். | ரேட்டிங்: 3/5
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பி.வாசு.
இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத்,வடிவேலு,ராதிகா சரத்குமார்,லட்சுமி மேனன்,மஹிமா நம்பியார், ராவ் ரமேஷ், சுரேஷ் மேனன், விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, சுபீக்ஷா,சாய் ஐயப்பன், சத்ரூ,கார்த்திக் சீனிவாசன்,சி.ரங்கநாதன், தேவி,பாவனா,பேபி மானஸ்வி,மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா
தொழில்நுட்ப கலைஞர்கள் :இசை – எம்.எம்.கீரவாணி, ஒளிப்பதிவாளர் – ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் – தோட்டா தரணி, எடிட்டிங் – ஆண்டனி ,பாடலாசிரியர்கள் – யுகபாரதி – மதன் கார்க்கி- விவேக் – சைத்தன்ய பிரசாத், நடன பயிற்சி – கலா, தினேஷ், பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா, ரவி வர்மா, ஓம் பிரகாஷ், லைக்கா புரொடக்ஷன்ஸ் தலைமை – ஜி.கே.எம்.தமிழ்குமரன், மக்கள் தொடர்பு – யுவராஜ்
பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) தன் சொந்த பந்தங்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். அவருடைய முதல் மகள் காதலனுடன் ஓடிப்போய் கலப்பு திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினரின் கோபத்திற்கு உள்ளாகி ஒதுக்கி வைத்து விடுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, ஒரு விபத்தின் காரணமாக, அவரது மகளும் மருமகனும் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இறக்கின்றனர். இவர்களும் செல்வந்தர்கள் என்பதால் அனாதையான குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு பாண்டியன் (ராகவா லாரன்ஸ்) ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ரங்கநாயகியின் இரண்டாவது மகள் திவ்யா(லட்சுமி மேனன்) விபத்துக்குள்ளாகி நடக்க முடியாமல் வீல் சேரில் வாழ்க்கை முடங்கி விடுகிறது. அதன் பிறகு பல்வேறு துர்சம்பவங்கள், பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ரங்கநாயகி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் குல தெய்வத்துக்கு ஒரு பெரிய பூஜை செய்ய வேண்டும், என்று குடும்ப ஆன்மீக குரு (ராவ் ரமேஷ்) அறிவுறுத்துகிறார். அந்த பூஜையில் ரங்கநாயகி ஒதுக்கி வைத்திருக்கும் மகளின் குழந்தைகளையும் பூஜையில் பங்கு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி அப்பொழுது தான் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் என்று கூறுகிறார். அவர்கள் பூஜை செய்ய வேண்டிய குலதெய்வகோவில் வேட்டையன் அரண்மனைக்கு அருகில் உள்ளதால் குடும்பம் வேட்டையபுரம் அரண்மனையில் தங்கி வழிபாடு செய்ய பயணம் மேற்கொள்கின்றனர். மகளுக்கு பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆன்மீக குரு கூறியதால், இந்தக் குழந்தைகளும் அவர்களது கார்டியன் பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) அரண்மனைக்கு வருகின்றனர். அந்த அரண்மனைக்கு முருகேசன் (வடிவேலு) சொந்தக்காரர் என்பதால் அரண்மனையை ரங்கநாயகியின் குடும்பத்திற்கு குத்தகைக்கு விடும் போது சந்திரமுகியின் பழி தீர்க்கும் ஆவி இருப்பதைப் பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருக்கிறார். ஆனால் ரங்கநாயகி மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டின் தெற்கு நோக்கி செல்ல வேண்டாம் என்று மட்டும் எச்சரிக்கிறார். அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்கும் அவர்களை, தங்கள் குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்கிறார் ஒரிஜினல் சந்திரமுகி (கங்கனா). இதனை கண்டுபிடிக்க பாண்டியன் களமிறங்குகிறார். அதன் பிறகு அரண்மனையில் வினோதமாக சம்பவங்கள் நடக்கின்றன. பாண்டியன் வேட்டையன் யார், என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடித்தாரா? வேட்டையனுக்கும் சந்திரமுகிக்கும் இருக்கும் பகை என்ன? ரங்கநாயகி குடும்பத்தில் வேட்டையன் மற்றும் சந்திரமுகி ஆவி யாரை ஆட்கொண்டது? சந்திரமுகியை தடுத்து ரங்கநாயகியின் குடும்பம் குலதெய்வம் கோயிலில் பூஜை செய்ததா என்பதே சந்திரமுகி 2 படத்தின் க்ளைமேக்ஸ்.
பாண்டியன், வேட்டையன் என்ற இரு வேடங்களில் தனித்துவமான நடிப்பை வேறுபடுத்தி தன் நடை, உடை பாவனையில் வித்தியாசத்தை கொண்டு வந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். ஏற்கனவே இப்படிப்பட்ட படங்களில் நடித்துள்ளதால் வேட்டையன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவகையில் ஆக்ஷன், விறுவிறு நடை, கூர்மையான பார்வை என்று செங்கோட்டையன் எவ்வாறு வேட்டையனாக மாறும் தோற்றம் என்று அசத்தலுடன் நடித்துள்ளார். முதல் காட்சியிலேயே குழந்தைகளை காப்பாற்றுவது, காதலியை கோலம் போடும் போது தூக்குவது என்று பழைய டிராக்குகளை கொடுத்து மாஸ் எண்ட்ரியுடன் வருகிறார்.
தேசிய விருது வென்ற இந்தி நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக அழகிலும், நடனத்திலும் வசீகரிக்கிறார். சந்திரமுகி பயந்த சுபாவம் கொண்டவளை ஆக்ரோஷ மங்கையாக மாறுவதும், இவரின் அழகில் மயங்கி அடையத் துடிக்கும் வேட்டையனை எவ்வாறு எதிர் கொண்டு பழி வாங்குகிறார் என்பதை துள்ளும் நடனத்திலும், சண்டைக் காட்சிகளிலும் சரி நிகரான பங்களிப்பு படத்திற்கு உயிர் நாடி.
சந்திரமுகி பாகம் ஒன்றில் ஒரிஜினலில் ரஜினியும் வடிவேலுவும் செய்யும் காமெடி ரசிக்க வைத்தது போல் இதன் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு செய்யும் காமெடி டிராக்குகள் கொஞ்சம் ஒவர் டோசாக இருப்பதும், பழைய பார்மூலாவை பின்பற்றி தன் பாடிலேங்குவேஜ்களை கொடுத்து ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.
ராதிகா சரத்குமார் ரங்கநாயகியாகவும், லட்சுமி மேனன் திவ்யாவாகவும், மஹிமா நம்பியார் லட்சுமியாகவும், ராவ் ரமேஷ், சுரேஷ் மேனன், விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, சுபீக்ஷா,சாய் ஐயப்பன், சத்ரூ,கார்த்திக் சீனிவாசன்,சி.ரங்கநாதன், தேவி,பாவனா,பேபி மானஸ்வி,மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா என்று நட்சித்திர பட்டாளங்களின் குவியலுடன் படம் முழுவதும் முக்கியத்துவம் இல்லாமல் வலம் வருகின்றனர்.
ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணியின் இசை படத்திற்கு பலம் மட்டுமல்ல, தெலுங்கு வசனங்களுக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கும் மயக்கும் அதிரடி இசையும், யுகபாரதி, மதன் கார்க்கி, விவேக், சைத்தன்ய பிரசாத்தின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து காதுகளுக்கு இன்னிசை விருந்து படைத்துள்ளார்.
பிரம்மாண்ட அரண்மனை, குலதெய்வ கோயில், சந்திரமுகியின் அறைகள், போர்கள காட்சிகள், பரதநாட்டிய அரங்கம், சண்டை காட்சிகள் என்று காட்சிக்கோணங்களில் வர்ணஜாலதங்களை கொடுத்து மிரள வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.
கலா, தினேஷ், பாபா பாஸ்கர் ஆகியோரின் நடன அசைவுகள் படத்திற்கு கூடுதல் பலம். கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா, ரவி வர்மா, ஓம் பிரகாஷ் ஆக்ஷன் காட்சிகளுக்கு உத்தரவாதத்தை கொடுத்துள்ளனர்.
கலை இயக்குனர் தோட்டா தரணியின் கைவண்ணம் ரசிக்கும் ரகம் என்றால் , எடிட்டிங் ஆண்டனியின் பங்களிப்பு படத்தின் சாரம்சத்தை தக்க வைத்துள்ளது.
மோகன்லால் மற்றும் ஷோபனின் ‘மணிசித்திரத்தாழ்’ படத்தின் ரீமேக்காக 2005 ஆம் ஆண்டில், பி வாசுவின் சந்திரமுகி திரைக்கு வந்தபோது, திகில் நகைச்சுவைகள் தமிழ் சினிமாவுக்கு புதிய தளத்தை உருவாக்கி கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக சந்திரமுகி 2 அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம். இதன் கதை சந்திரமுகியின் உண்மைக்கதையை வழி மொழிகிறது. ஒரு சில சம்பவங்கள் மாறுபட்டு காணப்பட்டாலும் வேட்டையனை வழி வாங்க துடிக்கும் சந்திரமுகியின் ஆக்ரோஷமும், அவனை கொன்று பழி தீர்க்கும் சம்பவங்களும் ஒன்றாகவே காட்டப்பட்டுள்ளன. கங்கனா ரனாவத் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் சிறப்பான பணியை செய்துள்ளனர், வழக்கமான மற்றும் யூகிக்கக்கூடிய திகில் திரைப்படம் தான் என்றாலும் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இந்தப் படத்தில் முதல் படத்தைப் போன்ற பயமுறுத்தல்கள், திகல் அனுபவங்கள் எதுவும் இல்லாமல் சந்திரமுகியின் கதையை அடிப்படையாக கொண்டு அவர்களைச் சுற்றியே கதைக்களம் நகர்வதால் பழி வாங்குவது மட்டும் தான் கதைக்களத்தில் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் சந்திரமுகி 2 அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் ரசித்து மகிழலாம்.