குயிலி சினிமா விமர்சனம்

0
398

குயிலி சினிமா விமர்சனம் : குயிலி பொதுநலத்திற்காக தன்னுயிரை துச்சமென நினைக்கும் தியாகத்தின் தீப ஒளி | ரேட்டிங்: 3/5

பிஎம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் விவி அருண்குமார் தயாரித்திருக்கும் குயிலி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் முருகசாமி.

இதில் லிஸி ஆண்டனி, தஷ்மிகா லெக்ஷ்மண், புதுப்பேட் சுரேஷ், ரவிஜா, அருண்குமார், சரண் பாஸ்கர், இயக்குனர் முருகசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள்: ஒளிப்பதிவு: ப்ரவீன்ராஜ், இசை: ஜோ ஸ்மித், படத்தொகுப்பு: ராஜேஷ் கண்ணா, ஸ்டண்ட் மாஸ்டர்- மிரட்டல் செல்வா, பிஆர்ஒ-மணி

கோவையில் உள்ள கிராமத்தில்; சிறு வயதிலேயே குயிலி ( தஷ்மிகா) மதுப்பழக்கத்தால் தந்தையை இழந்து கஷ்டப்படுகிறார். சுவரோவிய கலைஞர் ரவிஜா பக்கத்து வீட்டில் வசிப்பவர். குயிலியை விடாமுயற்சியோடு துரத்தி காதலிக்க வைக்கிறார். குயிலி முதலில் மறுது;தாலும் பின்னர் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ரவிஜா என்பதால் காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். அந்த கிராமத்தில் சுந்திரமூர்த்தி  சாராய வியாபாரி ஊரில் உள்ள அனைத்து ஆண்களுக்கு முதலில் சாராயத்தை இ​லவசமாக கொடுத்து நாளடைவில் அவர்கள் அனைவரையும் குடிக்கு அடிமையாக்கி விட்டு நன்றாக பணம் சம்பாதிக்கிறார். பின் போலீஸ் மற்றும் அரசியல்வாதி உதவியுடன் அங்கு சாராய பேக்டரி நடத்துகிறார். இதனிடையே ரவிஜா -குயிலிக்கு ஆண் குழந்தை பிறக்க வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் டிஜிட்டல் பேனரால் சுவரோவிய கலைஞரான ரவிஜாவிற்கு போதிய வருமானம் இல்லாததால் கூலி வேலைக்கு செல்கிறார். செங்கல் சூளையில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது விபத்து ஏற்பட்டு காலில் காயம் அடைந்து துடிக்க வலி தெரியாமல் இருக்க மாமன் அவரை மது அருந்த வைக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் ரவிஜா குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கி விட குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு அமைதியில்லாமல் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாள் ரவிஜா மதுக்கடையில் குடிக்கும் போது நடக்கும் கைகளப்பில் ரவிஜாவும் அவரது தந்தையும்  கொல்லப்பட குயிலி அதிர்ச்சியாகிறார். கிராம மக்களை சாராயத்திற்கு அடிமையாக்கிய சுந்தரமூர்த்தி மீது குயிலிக்கு கோபம் திரும்ப சாராயக்கடையை எரித்து விட, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வருகிறார். தனது குழந்தையோடு தனி மரமாக நின்று தினக்கூலி வேலை பார்த்து மகனுக்கு கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறார். காலம் உருண்டோட குயிலி (வயதான தோற்றத்தில் லிசி ஆண்டனி) மதுக்கடைகளை மூட வேண்டும் என்று குரல் கொடுத்து தன் சக்தியை மீறி முடிந்த வரை போராடி வருகிறார். இந்நிலையில் குயிலியின் மகன் கலெக்டராகி, மதுபான ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தியின் மகளை  காதலித்து மணக்க நினைக்கிறார். இதற்கு தடை போடும் குயிலியை மகன் அவமானப்படுத்;தி வீட்டை விட்டு துரத்தி விட, குயிலி இரண்டாவது இழப்பை சந்திக்க முடியாமல் தவிக்கிறார். தன்னுடைய நோக்கமான மதுக்கடையை மூட வேண்டும், தன் மகன் கலெக்டராகி இதை செய்வான் என்ற நம்பிக்கை வீணாக போக, குயிலி கோபத்தில் ஒரு முடிவு எடுக்கிறார். அது என்ன? குயிலியின் முடிவால் கிராம மக்களுக்கு நடந்த நன்மை என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

முதல் பாதியில் இளமை தோற்றத்தில் காதலியாகவும், மனைவியாகவும் வரும் தஷ்மிகா கிராமத்து பெண்ணாக நக்கல், நய்யாண்டி செய்து பின்னர் திருமணம், குழந்தை என்று செல்ல, குடி போதைக்கு அடிமையாகும் கணவனிடம் சண்டை போட்டு கதறுவது என்று கவனிக்க வைக்கும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இரண்டாம் பாதியில் நடுத்தர வயது குயிலியாக வரும் லிசி ஆண்டனி கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட நாயகியாக, மகனின் உதாசீனத்தால் பாதிக்கப்பட்டு, பின்னர் தன் கடமையை செய்ய வீரு கொண்டு எழும் மங்கையாக தியாகத்தின் வடிவாக மனதில் நிற்கிறார்.

புதுப்பேட்டை சுரேஷ், ரவிஜா, அருண்குமார், சரண் பாஸ்கர், படத்தின் இயக்குனர் முருகசாமி  மற்றும் பலர் படத்தின் துணை கதாபாத்திரங்களாக வந்து போகின்றனர்.

பிரவீன் ராஜின் ஒளிப்பதிவு, ஜோ ஸ்மித்தின் இசை மற்றும் பின்னணி இசை மற்றும் ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பு படத்தின் ஆழமிக்க கருத்துக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தங்களுடைய பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

குடும்பமும், மது பழக்கத்தின் மூலம் ஒரு கிராமம் அழிந்து போக, அதை தடுக்க புறப்படும் வீரமிக்க கிராமத்து பெண்மணியான குயிலியின் கதைக்களத்தை குடும்ப சென்டிமெண்ட் கலந்து போராட்ட தளத்துடன் சமூக அக்கறை கலந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அழுத்தமாக  முடிந்த வரை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் முருகசாமி.

மொத்தத்தில் பிஎம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் விவி அருண்குமார் தயாரித்திருக்கும் குயிலி பொதுநலத்திற்காக தன்னுயிரை துச்சமென நினைக்கும் தியாகத்தின் தீப ஒளி.