குட் டே (GOOD DAY) சினிமா விமர்சனம்

0
554

குட் டே (GOOD DAY) சினிமா விமர்சனம் : குட்டே தள்ளாட்டம் நிறைந்த ஒரு நாள் பயணத்தில் தடுமாற்றமில்லாத திரைக்கதையுடன் வித்தியாசமான கோணத்தில் புதிய பாதையுடன் நிறைவான பதிவு கவனத்தை ஈர்க்கும் | ரேட்டிங்: 3.5/5

நியூ மாங்க் பிக்சர்ஸ் சார்பில் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து நடித்திருக்கும் குட் டே படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் என்.அரவிந்தன்

இதில் பிரித்திவிராஜ் ராமலிங்கம் – சாந்தகுமார், கார்த்திக் நேத்தா – மாடர்ன் சாமி, காளி வெங்கட் – நேரு, மைனா நந்தினி – கிருஷ்ண வேணி, ஆடுகளம் முருகதாஸ் – கிருஷ்ண வேணி கணவர், பகவதி பெருமாள் (பக்ஸ்) – சுல்தான் பேட்டை, வேல ராமமூர்த்தி – வெட்டியான் தவவேலு, போஸ் வெங்கட் – பஸ் கண்டக்டர், விஜய் முருகன் (கலை இயக்குனர்) – போலீஸ் இன்ஸ்பெக்டர் மது தயாளன், ஜீவா சுப்பிரமணியம் – போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தியங்கரா தேவி, பாரத் நெல்லையப்பன்

படக்குழுவினர்கள் :-திரைக்கதை – வசனம் : பூர்ணா ஜெஸ் மைக்கேல், ஒளிப்பதிவு – படதொகுப்பு : மதன் குணதேவ், பாடலாசிரியர் – கூடுதல் வசனம் : கார்த்திக் நேத்தா, இசை : கோவிந்த் வசந்தா, கதை கரு : பிரித்திவிராஜ்  ராமலிங்கம்,இணை இயக்குனர் : பூர்ணா ஜெஸ் மைக்கேல், சவுண்ட் டி​சைன் : எஸ்.அழகிய கூத்தன், சுரேன்.ஜி,சவுண்ட் மிக்ஸிங் : சுரேன்.ஜி, ஸ்டண்ட் இயக்குனர் : ஓம் பிரகாஷ், டைட்டில் ரிவீல் – டீஸர் – ட்ரைலர் இசை : லியோன் – டார்வின், துணை இயக்குனர் : சே மதன், நிர்வாக தயாரிப்பாளர் : கோவை வி.விஜய குமார், நிர்வாக மேலாளர் : தனசேகர், ஸ்டில்ஸ் : ஜீவா சுப்பிரமணியம் – மக்கா பகத் – மணிகண்டன், பப்ளிசிட்டி டிசைன்ஸ் : சபா டிசைன்ஸ், லைன் தயாரிப்பாளர் : ஜே பாண்டியராஜ் – தாமோதரன் வீரகுமார்,  மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில், பிரபல தயாரிப்பாளர் S.R பிரபு இப்படத்தை வெளியிடுகிறார்.

சொந்த ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு திருப்பூரில் தாய் ஃபேக்ரிக்ஸ் என்ற பனியன் தொழிற்சாலையில் சாந்தகுமார் (பிரித்திவிராஜ் ராமலிங்கம்) சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். நான்கு நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கி மாத வாடகை தந்து சம்பாதிக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வருகிறார். இதனிடையே தொழிற்சாலையின் மேலாளர் சக தொழிலாளி பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொள்ள அதை தட்டிக் கேட்கும் சாந்தகுமாரை முதலாளியிடம் வேறு விதமாக மாட்டி விட, சம்பளம் கைக்கு கிடைக்காமல் தாமதம் ஆகிறது. அதுமட்டுமில்லாமல் முதலாளி, அந்த பெண் முன்னிலையில் சாந்தகுமாரை மேலாளர் அறைந்து விட, வேறு வழியில்லாமல் அவமானத்தை ஜீரணிக்க முடியாமல் வெளியேறுகிறார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேலாளரிடம் கெஞ்சி சம்பளத்தை வாங்கி விடுகிறார்.  வாங்கிய சம்பளத்தில் மனைவிக்கு, தாய்க்கு அனுப்பி விட்டு வாடகை பாக்கியை பிரித்து அனுப்பி விட்டு மீதி மூவாயிரம் ரூபாயுடன் அன்றைய தினம் அவருக்கு பிறந்தநாள் என்பதால் கொண்டாட மதுபான கடைக்கு சாந்தகுமார் செல்கிறார். தாய்க்கு பணம் அனுப்பியதால் மனைவியிடம் சண்டை, மேலாளரிடம் வாங்கிய அடி, பணி செய்யும் இடத்தில் ஏற்படும் அவமானம், அறை வாடகை வசூலிக்க வரும் வீட்டுக்காரரிடம் சண்டை என்று மனஉளைச்சலில் இருக்கும் நேரத்தில் மது குடிக்கும் சாந்தகுமார் திடீரென்று தன் தனது பழைய கல்லூரி தோழி வேணியின்(மைனா நந்தினி) நினைவு வந்து அவருடன் தனது பிறந்தநாளை கொண்டாட, கேக் வாங்கிக்கொண்டு வேணியின் வீட்டுக்கு சென்று அவளது கணவர் (ஆடுகளம் முருகதாஸ்) முன் பிரச்சினையில் ஈடுபட்ட அங்கிருந்து விரட்டப்படுகிறார். அதன் பின் ஒரு பாலத்தின் மீது நின்று கொண்டு போலீசில் புகார் அளிக்க செல்லும் வேணியை தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டும் போது ரோந்து பணியில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மது தயாளனிடம் (விஜய் முருகன்) சிக்கி காவல் நிலையம் அழைத்து வரப்படுகிறார். அங்கே அவருடைய சட்டை, செல்போனை வாங்கி வைத்து கொண்டு உட்கார வைத்து விடுகின்றனர். அந்த நேரத்தில்  காவல் நிலையத்தில் ஒரு பெண் குழந்தை காணாமல் போனதாக தந்தை தரும் புகாரில் போலீசார் தீவிரம் காட்டி பரபரப்பாக தீவிரமாக தேடும் பணியில் வெளியே செல்லும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் மது தயாளனின் சீருடை மற்றும் வாக்கி டாக்கியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விடுகிறார் சாந்தகுமார். அதன் பின் சாந்தகுமார் என்ன செய்தார்? வழியில் யாரையெல்லாம் சந்தித்தார்? சீருடை, வாக்கி டாக்கியை எடுத்த சாந்தகுமாரை போலீஸ் பிடித்ததா? காணாமல் போன குழந்தை கண்டுபிடிக்க முடிந்ததா? சாந்தகுமார் போதையிலும் செய்த நன்மை என்ன? மனம் திருந்தி போதையை கைவிட்டாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.முதல் காட்சியில் சாந்தகுமாருக்கு ஏற்பட்ட அவமானங்கள், குடும்பத்தில் ஏற்பட்ட மனஉளைச்சல்கள், சக நண்பர்களிடம் பணத்திற்காக கையேந்துவது அதன் பின் மதுபான கடைக்கு சென்று மது அருந்தி விட்டு செய்யும் கலாட்டாக்கள் என்று படம் முழுவதும் தன்னுடைய தள்ளாட்டும் காணும் உடலுடன், அதற்கான தடுமாற்றம் நிறைந்த வசனங்கள், தான் செய்வது சரியென்று பிடிவாதமாக செய்யும் காரியங்கள் என்று ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமான நடிப்பால் பிரித்திவிராஜ் ராமலிங்கம் மெருகேற்றியுள்ளார். நடுத்தர வயது குடிகார மனிதராக சாந்தகுமார் பிஏ ஹிஸ்டரி என்று பெருமையாக சொல்லி கேக் செய்பவரிடம் நய்யாண்டி செய்வது, அந்த கேக்கை எடுத்துக் கொண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட கல்லூரி தோழி வீட்டிற்கு செல்லுவது, அங்கு அவமானப்பட, ரோட்டில் தன் பெயரை எழுதி விட்டு மகிழ்ச்சியடைவது, தற்கொலை முயற்சி, காவல் நிலையம், அங்கிருந்து ஒட்டம் அதன் பின் நடக்கும் சம்பவங்கள் என்று நகைச்சுவை, சுவாரஸ்யம் கலந்த காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, இறுதியில் பிரமை பிடித்தது போல் இருந்து திருந்திய மனிதராக காட்டும் காட்சிகள் நடிப்பால் கண் கலங்க வைத்து விடுகிறார்.பழைய கல்லூரி தோழி கிருஷ்ண வேணியாக மைனா நந்தினி, அவரது கணவராக வரும் ஆடுகளம் முருகதாஸ் இருவரும் எதிர்பாராத விருந்தாளியாக வரும் சாந்தகுமாரை சந்திக்கும் காட்சிகள், அவர்களுக்குள் ஏற்படும் உரையாடல்கள், சண்டைகள், போலீஸ் நிலையத்தில் நடக்கும் அளப்பறைகள் என்று சில காட்சிகள் தான் என்றாலும் கலகலப்புக்கு குறைவில்லை நிறைவாக செய்துள்ளனர். இனி மைனா நந்தினி இல்லை வேணி நந்தினியாக அழைக்கப்படுவார்.சாந்தகுமார் குடித்துக் கொண்டிருக்கும் போது மாடர்ன் குடிகார சாமியாக கார்த்திக் நேத்தா தன்னுடன் எடுத்து வந்த கசங்கிய பிளாஸ்டிக் டம்பளரை பக்கத்தில் வைத்து விட்டு வானத்தை பார்த்து முணுமுணுப்பதும், டம்ளர் நிரம்பவில்லை என்பதையறிந்து கைக்கடிகாரத்தை கழட்டி கொடுத்து விட்டு மதுவை வாங்கி குடித்து விட்டு எதுவும் தெரியாதது போல் செல்லும் இடத்தில் கை தேர்ந்த குடிகாரரின் மனநிலையை பிரதிபலித்து கை தட்டல் பெறுகிறார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் சில துளிகள் என்றாலும் இவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தான் இந்த திரைப்படம் பெரும் துளியாக உருவாகியுள்ளது என்பது கூடுதல் தகவல். இதை மறைக்காமல் மேடைகளில் தைரியமாக சொல்லி, தன் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம் என்பதையும், 13 வயதில் தொடங்கி 20 வருடங்களாக தனக்கு குடியால் ஏற்பட்ட அவமானங்கள், வலிகளை தாங்கி கஷ்டப்பட்டு குடியை விட்டு மீண்டு வந்து புது மனிதராக கவிஞராக தன்னை நிலைநிறுத்தி வாழ்க்கையில் இழந்ததை மீண்டும் கைப்பற்றி சாதனை மனிதான வலம் வரும் கார்;த்திக் நேத்தாவின் தன்னம்பிக்கை, விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தியங்கரா தேவியாக ஜீவா சுப்பிரமணியம் சாந்தகுமாரிடம் பரிவாக பேசுவதும் பின்னர் அவரை அழைத்துக் கொண்டு காணாமல் போன குழந்தையை தேடும் இடங்களில் தனித்துவமான நடிப்பில் கவனிக்க வைக்கிறார், அமைதியாக வந்தாலும் அழுத்தமான நடிப்புடன் இன்ஸ்பெக்டர் மது தயாளனாக விஜய் முருகன் (கலை இயக்குனர்), ஆட்டோ டிரைவர் நேருவாக காளி வெங்கட், சுல்தான் பேட்டையாக (பகவதி பெருமாள் (பக்ஸ்)), வெட்டியான் தவவேலுவாக (வேல ராமமூர்த்தி), பஸ் கண்டக்டராக (போஸ் வெங்கட்) மற்றும் பலர் படத்தில் சில காட்சிகள் தான் என்றாலும் ஒவ்வொருவரின் பங்களிப்பு மறக்க முடியாத தருணங்களாக இயல்பாக செய்துள்ளனர். மதன் குணதேவ் சாந்தகுமாரை பின் தொடர்ந்து செல்லும் இடங்களில் தனி சிறப்போடு காட்சிக் கோணங்கள் கொடுத்துள்ளார். மற்றும் படத்தொகுப்பையும் கச்சிதமாக செய்துள்ளார்.

கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகளில் கோவிந்த் வசந்தா இசையில் கடைசியாக வரும் பாடல்கள்; அம்புலியே ஆராரோ, மின்மினியே ராசாத்தி மனதை விட்டு அகலாத வண்ணம் பாடியுள்ள சிறுமிக்கு பாராட்டுக்கள். பின்னணி இசை மெய்மறக்க வைத்துள்ளது.

கவிஞர் கார்த்திக் நேத்தா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுத்தாளர் பூர்ணா ஜெஸ் மைக்கேல் எழுதிய திரைக்கதை மற்றும் வசனங்களுக்கு, கார்த்திக் நேத்தா கூடுதல் வசனங்களுடன் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

தன் பிறந்த நாளில் வேலையில் அவமானப்படும் ஒரு நடுத்தர குடும்பத் தலைவன், மனைவியின் நச்சரிப்பு, குழந்தைகளின் மீது அன்பு,  தன்னுடைய சம்பளம் கிடைத்தவுடன் ஒரு நாளில் குடித்துவிட்டு தன் மனதில் பட்டதை தைரியமாக செய்யும் மனோபாவத்துடன் நடந்து கொள்வதும் அதன் பின்னால் நெருக்கமானவர்களுடன் ஏற்படும் சிக்கல்கள், அதனை சமாளிக்க முடியாமல் திணறும் காட்சிகளுடன், சமூகத்தின் பார்வை, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு எடுக்கும் முடிவுகள், குழந்தை கடத்தலால் ஏற்படும் விபரீதம், அதை தடுக்க முடியாமல் போனதை நினைத்து வருந்தும் காட்சிகள், குழந்தை காப்பாற்றபட்டவுடன் தன் குடிப்பழக்கத்தை விட்டு நல்ல மனிதராக வலம் வரும் தருணம் என்று என் அரவிந்தன் தன் விறுவிறுப்பான இயக்கத்தால் தோய்வை ஏற்படுத்தாமல் அழுத்தமான பதிவுடன் சமூக அக்கறை கலந்து நகைச்சுவை இழையோடு சிறப்பாக கொடுத்துள்ளார்.கேக், சிகரெட், சீருடை, வாக்கிடாக்கி, குழந்தை ஷ{ என்று ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காட்சிகளின் இணைப்புடன் கதை பயணிப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் நியூ மாங்க் பிக்சர்ஸ் சார்பில் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்திருக்கும் குட்டே தள்ளாட்டம் நிறைந்த ஒரு நாள் பயணத்தில் தடுமாற்றமில்லாத திரைக்கதையுடன் வித்தியாசமான கோணத்தில் புதிய பாதையுடன் நிறைவான பதிவு கவனத்தை ஈர்க்கும்.