கார்கி விமர்சனம்: கார்கி எழுச்சிமிகு பெண்ணின் உணர்ச்சிகளின் பிரதிபிம்பமாக பாசத்திற்கு தலைவணங்காத நீதியை நிலை நாட்டும் தீர்க்கதரிசி |மதிப்பீடு: 4/5

0
841

கார்கி விமர்சனம்: கார்கி எழுச்சிமிகு பெண்ணின் உணர்ச்சிகளின் பிரதிபிம்பமாக பாசத்திற்கு தலைவணங்காத நீதியை நிலை நாட்டும் தீர்க்கதரிசி |மதிப்பீடு: 4/5

ப்ளாக் ஜெனி – மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஷன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்து 2டி என்டர்டெயிண்ட் வழங்கும் கார்க்கி படத்தை இயக்கியிருக்கிறார் கௌதம் ராமச்சந்திரன்.
இதில் சாய்பல்லவி , ஐஸ்வர்யா லட்சுமி, காளி வெங்கட், ஆர் எஸ் சிவாஜி, சரவணன், ஜெயபிரகாஷ், அன்ஷிதா ஆனந்த். கேப்டன் பிரதாப், வேதா பிரம்குமார், லிவிங்க்ஸ்டன், கவிதாலயா கிருஷ்ணன், திருநங்கை டாக்டர்.எஸ்சுதா, வின்னர் ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ஷ்ரயான்தி மற்றும் பிரேம் கிருஷ்ணா அக்கட்டு, இசை-கோவிந்த் வசந்தா, படத்தொகுப்பு-ஷபிக்முஹமது அலி, எழுத்து-ஹரிஹரன ராஜு, கலை-ஜாக்கி, இணை இயக்குனர் பிரவீன் எஸ்.விஜய், பாடல்கள்-கார்த்திக் நேத்தா, ஆடை வடிவமைப்பு-சுபாஸ்ரீ கார்த்திக் விஜய், சண்டை-ஆக்ஷன் பிரகாஷ், நிர்வாக தயாரிப்பு-சி.அனந்தபத்மநாபன், ஒப்பனை – வினோத் சுகுமாரன், ஆடைகள்-ஜெய்ஷங்கர்,  துணை படத்தொகுப்பு-அபிஷேக் அய்யனோத், துணை இயக்குனர்கள்-ஸ்ரீவாஸ் ராமகிருஷ்ணா, பாலாஜி, விஜய் பிரபாகரன், கிஷோர்விவேக், பிஆர்ஒ-குமரேசன்.

தந்தை பிரம்மானந்தா (ஆர்.எஸ். சிவாஜி) பெரிய அபார்ட்மெண்ட்டில் காவலாளியாக இருக்க, தங்கை பள்ளி மாணவி, வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து விற்கும் தாய், பள்ளி ஆசிரியராக பணி செய்து கொண்டிருக்கும் கார்கி (சாய்பல்லவி). காதலன் வீட்டில் திருமணத்திற்காக சம்மதம் வாங்கி ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் கார்கி. இதனிடையே தந்தை வேலை செய்யும் அபார்ட்மெண்டில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக அங்கே வேலை செய்யும் வடமாநிலத்தவர் நான்கு பேரை கைது செய்கிறது போலீஸ். கூடவே ஐந்தாவது குற்றவாளியாக தந்தையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.இதை கேள்விப்படும் கார்கி போலீஸ் நிலையத்திற்கு விரைய அங்கே போலீஸ் தந்தையும் இதில் உடந்தை என்று கூறி உடனே ஊரை விட்டே காலி செய்து கொண்டு போகுமாறு கார்கியிடம் அறிவுரையாக சொல்கின்றனர். ஊடகத்தில் செய்திகள் பரவ, செல்லும் இடமெல்லாம் மக்களால் அவமானப்படுத்தப்பட்டு வேலையும் பறிபோகிறது. வீட்டில் முடங்கும் குடும்பம், ஆனாலும் தன் தந்தை நிரபராதி என்பதை ஆதாரத்தோடு சொல்லி காப்பாற்ற பல முயற்சிகள் செய்கிறார். தனக்கு தெரிந்த பெரிய வக்கீல் ஜெயபிராகாஷ் உதவியை நாடுகிறார். ஜெயபிரகாஷோ பார் கவுன்சிலில் யாரும் கார்கியின் தந்தைக்கு வாதாட கூடாது என்று தடை விதித்துள்ளதாக கூற வேறு வழியின்றி ஜுனியர் வக்கில் காளி வெங்கட் உதவியுடன் நீதிமன்றத்தில் வாதாடி போராடி பெயில் வாங்கி தந்தையை வெளியே கொண்டு வருகிறார். இருந்தும் நிரந்தரமாக தந்தையை காப்பாற்ற ஐந்தாவது குற்றவாளியை கண்டுபிடிக்க முற்படும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியிடமே சென்று விசாரிக்க முடிவு செய்து அந்த சிறுமி வீட்டிற்கே செல்கிறார். அதன் பின் நடந்தது என்ன? எல்லாம் சுமூகமாக முடிந்தது என்று நினைக்கும் போது அவர் கண்டுபிடித்த உண்மை என்ன? அதனால் தன் குடும்பம் பாதிக்கப்பட்டாலும் எடுக்கும் முடிவு என்ன? ஐந்தாவது குற்றவாளி யார்? பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைத்ததா? என்பதே க்ளைமேக்ஸ்.

பள்ளி ஆசிரியை கார்கியாக சாய்பல்லவி சாதாரண நடுத்தர குடும்பத்து மகளாக, அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் பிரதிநிதியாக தந்தை மேல் அதிக அன்பு வைத்து எதிர்பாராத சம்பவத்தால் அவமானங்களால் நிலை குலைந்து தடுமாறும் நேரங்களில் காட்டும் உணர்ச்சிகளின் பிம்பமாக வாழ்ந்துள்ளார். சிறு வயதில் தனக்கு நேர இருந்த ஆபத்தை தந்தையால் காப்பாற்றப்பட அது முதல் தன் தந்தையை ஹீரோவாக உருவகப்படுத்தியிருக்கும் மனதில் அதீக நம்பிக்கையோடு தந்தைக்காக கடைசி வரை போராடும் பெண்ணாக வலுவான கதாபாத்திரம். அதே சமயம் உண்மையான குற்றவாளி யார் என்பதை கடைசி நொடிகளில் கண்டு பிடிக்கும் போது ஏற்படும் அதிர்ச்சி மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தினாலும் உறுதியாக எடுக்கும் முடிவு ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறது. காளி வெங்கட்டுடன் சேர்ந்து அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், பின்னர் இழி சொற்களையும் ஏச்சு பேச்சுக்களையும் தாங்கிக் கொள்வது. பழி போடப்பட்ட குடும்பத்தினர் எதிர்கொள்ளும் இடர்பாடுகளில் சிக்கி தவிப்பது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம்  அவமானப்படுவது, நம்பிக்கை, விடாமுயற்சி, உறுதியான மனம் படைத்த பெண்ணாக, தந்தையிடம் ஜெயிலில் நேருக்கு நேர் பார்த்து பேச கூட முடியாமல் தவிப்பது என்று நல்ல மகளாகவும், நல்ல பெண்ணாகவும், நல்ல அக்காவாகவும் இரும்பு நெஞ்சம் கொண்ட பெண்மணியாக அனைவரின் மனதில் தடம் பதித்து முத்திரை பதித்துள்ளார். இவரின் அதீத உழைப்பும், நடிப்பிற்கும் விருதுகள் பல வெல்வார். பாராட்டுக்கள்.

வக்கீல் இந்திரன்ஸ் கலியபெருமாளாகக் காளி வெங்கட்  நடுத்தர வயதில் வழக்கு கிடைக்காமல் ஏளனப்பட்டாலும், பேச்சு குறைபாடு பற்றி கவலைப்படாமல் கிடைத்த வழக்கை வாதாட செல்லும் போது எதிர்தரப்பு அரசு வக்கீலிடம் மாட்டிக் கொண்டு முழித்தாலும், சமயோஜிதமாக யோசித்து கேட்கும் கேள்விகளால் வழக்கின் போக்கையே திசை திருப்பி  மாற்றுவது, சீரியஸாக செல்லும் கதையில் சில இடங்களில் புன்முறுவல் ஏற்படும் வகையில் வசனங்களால் கவனம் ஈர்த்து படம் முழுவதும் சாய் பல்லவிக்கு சரிசமமான கதாபாத்திரத்தில் முழு ஈடுபாடு அர்ப்பணிப்புடன் செவ்வென செய்துள்ளார்.

குடும்ப வக்கீல் நண்பர் பானு பிரகாஷாக ஜெயப்பிரகாஷ், அப்பாவி முகத்துடன், தடுமாறும் வயதில் குற்றம் சாட்டப்படும் பிரம்மானந்தமாக ஆர்.எஸ்.சிவாஜி, பாதிக்கப்படும் சிறுமியின் தந்தையாக உணர்ச்சிகள் மேலிட தனது ஆற்றாமையை எண்ணி புலம்பி கோபப்பட்டு,மனஉளைச்சலால் பழி வாங்க நினைத்து பின்னர் சாந்தமாகும் அற்புத நடிப்பில் சரவணன், குற்றவாளியை கைது செய்தாலும், சிறு தவறால் மேலிடத்தில் திட்டு வாங்கி உண்மையை உரக்க சொல்ல போராடும் எஸ்.ஐ.பென்னிக்ஸாக கேப்டன் பிரதாப், இயல்பான மொழியில் புரியும்படி பேச்சு, வக்கீல்களிடம் நெத்தியடியாக கேள்விகயை கேட்டு, தன்னை ஏளனமாக பார்க்கும் வக்கீலுக்கு பதிலடி கொடுத்து வித்தியாசமான வழக்கின் அதிரடி நீதிபதியாகத் திருநங்கை டாக்டர். சுதா படத்திற்கு ஆணிவேர். நிருபர் அகல்யாவாக ஐஸ்வர்யா லட்சுமி,அன்ஷிதா ஆனந்த். கேப்டன் பிரதாப், பாதிக்கப்பட்ட சிறுமியாக இறுதியில் முகம் காட்டும் வேதா பிரம்குமார், காவலாளியாக லிவிங்க்ஸ்டன், அரசு வக்கீலாக கவிதாலயா கிருஷ்ணன், வின்னர் ராமச்சந்திரன் ஆகியோர் அட்டகாசத் தேர்வுகள்.
படத்திற்கு கேற்ற கச்சிதமான காட்சிக்கோணங்கள் யதார்த்த வாழ்க்கையையும், அபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள், நடக்கும் சம்பவங்கள், வழக்காடு மன்றம், விசாரிக்கும் இடங்கள் என்று பார்த்து பார்த்து செதுக்கி தந்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் ஷ்ரயான்தி மற்றும் பிரேம் கிருஷ்ணா அக்கட்டு, கார்த்திக் நேத்தா வரிகளில் கோவிந்த் வசந்தாவின் இசையும், பின்னணி இசையும் படத்தின் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து வசனங்கள் இல்லாமலேயே புரியும்படி நகர்ந்து செல்வது படத்திற்கு கூடுதல் வேகத்தை கொடுத்துள்ளது.

ஷபிக்முஹமது அலி படத்தொகுப்பு படத்தின் முக்கிய இறுதி காட்சிகளுக்கு பெரிதும் உதவி செய்து படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளார்.

கார்கி வித்தியாசமான தலைப்பிற்கேற்ற வலுவான கதைக்களம். ஆரம்பம் முதல் எதிர்பார்த்த காட்சிகள் ஆனால் எதிர்பாராத திருப்பங்கள் வேறொரு வித்தியாசமான கோணத்தில் திறம்பட படைத்து ஹரிஹரன் ராஜு எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து தயாரிப்பிலும் இணைந்து இயக்கியுள்ளார் கௌதம் ராமச்சந்திரன். பாதிக்கப்பட்ட நேர்மறை குடும்பத்தின் வலிகளை பார்த்த நமக்கு எதிர்மறை குடும்பத்தின் வலிகளை ஒரு மகளின் பார்வையில் உணர்வுபூர்வமாக சொல்லும் படம். இறுதியில் ஒரு நொடியில் தலைகீழாக மாற யாருமே எதிர்பாராத திருப்பம் தந்து அசத்தி கைதட்டல் பெறும் கார்கி ஒரு நீதிமான். காட்சிகளோ, சம்பவங்களோ சலிப்பு ஏற்படாதவாறு சிந்திக்க வைக்கக்கூடிய வகையில் திரைக்கதையமைத்து உண்மையை நிலைநாட்டி அசத்தலாக தன் அயராத உழைப்பும், முயற்சியும் கொடுத்து அசத்தலான வெற்றிக்கு வழி வகை செய்திருக்கிறார் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன். வயது வித்தியாசம் இல்லாமல் ஒரு சிறிய சபலத்தால் ஏற்படும் வன்கொடுமை இரு தரப்பிலும் குடும்பத்தில் எத்தகைய பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வசனத்தாலும், காட்சிகளாலும் விவரித்து நெத்தியடியாக கொடுத்துள்ளார் இயக்குனர்.அனைத்து தரப்பினரும் அவசியம் பார்க்க வேண்டிய படம், சமூக அக்கறையோடு யதார்;த்த பதிவோடு இயக்கியிருக்கும் கௌதம் ராமச்சந்திரன் நல்ல படைப்பாளியாக பல விருதுகளை வெல்ல வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் ப்ளாக் ஜெனி – மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஷன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்து 2டி என்டர்டெயிண்ட் வழங்கும் கார்கி எழுச்சிமிகு பெண்ணின் உணர்ச்சிகளின் பிரதிபிம்பமாக பாசத்திற்கு தலைவணங்காத நீதியை நிலை நாட்டும் தீர்க்கதரிசி.