காத்து வாக்குல ரெண்டு காதல் விமர்சனம்: காத்து வாக்குல ரெண்டு காதல் காற்றில் கரைந்து போகாமல் வெற்றியில் கொடி கட்டி உயர பறக்கிறது | RATING – 3 STAR

0
79

காத்து வாக்குல ரெண்டு காதல் விமர்சனம்: காத்து வாக்குல ரெண்டு காதல் காற்றில் கரைந்து போகாமல் வெற்றியில் கொடி கட்டி உயர பறக்கிறது | RATING – 3 STAR

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து  இயக்குர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இதில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு, கலா மாஸ்டர், மாறன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-அனிருத், ஒளிப்பதிவு-எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பு-ஸ்ரீகர் பிரசாத், கலை-ஸ்வேதா செபாஸ்டியன், ஸ்டண்ட்-திலீப்சுப்பராயன், பிஆர்ஒ-யுவராஜ்.

தன் வாழ்க்கையில் நினைத்தது நடக்காது, கிடைக்காது என்ற சூழ்நிலையில் வாழ்ந்து வரும் துரதிஷ்டசாலி விஜய்சேதுபதி. அதனால் உடல் நலம் குன்றிய தாயையே பிரிந்து சென்னையில் வேலை செய்து வாழ்கிறார். பகலில் டிரைவராகவும், இரவில் பப்பில் பவுன்சராகவும் வேலை செய்கிறார். டிரைவராக இருக்கும் போது நயன்தாராவை சந்திக்கும் விஜய்சேதுபதி, அவரின் குடும்பத்தின் சூழ்நிலையை பார்த்து பழக நட்பு மலர்கிறது. அதே சமயம் இரவில் பிடிக்காத நபருடன் திருமணம் நிச்சயித்த விரக்தியில் இருக்கும் சமந்தாவை சந்திக்கிறார் விஜய்சேதுபதி. நயன்தாராவை பகலிலும், சமந்தாவை இரவிலும் சந்திக்க நாளடைவில் காதலாக மலர்கிறது. தனக்கு கிடைக்காத சந்தோஷங்கள் இந்த இருவர் வந்த பிறகு வாழ்க்கையில் நடப்பதை உணர்கிறார். இருவரும் விஜய் சேதுபதியை காதலிக்க தொடங்குகிறார்கள். தனக்கு மறதி நோய் இருப்பதாக பொய் சொல்லி இருவரையும் சமாளிக்கிறார். இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் தள்ளப்படும் விஜய் சேதுபதி இறுதியில் யாரை தேர்ந்தெடுத்தார்? நயன்தாரா, சமந்தா இருவரும் காதலர்களாக இருந்தார்களா? பிரிந்து போனார்களா? திருமணம் செய்து கொண்டார்களா?என்பதே மீதிக்கதை.

ராம்போவாக விஜய் சேதுபதி இரண்டு வேலைகள் செய்து கொண்டும், இரண்டு பெண்களையும் காதலித்து கொண்டும், இரண்டு மனநிலையில் தவித்துக் கொண்டும் இரட்டை வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் தவிக்கும் தவிப்பு, சலிப்பு,விரக்தி, நெருடல் என்று கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நீண்ட வசனம் பேசும் காட்சியிலும் நேர்த்தியாக திறம்பட செய்துள்ளார்.

கண்மணியாக நயன்தாரா சோகமான வாழ்க்கை, பிடித்த காதல், அதை தக்க வைக்க சமாந்தாவிடம் போடும் சண்டை, சமாதானம் பின்னர் எடுக்கும் முடிவு என்று யதார்த்தமாக நடித்து மனதில் பதிகிறார்.

கதீஜாவாக சமந்தா இளமை துள்ளும் கவர்ச்சி காக்டெயிலாக வந்து, தன்னுடைய அழகான மேனரிசங்களால் மெஸ்மெரைஸ் செய்து கைதட்டல் வாங்கி விடுகிறார். பிரபு, கலாமாஸ்டர், மாறன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் படத்திற்கு பலம்.

மாயாஜால அனுபவத்தை நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் சிவனுக்காக கொடுத்த அனிருத் இந்தப் படத்திலும் அதே உணர்ச்சிகரமான, தூக்கலான பின்னணி இசையும், பாடல்களையும் கொடுத்து அசத்தியுள்ளார்.

எஸ்.ஆர்.கதிர், விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு சாதாரண காட்சிக்களைக் கூட அசாதாரணமாக கொடுத்து மனதில் பதிகின்றனர்.

படத்தொகுப்பு-ஸ்ரீகர் பிரசாத், கலை-ஸ்வேதா செபாஸ்டியன், ஸ்டண்ட்-திலீப்சுப்பராயன் ஆகியோரின் உழைப்பிற்கு சிறந்த பலன் கிடைத்துள்ளது.

விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் டேட்டிங் செய்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால் படத்தை ரசிக்கலாம். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ரூத் பிரபு ஆகியோரின் வலுவான நடிப்பில் நகைச்சுவையோடு காதல் கலந்து பொழுதுபோக்கான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.முதல் பாதி வரை மூவருக்குமான முக்கோண காதலை சொல்லி இடைவேளைக்குப்பிறகு இந்த இடியாப்ப சிக்கலான கதைக்களத்தை சாமர்த்தியமாக சமாளித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ்சிவன். பாராட்டுக்கள்.
மொத்தத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் காற்றில் கரைந்து போகாமல் வெற்றியில் கொடி கட்டி உயர பறக்கிறது.