காதல் என்பது பொதுவுடமை சினிமா விமர்சனம் : காதல் என்பது பொதுவுடமை இன்றைய காலகட்டத்தின் மாற்றத்தை அறிந்து புரிந்து கொள்ள வைக்கும் நவீன ஒரினக்காதலை வெளிப்படுத்தும் வித்தியாசமான படைப்பு | ரேட்டிங்: 3.5/5

0
660

காதல் என்பது பொதுவுடமை சினிமா விமர்சனம் : காதல் என்பது பொதுவுடமை இன்றைய காலகட்டத்தின் மாற்றத்தை அறிந்து புரிந்து கொள்ள வைக்கும் நவீன ஒரினக்காதலை வெளிப்படுத்தும் வித்தியாசமான படைப்பு | ரேட்டிங்: 3.5/5

ஜியோ பேபி, மேன்கைன்ட் சினிமாஸ், சிமிட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்ஷன் தயாரித்திருக்கும் காதல் என்பது பொதுவுடமை படத்தை போஃப்டா ஜி.தனஞ்செயன் வெளியிட படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

இதில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா, அனுஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு : ஸ்ரீPசரவணன், இசை : கண்ணன் நாராயணன், எடிட்டிங் : டேனி சார்லஸ், கலை : ஆறுசாமி, பாடல் : உமாதேவி, மக்கள் தொடர்பு : குணா

பெண்ணியவாதியும் சமூக கருத்துக்களை திறம்பட கையாளும் தைரியமான பேச்சாளராக வலைதளத்தில் புகழ்பெற்று விளங்குபவர் லட்சுமி (ரோகிணி). தன் கணவர் தேவராஜை (வினித்) பிரிந்து மகள் மகள் சாம் (லிஜோமோல் ஜோஸ்) உடன் தனியாக வாழ்கிறார். தேவராஜ் இரண்டாவதாக ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு நாள் தனது காதலைப் பற்றி தாய் லட்சுமியிடம் கூற சந்தோஷப்பட்டு அவர்களை வீட்டிற்கு அழைக்கும்படி கூறுகிறார். அதை உடனடியாக ஏற்கும் சாம், நண்பர் ரவீந்திராவிடம் (கலேஷ் ராமானந்த்) தெரிவித்து அழைத்துவரச் சொல்கிறார். லட்சுமி தன் வருங்கால மருமகனுக்காக  வீட்டு வேலை செய்யும் மேரியிடம் (தீபா சங்கர்) சொல்லி தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்து பரிசு பொருட்களை வாங்கி வைத்து, தன் கணவன் தேவரா​ஜிடம் விஷயத்தை சொல்லி விட்டு அவர்கள் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.  ஞாயிற்றுக்கிழமை அன்று ரவீந்திரா அவருடைய தோழி நந்தினி (அனுஷா பிரபு) சாமின் வீட்டிற்கு வருகை தருகிறார்கள். ரவீந்திராவை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் லட்சுமி, நந்தினியை எதற்காக அழைத்து வந்திருக்கிறார் என்ற சந்தேக பார்வையுடன் உபசரிக்கிறார். அதன் பின் சாம் நந்தினியிடம் பழகும் விதமும், ரவீந்திராவிடம் கொடுக்கும் பரிசு பொருளை சாம் நந்தினியிடம் கொடுக்கும் போது சாம் நந்தினியை தான் காதலிக்கிறாள் என்பதை அறியும் லட்சுமி அதிர்ந்து போகிறார். இதனை என்னதான் முற்போக்கு பெண்ணியவாதியாக இருந்தாலும் மகளின் தேர்வு சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதால் லட்சுமி அக்காதலை ஏற்க மறுக்கிறார். கணவன் தேவராஜும் இந்த விஷயத்தை பற்றி கேள்விப்பட்டு அவர்களை பார்க்க வீட்டிற்கு வந்து சாம் மற்றும் நந்தினியுடன் பேசிகிறார். ஆனால் சாம் மற்றும் நந்தினி இவர்களின் பேச்சை எடுத்துக் கொள்ளாமல் தங்களின் காதல் உணர்வை புரியவைக்க முயற்சி செய்கின்றனர். இறுதியில் சாமின் தன்பாலினக் காதல் உணர்வு நேர்மையானதா? பெற்றோர்கள் சம்மதித்தார்களா? காதலை பிரித்தார்களா? காதலா, குடும்பமா எது வென்றது? என்பதே படத்தின் விரிவான உரையாடல்கள் கலந்த க்ளைமேக்ஸ்.

லட்சுமியாக ரோகிணி பாசமுள்ள தாயாக வாழ்ந்துள்ளார். கணவனை பிரிந்து தன்னுடைய லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பெண்ணியவாதியாக இருந்தாலும், மகளின் காதலை அறிந்து கொள்ளும் போது அதை நம்பமுடியாமல் தவிக்கும் தவிப்பும், மகளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயலும் போது தோற்று போய் நொடிந்து அழும் போதும், கணவனிடம் சொல்லி மகளின் மனதை மாற்ற நினைத்து அறிவுரைகளும் நிராகரிக்கப்பட, நந்தினியை திட்டி வீட்டை விட்டு அனுப்பி அவமானப்படுத்தும் போதும் தாயின் மனநிலையில் அவர் செய்யும் செயல்கள் அப்பட்டமாக தத்ரூபமாக உணர்ச்சிகளின் குவியலாக அனுபவ நடிப்பால் மெய் சிலிர்க்க வைக்கிறார். வருங்கால மருமகனுக்காக முதலில் செய்யும் ஏற்பாடுகள், அளப்பறைகள் புன்னகை மலரச் செய்து அதன் பின்னர் விஷயத்தை அறிந்து மகள் அப்படிப்பட்டவள் அல்ல என்பதை புரிய வைக்க எடுக்கும் முயற்சிகள், இறுதியில் மகளிடம் ஒரு நாள் மட்டும் தங்கி விட்டுச் செல்லுமாறு சொல்வதும், மகளின் பார்பி பொம்மையை கொடுக்கும் இடத்தில் கண் கலங்கச் செய்து விடுகிறார்.லிஜோமோல் ஜோஸ், மகள் சாம் என்ற அன்பின் உருவகம். தாய் மேல் பாசமாக இருப்பதும், தன் ஒரினக்காதலை எப்படி சொல்வது என்று தவிப்பது, தாயின் சம்மதத்தை பெற்றுத்தான் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அன்பு மகளாக,  பெற்றோரிடம் விவாதம் செய்து தன் காதலின் வலிமையை விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்து சாதிப்பது என்று சிறப்பாக மகளின் பார்வையில் தயக்கமும், கூச்ச தன்மையுடன் தழுதழுக்கும் குரலுடன் நேர்த்தியான புரிந்து கொள்ளும்படி உணர்ச்சிகளுடன் நடிப்பை வழங்கியுள்ளார்.

அனுஷா பிரபுவின் நந்தினி புத்திசாலித்தனமான சித்தரிப்பு. தனக்கு என்ன நேருகிறது, தன்னுடைய விருப்பங்களை அறிந்த பெண் என்றாலும் சொல்லி புரிய வைக்க முடியாமல் சூழ்நிலை கைதியாக பெற்றோரிடம் மாட்டிக் கொண்டு திருமணத்தில் சிக்கி சீரழிவதும், அதிலிருந்து தப்பி சென்னைக்கு வந்து பிடித்த வாழ்வை வாழும் தைரியமான பெண்ணாக சித்திரிக்கப்படுகிறார். தனக்கு நேரும் அவமானங்களையும், திட்டுக்களையும் பொருமையாக கையாண்டு உறுதியான நிலைபாட்டை புரிய வைத்து சாமின் பெற்றோர்களின் விருப்பப்படி சம்மதம் பெற்று வர சொல்லும் நந்தினி கதாபாத்திரம் வித்தியாசமான படைப்பு.

பணிப்பெண் மேரியாக தீபாசங்கர் இயல்பான சூழ்நிலை நகைச்சுவை, 500 ரூபாயை திருப்பித்தரும் போது படத்தின் கனமான சித்தரிப்பை எளிதாக்குகிறது.

கலேஷ் ராமானந்த் படம் முழுவதும் பெண்களின் நண்பராக வந்து அழுத்தமான நட்பின் உன்னதத்தை தன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் காட்சிக் கோணங்கள் ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருப்பதில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீPசரவணன் உழைப்பின் வெற்றியில் பளிச்சிடுகிறது,

உமாதேவியின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் உறுத்தாத இதமான மெல்லிசையாக கொடுத்துள்ளார் கண்ணன் நாராயணன்.

எடிட்டிங் டேனி சார்லஸ் காட்சியை கச்சிதமாக செதுக்கியுள்ளார். கலை ஆறுசாமி படத்திற்கு பலம்.

பிரிந்த பெற்றோர், சிங்கிள் மதராக இருந்து மகளை வளர்க்கும் பெண், மகளின் ஒரினக்காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் மகளின் எண்ணத்தை மாற்ற நினைத்து எடுக்கும் கடினமான உரையாடல்கள் மற்றும் ஒரினபெண்கள் சந்திக்கும் சமுதாயத்தின் கட்டுப்பாடுகள், முட்டுக்கட்டைகளை  கண்ணாடியாக பிரிதிபலித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பாலுணர்வையும் எவ்வாறு புறக்கணிக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்து ஒரு ஓரினச்சேர்க்கை தம்பதிகளின் மனதின் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் எவ்வாறு வாக்குவாதமாக மாற்றி தங்களின் நிலைபாட்டை உணரச் செய்கிறார்கள்,அதை எப்படி பெற்றோர்களின் திருமண சூழலோடு ஒப்பிட்டு தர்க்கமாக்கி தங்கள் காதலை உணரச் செய்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை திறம்பட கையாண்டு விரசம் கலக்காமல் புரிய வைத்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

மொத்தத்தில் ஜியோ பேபி, மேன்கைன்ட் சினிமாஸ், சிமிட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்ஷன் தயாரித்திருக்கும் படத்தை போஃப்டா ஜி.தனஞ்செயன் வெளியிடும் காதல் என்பது பொதுவுடமை இன்றைய காலகட்டத்தின் மாற்றத்தை அறிந்து புரிந்து கொள்ள வைக்கும் நவீன ஒரினக்காதலை வெளிப்படுத்தும் வித்தியாசமான படைப்பு.