கருடன் சினிமா விமர்சனம் : கருடன் கிராமத்து நட்பு – பகை – நயவஞ்சகத்திற்கு எதிராக உண்மை விசுவாசியின் விஸ்வரூப உக்ரதாண்டவம் | ரேட்டிங்: 3.5/5

0
1062

கருடன் சினிமா விமர்சனம் : கருடன் கிராமத்து நட்பு, பகை, நயவஞ்சகத்திற்கு எதிராக உண்மை விசுவாசியின் விஸ்வரூப உக்ரதாண்டவம் | ரேட்டிங்: 3.5/5

கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் தயாரித்திருக்கும் கருடன் படத்தை ஃபைவ் ஸ்டார்  கே.செந்தில் குமார் வெளியிட கருடன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்.

இதில் சூரி – சொக்கன், சசிகுமார் – ஆதித்யா, உன்னி முகுந்தன் – கருணாகரன், ரேவதி ஷர்மா – விண்ணரசி, சிவதா – தமிழ் செல்வி, பிரிகிடா சாகா – பர்வீன், ரோஷனி ஹரிப்ரியன் – அங்கையர்கன்னி, சமுத்திரகனி – முத்துவேல், மைம் கோபி – தியேட்டர்காரன் நாகராஜ், ஆர்.வி.உதயகுமார் – கா. தங்கபாண்டி, வடிவுக்கரசி – செல்லாயி அப்பத்தா,துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் – வைரவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- எழுத்தாளர் – ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் மற்றும் டீம், ஒளிப்பதிவு – ஆர்த்தர் ஏ.வில்சன், இசை – யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு – பிரதீப் ஆ. ராகவ், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

சென்னையில் 300 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார் பத்திரப்பதிவு அமைச்சர் தங்கப்பாண்டி (ஆர்.வி. உதயகுமார்). தேனி அருகே உள்ள கொம்பை அம்மன் கோயிலுக்குச் சொந்தமான அந்த நிலத்தின் மூலப்பத்திரம் கொம்பை அம்மன் கோவில் டிரஸ்டிகளான ஆதித்யா (சசிகுமார்) கருணாகரன் (உன்னி முகுந்தன்) கருணாவின் பாட்டி செல்லாயி (வடிவுக்கரசி)  கட்டுப்பாட்டில் வங்கியில் இருக்கிறது. அந்த பத்திரத்தை கைப்பற்றி, இடத்தை எப்படியாவது தன் வசமாக்க வேண்டும் என திட்டமிடுகிறார் அமைச்சர் தங்கப்பாண்டி. அதே ஊரில் சிறு வயதில் கருணாவின் உயிரை காப்பாற்றிய அனாதை சொக்கன்(சூரி) கருணாவின் ஆதரவால் வளர அவருக்கு காவலனாக, விசுவாசமான ஊழியனாக இருக்கிறான். உயிர் நண்பர்கள் ஆதித்யா, கருணாகரன் என்பதால் ஆதி, கருணாவின் குடும்பத்திற்கு விசுவாசமான வேலைக்காரனாக இருக்கிறான் சொக்கன் (சூரி). அதனால் மூவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று இணைபிரியாமல் இருக்கிறார்கள். கருணா செங்கல் சூலை நடத்தினாலும் போதிய வருமானம் இல்லாமல் பணக் கஷ்டத்தில் இருக்கிறார். அதற்காக கோயில் நகைகளை அடமானம் வைத்து அதற்கு பதிலாக போலி நகைகளை செய்து யாருக்கும் தெரியாமல் வைத்துவிடுகிறார். இதனிடையே அமைச்சர் தங்கப்பாண்டியன் கொம்பையில் தியேட்டர் அதிபர் நாகராஜிடம்(மைம் கோபி) நண்பர்களை பிரித்து கோயில் மூலப்பத்திரத்தை எடுத்து தருமாறு சொல்கிறார். இதனால் நாகராஜ் கருணாவின் பணத்தேவையை அறிந்து அவரை தன் பக்கம் இழுக்கிறார். பணத்திற்காக கருணா ஆதிக்கு துரோகம் செய்ய முடிவு செய்கிறார். கருணாவின் பாட்டி செல்லாயி (வடிவுக்கரசி) மர்மமான சூழ்நிலையில் இறந்து, நிலங்களின் கட்டுப்பாடு கருணா கையில் வர அதை சரி பார்க்கும் ஆதிக்கு கருணாவின் கோயில் நகை ஏமாற்று வேலையை கண்டுபிடிக்கிறார். அதனால் ஆவணங்களைத் திருடுவதற்கு உதவும் ஒரு சூழ்ச்சியான நடவடிக்கையாக கோயில் புதிய அறங்காவலராக கருணா சொக்கனை நியமிக்கிறார்.அதன் பின் கோயில் மூலப்பத்திரத்தை ஆதி கையகப்படுத்த கருணாவும், தியேட்டர் அதிபர் நாகராஜனின் கூட்டாளிகளும் சேர்ந்து ஆதியை கொடூரமாக கொலை செய்கிறார்கள், இந்த கொடூரமான செயலுக்கு சொக்கன் சாட்சியாகிறார்.  சொக்கன் கருணாவிற்கு ஆதரவாக இருக்கிறாரா? ஆதியின் கொலைக்கு பின் அவரின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறாரா? சொக்கனின் விசுவாசத்தை யாரிடம் காட்;டினார் என்பதை க்ளைமேக்சில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விடுதலை பாகம் ஒன்றில் தொடங்கிய மாற்றம் இரண்டாவது படமான கருடனில் ஆர்ப்பாட்டமாக ஆர்ப்பரிக்கிறார் காமெடி நடிகர் என்ற பட்டத்தை தன் நடிப்பால் மறக்கடித்து பெருமைமிக்க கதாநாயகனாக வலம் வருகிறார் சூரி. படத்தில் ஆரம்ப காட்சியிலேயே கருணாவின் நிழலாக வருவதும், நண்பனே ஆனாலும் அவர் மேல் கைவைக்க விடாமல் தடுப்பது, கருணா கேட்டால் பொய் சொல்லாமல் உண்மையை படபடவென கொட்டி தீர்ப்பது,  கோயில் பூஜையின் போது உக்கிரமாக ஆடுவது அதுவே படத்தின் இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளில் ஆக்ரோஷ வெறியாட்டத்திற்கு வித்திட்டு திரும்புமுனை ஏற்படுவது,  கருணாவின் செயல்களுக்கு தவறு என்பது தெரிந்தும் துணை போவது, அதன் பின்னர் தன் காதலி, ஆதியின் குடும்பம் படும் துன்பத்தை பார்த்து கெஞ்சுவது மற்றும் ஆக்ஷன் களமுடன் க்ளைமேக்ஸ் காட்சி என்று சூரியின் இன்னொரு திறமையை படம் முழுவதும் பார்த்து பரவசமடையலாம். சூரியின் அபரிதமான உண்மையான உழைப்பிற்கு பல விருதுகள் காத்திருக்கிறது.

கிராமத்து மனிதராக, நண்பனை நம்பி மோசம் போகும் பாசக்கார ஆதியாக சசிக்குமார் வாழ்ந்திருக்கிறார். இவரின் நற்செயல்களை மறக்கும் நண்பனின் கையாலேயே உயிர் விடும் போது பரிதாபத்தை அள்ளுகிறார்.

ஜமீன் பரம்பரை வாழ்க்கையை தொலைத்து செங்கல் சூளை நடத்தி வசதியாக வாழ ஆசைப்படும் கருணாவாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தன் மனைவி, மைத்துனனின் சொல் கேட்டு தடம் மாற, நண்பனை பகையாக பார்க்க, பணத்தாசையால் விபரீதமாக செயலை செய்து அதைப்பற்றி கவலைப்படாமல் வில்லத்தனத்தில் படம் முழுவதும் மிரட்டியுள்ளார்.

சூரியன் கிராமத்து காதலியாக ரேவதி ஷர்மா நன்றாக செய்துள்ளார். சசிக்குமார் மனைவியாக ஷிவதா, முதலில் முக்கியத்துவம் இல்லாமல் காட்டப்பட்டாலும் இடைவேளைக்கு பின் இவரின் காட்சிகள் அழுத்தமாக வடிவமைக்கப்பட்டு தன் கணவனின் கொலைக்கு நீதி கேட்டு மன்றாடும் இடங்களிலும் அழுது புரண்டு சாபம் ஈடும் காட்சியிலும் தனித்து நின்று ஸ்கோர் செய்கிறார். கணவனை தூண்டி விட்டு வெறுப்பை சம்பாதிக்கும் உன்னியின் மனைவியாக ரோஷினி ஹரிப்ரியன்.

முதல் காட்சியில் இவரின் விவரிப்பில் தொடங்கும் கதைக்களம், அமைச்சருக்கு ஆதரவாக இக்கட்டில் மாட்டிக் கொண்டு பின்னர் அதையே பகடையாக வைத்து சூரியை வெளிக்கொணர பயன்படுத்தும் இன்ஸ்பெக்டராக சமுத்திரக்கனி, நக்கல், அதிகார திமிருடன் அமைச்சராக ஆர்வி உதயகுமார், தியேட்டர்காரராக மைம் கோபி, உன்னியின் பாட்டியாக அசத்தலான நடிப்பில் வடிவுக்கரசி, உன்னியின் மச்சானாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், இவரது மனைவியாக பிரிகிடா, தந்தையின் சாவிற்கு பழி வாங்க துடிக்கும் ஆதியின் மகன் மற்றும் பலர் படத்திற்கு அச்சாணி.

படம் முழுவதும் தன் இசையால் அனைத்து காட்சிகளுக்கும் உயிர் கொடுத்து அதிரடி ஆக்ஷன் துரத்தல் நிறைந்த இடைவேளைக் காட்சிகளும், அதன் பின் நடக்கும் பழி வாங்கும் மிரட்டலுடன் கூடிய க்ளைமேக்ஸ் காட்சிகளில் அசத்தியுள்ளார் யுவன்ஷங்கர் ராஜா.

ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு கதைக்கேற்ற கிராமத்து மண் வாசனையுடன், பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள், துரோகங்கள், பழி வாங்கும் இடங்கள் என்று நேர்த்தியாக கையாண்டு தன் திறமையை வெளிப்படுத்தி அதகளம் செய்துள்ளார்.

விறுவிறுப்பை பஞ்சமில்லாமல் தந்திருக்கும் பிரதீப் ஆ.ராகவ்வின் படத்தொகுப்பு.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றும் சேர்ந்து இரண்டு நண்பர்களை எவ்வாறு பிரிக்கிறது, அதற்கு பலிகாடாகும் நண்பனின் விசுவாசி என்று கதைக்களத்தையமைத்து அதில் சூழ்ச்சி, பகை, துரோகம், அரசியல் கலந்து கிராமத்து கறி விருந்தாக படைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். படத்தில் நடித்த சசிகுமார், உன்னி முகந்தன், சூரி ஆகியோரின் கதாபாத்திரங்கள் முக்கியத்துவத்துடன் சரிசமமாக அமைத்து மற்ற சிறு வேடங்கள் என்றாலும் கதைக்கேற்றவாறு கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு கொடுத்திருந்தாலும் ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தியிருப்பதை குறைத்திருந்தால் குடும்பத்துடன் பார்க்க கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் அசத்தலான கதைக்களம், நேர்த்தியான பாத்திரப்படைப்பு, திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி சாமர்த்தியத்துடன் ஒருங்கிணைத்து வெற்றி வாகை சூடியிருக்கும் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள். இவரின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்புக்கு கிடைத்த மெகா வெற்றி. “கடைசியில நாயா இருந்த என்னைய உன்ன மாதிரி மனுசனா மாத்திட்டியே”  என்ற க்ளைமேக்ஸ் வசனம், படம் முடிந்த பிறகு வரும் “நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்ற எண்ட் கார்ட் பளீர் வசனம் படத்திற்கு ப்ளஸ்.

மொத்தத்தில் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் தயாரித்திருக்கும் கருடன் கிராமத்து நட்பு, பகை, நயவஞ்சகத்திற்கு எதிராக உண்மை விசுவாசியின் விஸ்வரூப உக்ரதாண்டவம்.