கண்ணப்பா சினிமா விமர்சனம்

0
695

கண்ணப்பா சினிமா விமர்சனம் : கண்ணப்பா பிரம்மாண்ட பக்தி பரவசத்தில் திக்குமுக்காட வைக்கிறது | ரேட்டிங்: 3.5/5

டிவென்டி ஃபோர் ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் எம். மோகன் பாபு தயாரித்திருக்கும் கண்ணப்பா படத்தை இயக்கியிருக்கிறார் முகேஷ் குமார் சிங்.

இதில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத் குமார், கஜல் அகர்வால், அர்பிட் ரங்கா, பிரம்மனந்தம், சிப்தகிரி, முகேஷ் ரிஷி, மாதுபாலா, அஹரி பாபர்யா, பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, சுரேங்கா வான், ப்ரீத்தி முகுந்தன், கௌசல் மற்றும் ஆதர்ஸ் ரகு ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-கதை திரைக்கதை: விஷ்ணு மஞ்சு, ஒளிப்பதிவாளர்: ஷெல்டன் சாவ், இசை இயக்குனர்: ஸ்டீபன் தேவாஸி, எடிட்டர் -அந்தோனி கோன்சால்வெஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர்: சின்னா, நிர்வாக தயாரிப்பாளர்: வினய் மகேஸ்வரி ஆர். விஜய் குமார்,ஸ்டண்ட் மாஸ்டர்: கெச்சா காம்ஃபக்டி, நடன அமைப்பு: பிரபுதேவா, பிரிந்தா, கணேஷ், டிஐ ஒலி கலவை: அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், இசை லேபிள்: டி-சீரிஸ், பிஆர்ஒ- ஹஸ்வத் சரவணன் சாய் சதீஷ்

2-ம் நூற்றாண்டில்  கதைக்களம் தொடங்குகிறது. தற்போதைய காளஹஸ்தி என்று​ அழைக்கப்படும் உடுமூர் காட்டு பகுதிகள் நிறைந்த மலை பிரதேசத்தில் சிறு வயதில் இருந்தே கடவுள் பக்தி இல்லாத நபராக வளரும் திண்ணன் (விஷ்ணு மஞ்சு) பெரும் வில் வித்தை நிறைந்த திடம் மிகுந்த வேடன். சிறு வயதில் தனது நண்பன் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில், கடவுள் நம்பிக்கையிழந்து,  இனிமேல், இந்த ஊரில் ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று தங்கள் இனத்தை காப்பவனாக, நாத்திகனாக வளர்கிறான். அவனின் தந்தை சரத்குமார் அந்த கிராமத்தின் (பட்டி) தலைவராக, பழங்குடி மக்களை வழி நடத்துகிறார். இந்நிலையில் மகாதேவ சாஸ்திரிகள் (மோகன் பாபு) நெடுங்காலமாக பக்கத்து மலை கிராமத்தில் (பட்டி) மற்றவர்கள் அறியாத வண்ணம் பூஜை செய்து பயபக்தியுடன் வாயு லிங்கத்தை யார் கண்ணிலும் படாதவாறு பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகிறார்.  வாயு லிங்கத்தின் மகிமையை கேள்விப்பட்டு பெரும் படைகள் வைத்திருக்கும் அரக்க குணம் நிறைந்த அர்பித் ரங்கா தன் படை ஆட்களை அனுப்பி வாயு லிங்கத்தை களவாட நினைக்கும் நேரத்தில் திண்ணாவிடம் எதிர்பாராத விதமாக சண்டை ஏற்பட அர்பித் ரங்காவின் ஆட்கள் அடிபட்டு திரும்பி செல்கின்றனர்.  இதனால் கோபமாகும் அர்பித் ரங்கா திண்ணன் வசிக்கும் பட்டியை அழிக்க படையெடுத்து வருகிறான். இதை கேள்விப்படும் திண்ணாவின் தந்தை சரத்குமார் ஐந்து பட்டி இன மக்களை ஒன்று திரட்டி வில்லனை எதிர்க்க தலைவனாக திண்ணனை தேர்வு செய்கின்றார். இதனிடையே சிவனை வழிபடும் நெமலி (ப்ரீத்தி முகுந்தன்) மீது திண்ணாவிற்கு காதல் ஏற்பட, அதனால் பட்டி பழங்குடி மக்களிடையே மோதல் எற்படுகிறது. போருக்கு ஒத்துழைக்காத மற்ற பட்டி மக்களின் விருப்பப்படி காதல் பிரச்னை காரணமாக சரத்குமார் தனது மகனை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார். தனியாக செல்லும் திண்ணா தந்தையை பிரிந்து செல்லும் மனவருத்தம் இருந்தாலும் நெமிலியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் அர்பித் ரங்கா படையெடுத்து வர சரத்குமார் மற்ற பட்டி பழங்குடி மக்களை காப்பாற்றிவிட்டு உயிரை துறக்கிறார். அப்பாவின் இறப்பை கேள்விப்படும் திண்ணா அர்பித் ரங்காவின் மொத்த படையை எதிர்கொண்டு வெற்றி காண்கிறான். இது வரை கதை திண்ணனின் வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதும், திண்ணன் யார்? அவனின் பூர்வீக தொடர்பு? சிவபெருமான் (அக்‌ஷய் குமார்) திண்ணனை சிவ பக்தனாக மாற்ற என்ன செய்தார்? சிவராத்திரியன்று திண்ணனுக்கு நடந்த சம்பவங்கள் என்ன? இறுதியில் சிவபெருமான் வைத்த சோதனையில் திண்ணன் எவ்வாறு கண்ணப்பன் ஆனார் என்பதே படத்தின் பரபரக்கும் முடிவு.

கதை, திரைக்கதை எழுதி திண்ணாவாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு படம் முழுவதும் தன்னுடைய தேர்ந்த நடிப்பும், திடாகத்திர உடல்வாகு, நீண்ட முடி என்று நடை, உடை, பாவனை நாத்திகனாக வலம் வந்த பின்னர் காதல், போர், சிவ பக்தனாக மாறும் வரை ஆணித்தரமாக நெஞ்சில் பதிந்து விடுகிறார்.இறுதியில் முப்பது நிமிடங்கள் தன்னுடைய பக்தியை மெய்பிக்க நடக்கும் சோதனையில் கண்ணை பறித்து வாயு லிங்கத்தின் கண்ணில் வைக்கும் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

சிவ பக்த சாஸ்திரிகளாக அழுத்தமான வசன உச்சரிப்பும் கம்பீரம் நிறைந்த பார்வையுடன் மோகன் பாபு அதகளம் செய்துள்ளார்.

பழங்குடி பெண் காதலியாக ப்ரீத்தி முகுந்தன் தன்னுடைய காந்த கண்கள் மற்றும் கவர்ச்சி தூக்கலுடன் படம் முழுவதும் கவனிக்க வைக்கிறார்.

சிவனின் ரூபத்தில் திருவிளையாடல்கள் செய்யும் பிரபாஸ் தீர்க்கமான பார்வை, அமைதியான பேச்சு, அர்ஜூனனின் தவத்தை கலைக்கும் மோகன்லால்,  சிவபெருமானாக அக்ஷய் குமார், தந்தையாக சரத் குமார், பார்வதி தேவியாக காஜல் அகர்வால், மிரட்டும் வில்லனாக ஆர்ப்பரிக்கும் அர்பித் ரங்கா, நகைச்சுவைக்கு  பிரம்மானந்தம், சிப்தகிரி, முகேஷ் ரிஷி, மாதுபாலா, அஹரி பாபர்யா, பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, சுரேங்கா வான், கௌசல், ஆதர்ஸ் ரகு ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக வந்து சிறப்பு செய்துள்ளனர்.

எழில் மிகு நியூசிலாந்தின் இயற்கை அழகை தன் காட்சிக் கோணங்களால் மலை பிரதேசங்களின் பின்னணியில் வரலாற்று சிறப்பு மிக்க கதைக்கு கூடுதல் சிரத்தையுடன் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஷெல்டன் சாவ்.

ஸ்டீபன் தேவாஸி இசையும் பின்னணி இசையும் ஆரம்பம் முதல் இறுதி வரை பக்தியுடன் பயணிக்க வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மூன்று மணி நேர படத்தை எடிட்டர் அந்தோனி கோன்சால்வெஸ் பணி அளப்பரியது என்றாலும், சில காட்சிகளை தவிர்த்து கச்சிதமாக கொடுத்திருக்கலாம்.

ஓலி கலவை மற்றும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் கண்களுக்கு பிரம்மாண்ட விருந்து படைத்துள்ளது.

கண்ணப்பா, பிரம்மாண்ட காட்சிகளின் ஆடம்பரத்துடன் சாதி, மத பேதமில்லாத தூய்மையான பக்தியை இந்தியா முழுவதும் உள்ள பல முக்கிய முன்னணி  நட்சத்திரங்களை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் அயராத உழைப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இயக்கியிருக்கிறார் முகேஷ் குமார் சிங். இடைவேளைக்கு முன்பாக மோகன்லாலின் என்ட்ரி, அதன் பின்னர், இறுதிக் காட்சியில் 30 நிமிடங்கள் பிரபாஸ் ருத்ராவாக  வந்து மாஸாக க்ளாஸாக படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்று விடுகின்றார். க்ளைமேக்ஸ் காட்சியில் தான் படம் விறுவிறுப்பை எட்டுகிறது. கண்ணப்ப நாயனாரின் புராண கதையை இடைவேளைக்கு பிறகு இன்னும் விரிவாக காட்டியிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் டிவென்டி ஃபோர் ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் எம். மோகன் பாபு தயாரித்திருக்கும் கண்ணப்பா பிரம்மாண்ட பக்தி பரவசத்தில் திக்குமுக்காட வைக்கிறது.