கண்ணகி விமர்சனம் : கண்ணகி வித்தியாசமான நால்வரின் பயணம் இறுதியில் இன்ப அதிர்ச்சி திருப்பங்களுடன் புதுவித அனுபவத்தை தரும் | ரேட்டிங்: 3.5/5

0
399

கண்ணகி விமர்சனம் : கண்ணகி வித்தியாசமான நால்வரின் பயணம் இறுதியில் இன்ப அதிர்ச்சி திருப்பங்களுடன் புதுவித அனுபவத்தை தரும் | ரேட்டிங்: 3.5/5

ஸ்கைமூன் என்டர்டெய்ன்மென்ட், இ ஃபைவ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எம்.கணேஷ் மற்றும் ஜெ.தனுஷ் தயாரித்துள்ள கண்ணகி படத்தை அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார்.

இதில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயி;ல்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை- ஷான் ரஹ்மான்,  ஒளிப்பதிவு -ராம்ஜி, எடிட்டர் -கே.சரத்குமார், பாடல்கள்-கார்த்திக் நேதா, கலை-குமார் கங்கப்பன், பின்னணி இசை- ஷான் ரஹ்மான் மற்றும் அர்விந்த் சுந்தர், ஒப்பனை- சண்முகம், நிர்வாக இயக்குனர்-எஸ்.வினோத்குமார், தயாரிப்பு நிர்வாகி –ஜி.கண்ணன், பிஆர்ஒ- ரியாஸ்

நான்கு பெண்களின் பெயர் கலை, நேத்ரா, நதி, கீதா இவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றி சொல்லும் படத்தில் ஆங்கில எழுத்தக்களை உள்ளடக்கிய பெயர் கண்ணகி. இதற்கும் சங்ககால கண்ணகி பெயருக்கும் சம்பந்தமில்லை. இந்த நான்கு கதாபாத்திரங்களில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா ஆகியோர் நடித்துள்ளனர்.

மயில்சாமி மற்றும் மௌனிகாவின் மகள் அம்மு அபிராமி. மௌனிகா தன் மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற பேராசையில் அம்மு அபிராமியை பெண் பார்க்க வருபவர்களை பல காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்கிறார்.இதனால் திருமணத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் அம்மு அபிராமிற்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பெரும் ஆறுதலாக இருக்கும் தந்தை மயில்சாமி ஒரு நாள் இறந்து விடுகிறார். இதனால் பேரதர்ச்சியில் உறைந்து போகும் அபிராமிற்கு அதன் பின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ஒரு பெண்ணின் கதை.

இரண்டாவது கதையில் ஐடி துறையில்; வேலை செய்து நன்றாக சம்பாதிக்கும் ஷாலின் ஜோயா எதற்கும் கவலைப்படாத தைரியமான ஜாலியான பெண். திருமண நம்பிக்கை எதுவுமில்லாமல் பிளைண்ட் டேட்டில் ஒருத்தரை தேர்ந்தெடுத்து லிவிங் டுகதர் வாழ்க்கை வாழ்கிறார். தன் காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாலும் அதை நிராகரித்துவிட்டு ஷாலின் ஜோயா தன் இஷ்டப்படி வாழச் செல்கிறார். அதன்பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் இன்னொரு கதை.

மூன்றாவது கதையில் உதவி டைரக்டராக இருந்து டைரக்டராக போராடிக் கொண்டிருக்கும் யஷ்வந்த் கிஷோர். அவரின் காதலி கீர்த்தி பாண்டியன் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக கூற அதிர்ச்சியாகும் யஷ்வந்த், இதனை எப்படியாவது கலைக்க வேண்டும் முடிவெடுக்கிறார். மருத்துவமனைக்கு செல்லும் இருவரும் மருத்துவர்கள் சிசுவை கலைக்க முடியாது என்று சொல்ல என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். அவர்கள் என்ன முடிவு செய்தார்கள்? என்பதே மூன்றாவது பெண்ணின் கதை.

நான்காவது கதையில் திருமணமான வித்யா பிரதீப் தனது கணவர் விவாகரத்து  கேட்பதாக வக்கீல் வெற்றியிடம் சொல்கிறார். முதலில் விவாகரத்து கொடுக்க மாட்டேன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உறுதியாக இருக்கும் வித்யா பிரதீப் பின்னர் வேறு வழியின்றி விவாகரத்து கொடுத்துவிடுகிறார். அதன் பின் வக்கீல் வெற்றியுடன் நட்பாக பழகுகிறார். அதன் பின் இருவரின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது? என்பதே படத்தின் நான்காவது பெண்ணின் கதை.

திருமணம் தடையாகும் ஒரு பெண், திருமணத்தை வெறுக்கும் ஒரு பெண், திருமண பந்தத்தை தொடர நினைக்கும் பெண், திருமணமாகாமல் கர்ப்பமாகும் பெண் என்று  இப்படி நான்கு பெண்கள் நான்கு வித்தியாசமான வாழ்க்கையில் வாழ,  இறுதியில் இந்த நான்கு கதையும் சந்திக்கும் பிரச்சனைகள் ஒரு கட்டத்தில் இணைகிறது? அது எவ்வாறு என்பது தான் கண்ணகி படத்தின் எதிர்பாராத க்ளைமேக்ஸ் கதை.

அம்மு அபிராமி பெண் பார்க்க ஒவ்வொரு முறையும் ஆசையோடு தயாராக அதற்காக ஒவ்வொரு செடியாக நட பின்னர் ஏதாவது ஒரு காரணத்திற்காக தடையாகும் போது உடைந்து போகும் காட்சிகள், தந்தை பாசம், தாயின் வெறுப்பு பேச்சு என்று ஒவ்வொரு காட்சியிலும் முதிர்ந்த நடிப்பை வழங்கி பரிதாபத்தை அள்ளிச் செல்கிறார்.

பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து தண்ணி, தம், லிவிங் டுகதர் என்று ஜாலியாகவும் நவயுக மாடர்ன் பெண்ணாக ஷாலின் ஜோயா நடிப்பில் அசர வைத்துள்ளார்.

வித்யா பிரதீப் அடக்க ஒடுக்கமாக குடும்பப் பெண், அதன் பின் திருமண பந்தத்திலிருந்து விடுபட்டு எடுக்கும் முடிவால் என்ன சிக்கல்களை சந்திக்கிறார் என்பதை தன் அமைதியான நடிப்பால் ஈர்த்துள்ளார்.

நான்கு மாத கர்ப்பிணியாக கீர்த்தி பாண்டியன் படம் முழுவதும் அமைதியாகவும், சோகமாகவும், என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் தவிப்பு, வலியை அழுத்தமாக தன் உணர்ச்சிபூர்வமான நடிப்பால் மனதில் பதிகிறார்.

ஷான் ரஹ்மான் இசையில் பாடல்கள் ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார். அர்விந்த் சுந்தருடன் சேர்ந்து பின்னணி இசையில் கவனிக்க வைத்துள்ளார்.

நான்கு கோணங்களில் கதை பயணிக்க அதை எந்த ஒரு முரண்பாடுகளும் தெரியாத வண்ணம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ராம்ஜி.

எடிட்டர் கே.சரத்குமார் இரண்டே முக்கால் மணி நேர படத்தை கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நான்கு வித குணமுள்ள பெண்கள், நான்கு திசையில் கதைக்களம் செல்ல, எதற்காக இந்த நான்கு பேரின் வாழ்க்கையை விவரிக்கிறார் என்பதை இறுதியில் ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்து ஒரு புள்ளியில் இணைக்கிறார் என்பதை திரையில் பார்க்கும் போது உண்மை தெரியும் அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோரின் திறமை புரியும். இது பெண்களுக்கான படம். திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை இரண்டிலும் அவர்களின் வலிகளை, உணர்ச்சிகளை, ஆசைகளை, பிரச்சனைகளை நேர்த்தியான காட்சிகள், அழுத்தமான வசனங்களால் ஆழமாக சொல்லியிருக்கும் படம்.

மொத்தத்தில் ஸ்கைமூன் என்டர்டெய்ன்மென்ட், இ ஃபைவ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எம்.கணேஷ் மற்றும் ஜெ.தனுஷ் தயாரித்துள்ள கண்ணகி வித்தியாசமான நால்வரின் பயணம் இறுதியில் இன்ப அதிர்ச்சி திருப்பங்களுடன் புதுவித அனுபவத்தை தரும்.