ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சினிமா விமர்சனம் : ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சுவாரஸ்யம் நிறைந்த திகில் தருணங்களுடன் வினோதமான மற்றும் மர்மமான திருப்பங்களின் புதிய அனுபவம் | ரேட்டிங்: 3/5
அக்ஷயா பிக்சர்ஸ் சார்பில் ராஜன் தயாரித்திருக்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்;தை எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ் வெங்கட்.
இதில் சத்தியமூர்த்தி, விஜயகுமார் ராஜேந்திரன், கோபி அரவிந்த, சுதாகர் ஜெயராமன், முனிஷ்காந்த், ஜார்ஜ் மரியன், ரித்விகா, ஹரிஜா, யாஷிகா ஆனந்த், ஆர்.எஸ்.கார்த்திக், ஷா ரா, அப்துல், கிரேன் மனோகர், அகஸ்டின், சந்தோஷ், ஜெய்சீலன், நந்தா, அஜித், சாருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் : இசை – கௌசிக் கிரிஷ், ஓளிப்பதிவு- ஜோஷ்வா ஜே பெரெஸ், எடிட்டர் – கணேஷ் சிவா, ஒலி கலவை – ஹரிஷ் குமார் , கலரிஸ்ட் – நந்த குமார் , ஸ்டண்ட் – சுரேஷ் ஹர்ஸ் பாபு, கலை இயக்குனர்- வி.சசி குமார், உதவி இயக்குனர்- ராஜா, ஞானவேல், காஸ்ட்யூம்ஸ் – ரவீந்திரன், ஒப்பனை – சண்முகம், டப்பிங் இன்ஜினியர் – ராஜேஷ், தயாரிப்பு மேலாளர் – சிவகுமார், பிஆர்ஓ – சதீஷ்குமார்.
2018ல் ஆலயம் என்ற திரையரங்கில் பலான படம் பார்க்க, டைரக்டர் கனவுடன் இருக்கும் ஐந்து பேர், ஐடியில் வேலை செய்யும் இரண்டு பெண்கள், பள்ளி மாணவர்கள், ஒரு கள்ளக் காதல் ஜோடி, ஒரு குடிகாரர் மொத்தம் 13 பேர் வருகிறார்கள். அந்த தியேட்டரில் பலான படம் ஒடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று நானும் பேய் தான் என்ற படம் ஒளிபரப்பாக அதன் பின் அமானுஷ்ய சப்தங்கள், பயமுறுத்தல்களால் அனைவரும் தியேட்டரை விட்டு வெளியே தப்பித்து செல்ல முயல்கின்றனர். ஆனால் அவர்களால் வெளியே போக முடியாமல் கேட் மூடியிருக்க, ஏறி குதித்து மறுபக்கம் செல்ல முடியாமல் மீண்டும் தியேட்டருக்குள்ளே வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்று அனைவரும் தியேட்டரை சுற்றி வந்து வேறு நபர்கள் இருக்கிறார்களா என்று தேடுகின்றனர். இந்த சமயத்தில் ஜார்ஜ் மரியனை பார்க்கிறார்கள். அவரிடம் இதற்கான காரணத்தை கேட்கின்றனர். நானும் பேய் தான் என்ற படத்தை இயக்கியது நான் தான் என்றும், தியேட்டரை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டதாக சொல்கிறார்.அதாவது 1993 ம் வருடம் ஆலயம் என்கிற திரையரங்கில் நானும் பேய்தான் என்கிற படம் வெளியான போது படம் பார்க்க யாரும் வராததால், தியேட்டர் அதிபரான முனீஷ்காந்த் பணம் கொடுத்து நான்கு பேரை படம் பார்க்க அழைக்கிறார். படம் பார்;த்து பயந்து விட்டதாகவும், படம் நன்றாக இருப்பதாகவும் வெளியே சென்று சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன நான்கு பேரை வரவழைக்கிறார். ஆனால் தியேட்டருக்கு வரும் அந்த நான்கு பேர் மர்மான முறையில் இறந்துவிடுகிறார்கள். இறந்தவர்கள் பேய்களாக தியேட்டருக்குள் உலா வருவதால் அந்த தியேட்டருக்கு யாரும் வருவதில்லை என்று ஜார்ஜ் மரியன் சொல்கிறார். அதன் பின் அவர்கள் முன் நான்கு பேய்கள் தோன்றி சில கோரிக்கைகளை முன் வைக்கிறது. அதை நிறைவேற்றினால் அனைவரும் உயிரோடு வெளியே செல்ல முடியும் என்று பேய்கள் சொல்கிறது. தியேட்டரில் மாட்டிக் கொண்டிருக்கும் அனைவரும் பேயின் கோரிக்கைகளை நிறைவேற்றினார்களா? உயிர் தப்பித்து வெளியே வந்தார்களா? நான்கு பேரும் பேயாக மாற காரணமாக இருந்தவர் யார்? பேய்களின் சோகமான கதை என்ன? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
சத்யாவாக சத்தியமூர்த்தி, விஜய்யாக விஜயகுமார் ராஜேந்திரன், கோபியாக கோபி அரவிந்த், சுதாகராக சுதாகர் ஜெயராமன், வில்லன் எம்.தர்மராஜாக முனிஷ்காந்த், கிறிஸ்டோபர் கண்ணையனாக ஜார்ஜ் மரியன், கீதாவாக ரித்விகா, ஹரிஜாவாக ஹரிஜா, இஷாவாக யாஷிகா ஆனந்த், மைக்கேலாக ஆர்.எஸ்.கார்த்திக், கோபியாக ஷா ரா, அப்துலாக அப்துல், குடிகாரன் உத்தமராஜாவாக கிரேன் மனோகர், பிரகாஷாக அகஸ்டின், சின்ராசுவாக சந்தோஷ், எஸ்.கேவாக ஜெய்சீலன், நந்தாவாக நந்தா, டிரம்ப்பாக அஜித், அரவிந்தனாக சாருகேஷ் உள்ளிட்ட பலர் கதைக்களத்திற்கு எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு யதார்த்தமாக நகைச்சுவை, திகில் கலந்த பயத்தை ஏற்படுத்துவதில் சிறப்பாக செய்துள்ளனர்.
ஜோஷ்வா ஜே பெரெஸ் தியேட்டரில் நடக்கும் அமானுஷ்ய காட்சிகளுக்கும், ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்கும், தியேட்டரைச் சுற்றி அமைத்திருக்கும் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவு மூலம் திரையரங்கின் வினோதமான சூழலைப் படம்பிடித்து லைட்டிங் மற்றும் நிழல்களின் பயன்பாடு சஸ்பென்ஸை அதிகரிக்கிறது.
ஹாரர் த்ரில்லர் கதைக்களத்திற்கேற்ற இசையும், பின்னணி இசையையும் கௌசிக் கிரிஷ் கச்சிதமாக கொடுத்துள்ளார்.
எடிட்டர் கணேஷ் சிவாவின் பங்களிப்பு அசத்தல்.
ஒரு இரவில் பலவிதமான கதாபாத்திரங்கள் புதிரான தியேட்டரில் செல்லும்போது, என்ன நடக்கிறது? அவர்கள் தப்பிக்க என்ன செய்தார்கள் என்பதே படத்தின் மையக்கருவாக வைத்து ஃபிளாஷ்பேக் பழி வாங்கும் பேய் கதையாக நகைச்சுவை கலந்து இயக்கியிருக்கிறார் ரமேஷ் வெங்கட். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் வெங்கட்.
மொத்தத்தில் அக்ஷயா பிக்சர்ஸ் சார்பில் ராஜன் தயாரித்திருக்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சுவாரஸ்யம் நிறைந்த திகில் தருணங்களுடன் வினோதமான மற்றும் மர்மமான திருப்பங்களின் புதிய அனுபவம்.