எல்.ஜி.எம் விமர்சனம்: இந்த காதல் கலந்த திருமண பந்தம் நிறைந்த முன்யோசனை பயணத்தை அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் ரசிக்கலாம் | ரேட்டிங்: 3.5/5

0
1035

எல்.ஜி.எம் விமர்சனம்: இந்த காதல் கலந்த திருமண பந்தம் நிறைந்த முன்யோசனை பயணத்தை அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் ரசிக்கலாம் | ரேட்டிங்: 3.5/5

தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் டெல்டா ஸ்டியோஸ் சார்பில் கிரிக்கெட் வீரர்; தோனி மற்றும் சாக்ஷி தோனி தயாரிப்பில் பெரும் வரவேற்பு பெற்று வெளியாகியிருக்கும் படம் ‘எல்.ஜி.எம்’ (டுநவள புநவ ஆயசசநைன).இப்படத்தின் கதை, திரைக்கதை, இசை, பாடல்கள், பின்னணி இசையமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு விடிவி கணேஷ், ஸ்ரீநாத், விநோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், ஹரி முனியப்பன், சாண்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : விஸ்வஜித்,எடிட்டிங் : பிரதீப், ராகவ், கலை-அருண்; வெஞ்சராமுடு, கிரியேட்டிவ் தயாரிப்பாளர்- பிரியன்ஷ_ சோப்ரா, தயாரிப்பாளர்- விகாஸ் ஹசிஜா, மக்கள் தொடர்பு : யுவராஜ்

கௌதம் (ஹரிஷ் கல்யாண்) மற்றும் மீரா (இவானா) இரண்டு வருட காதல் டேட்டிங்கிற்கு பிறகு ஒருவருக்கொருவர் பெற்றோரிடம் தங்களது காதல் பற்றி சொல்லி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். கௌதமின் அம்மா லீலாவும் (நதியா), மீராவின் பெற்றோரும் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்து ஒன்றாக சந்திக்கின்றனர். திருமண சம்பந்தம் நடைபெறும் மீராவின் வீட்டில் கௌதமின் தாயார் லீலாவை பார்த்தவுடன் வீட்டைப் பகிர்ந்து கொள்வது பற்றி மீராவுக்கு அச்சம் ஏற்படுகிறது. கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என மீரா தெரிவிக்க இதனால் திருமண பேச்சு ஆரம்பித்த சில நொடிகளில் நின்று போகிறது. ஆனால் கௌதமை விரும்புவதால் மீரா ஒரு யோசனை சொல்கிறாள். திருமணத்திற்கு முன் கௌதமின் தாயை புரிந்து கொள்ள விரும்பி ஒரு குடும்பப் பயணத்தை ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லும் யோசனையை அவள் முன்மொழிகிறாள். அதற்கு கௌதம் ஒப்புக்கொள்கிறான்.மீரா தன் பெற்றோரிடம் உண்மையை சொல்லி பயணத்திற்கு அழைத்து வருகிறாள். ஆனால் கௌதம் தாய் லீலாவிடம் அலுவலக பயணம் என்று பொய் சொல்லி அழைத்து வருகிறான். இதனால் ஏற்படும் குழப்பத்தால் லீலாவிற்கும் மீராவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதை கௌதம் எப்படி சமாளித்தான்?  அதன் பின் என்ன நடந்தது? கௌதம் மீராவை திருமணம் செய்தானா? மீரா லீலா பிரச்சனை தீர்ந்ததா? என்பது தான் எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்.

இளசுகளின் கனவு நாயகனாக ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் இவானாவின் காதலனாக, நதியாவின் மகனாக யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற குழப்பத்தில் சிக்கி தவிக்கும் இன்றைய இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அடக்கி வாசித்து கௌதமாக முதல் பாதியில் இருக்கும் முக்கியத்துவம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றாலும் தன்னுடைய பங்களிப்பை முழுவதுமாக கொடுத்து அசத்தியுள்ளார்.

இவானாவின் இந்த ஆட்டிட்யூட்  இன்றைய இளம் பெண்களின் மனோநிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். இவரின் கேள்வியின் விடை தான் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறது. இவர் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக, யாரையும் நம்பி வாழாமல் தனித்தே வாழ்ந்து பழகும் பெண் எப்படி நடந்து கொள்வோரோ அப்படியே செய்துள்ளார். தனக்கு சரி என்று பட்டதை சட்டேன்று சொல்லும் பெண்ணாக, மாமியாரை புரிந்து கொள்ள மெனக்கெடும் மருமகளாக, மாமியாரின் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் காட்டும் ஈடுபாடு, மீராவாக படம் முழுவதும் சின்ன சின்ன மேனேரிசத்தால் கிரங்கடித்து படம் முழுவதும் அழகான பட்டாம்பூச்சியாக பறந்து சிறகடித்து ஜோலிக்கிறார்.

நதியாவின் ஆர்ப்பரிக்கும் நடிப்பு முதல் பாதி கம்பீரத்துடன் முதர்வை பிரதிபலிக்க, இரண்டாம் பாதி இளமை துள்ளலுடன் ஆட்டம், பாட்டம் என்று அதகளம் பண்ணியுள்ளார். மகனுக்காக தன் இன்ப துன்பங்களை பறி கொடுத்த உன்னதமான தாயாக வாழ்ந்திருக்கிறார். இவானாவும் நதியாவும் தான் படத்தின் மொத்த பலமும். இவர்களின் கூட்டணி படத்திற்கு ப்ளஸ்ஸாக விளங்கியுள்ளது.

யோகி பாபு வண்டி ஒட்டுனராக பஞ்ச் வசனம் பேசி தனக்குரிய பங்களிப்பால் கலகலக்க வைத்துள்ளார். நண்பராக ஆர்ஜே விஜய் அறிவுரை செய்து கொண்டே நண்பனுக்கு உதவிகள் செய்து காமெடி கலந்த பேச்சாற்றலால் கவனிக்க வைக்கிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், விநோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், ஹரி முனியப்பன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக சில காட்சிகள் வந்து செல்கின்றனர்.

காட்சிக் கோணங்களில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் ஒளிப்பதிவாளர் விஸ்வஜித்.

இரண்டாம் பாதியில் தேவையற்ற சில காட்சிகள், பாடல்களை நீக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் எடிட்டர்கள் பிரதீப், ராகவ்.

கதை, திரைக்கதை, இசை, பாடல்கள், பின்னணி இசையமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி. ஒரு மருமகள் தனது வருங்கால மாமியாரைப் பற்றி தெரிந்துகொள்ள பயணம் மேற்கொண்டு பழகி பார்க்க முயற்சிக்கும் கருத்து சுவாரஸ்யமாக முதல் பாதி காதல், குடும்பம் என்ற கட்டமைப்பில் செல்ல, அதன் பின் இரண்டாம் பாதி தாறுமாறான அட்வென்சர் பயணமாக சென்று இறுதியில் திருமணத்திற்கு சம்மதிப்பதாக சுபமாக முடித்துள்ளார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.

மொத்தத்தில் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் டெல்டா ஸ்டியோஸ் சார்பில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சாக்ஷி தோனி தயாரிப்பில்; ‘எல்.ஜி.எம்’ (Lets Get Married) Lets Go to the Movie & enjoy in Theatres. இந்த காதல் கலந்த திருமண பந்தம் நிறைந்த முன்யோசனை பயணத்தை அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் ரசிக்கலாம்.