என் காதலே சினிமா விமர்சனம் : என் காதலே வெளிநாட்டு காதல் மோகத்தால் ஏற்படும் விபரீத மோதல் | ரேட்டிங்: 3/5
ஸ்கை வான்டர்ஸ்; என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் என் காதலே.
இதில் லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-நிர்வாக தயாரிப்பாளர் – காட்பாடி ராஜன், ஒளிப்பதிவு – மூடர்கூடம் புகழ் டோனி ஜான், இசை – சாண்டி சாண்டெல்லோ, எடிட்டிங் – தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா, பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி , பாடியவர்கள் – ஸ்வேதா மோகன், சைந்தவி, ஸ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ) , அனிதா ஷேக், மக்கள் தொடர்பு – வேலு
காரைக்கால் மீனவ குப்பத்தில் பெரிய மனிதராக வலம் வருபவர் மதுசூதனன். அவரின் தங்கை மகன் லிங்கேஷ். சிறு வயதில் சுனாமி பேரலையில் பெற்றோரை பறி கொடுக்கும் லிங்கேஷை தன் சொந்த மகன் போல் பாசம் காட்டி வளர்கிறார் மாமன் மதுசூதனன். மாமன் மகள் திவ்யா லிங்கேஷ் மீது அளவு கடந்த பாசத்தை வைத்து, அவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு வளர்கிறார். லிங்கேஷ் மாமன் குடும்பத்தை தன் குடும்பமாக நினைத்து பாசத்துடன் இருந்து மீன்பிடி தொழிலையும் வெற்றிகரமாக செய்து வருகிறார். இந்நிலையில் மீனவ சமுதாயத்தை பற்றி ஆய்வு செய்து தெரிந்து கொள்ள லண்டனிலிருந்து லியா மற்றும் அவரது நண்பர்கள் காரைக்காலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யுமாறும், ஊரை சுற்றிக் காட்டி அவர்களின் வாழ்வியலை புரிகிறமாதிரி சொல்லும்படி மாமன் லிங்கேஷிடம் கூறுகிறார். வெளிநாட்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், தமிழக கலாச்சாரத்தை பற்றி சொல்ல லிங்கேஷ் இவர்களுடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. முதலில் லிங்கேஷின் நடவடிக்கையை பிடிக்காத லியா பின்னர் அவரின் குணாதிசயங்களில் ஈர்க்கப்பட்டு காதல் வயப்படுகிறார். இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இந்த காதல் விஷயம் மெல்ல திவ்யாவுக்கு தெரிய வர லிங்கேஷ்-லியா காதல் பேரிடியாக இருக்கிறது.அதே சமயம் திவ்யா தன்னை காதலிப்பதை அறிந்து அதிர்ச்சியாகும் லிங்கேஷ் காதலை ஏற்க மறுக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட மாமன் மதுசூதனன் லிங்கேஷ்-லியா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் காதலை பிரிக்க ஊர் பஞ்சாயத்தை கூட்டி பிரித்து விடுகிறார். அதன் பின் லியாவிற்கு என்ன நடந்தது? திவ்யா- லியா இருவரில் லிங்கேஷ் யாரை திருமணம் செய்து கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
மீனவ இளைஞராக லிங்கேஷ் சில காட்சிகள் தான் மீன்பிடி தொழிலை செய்பவராக வருவதும், அதன் பின் டீக்காக உடையணிந்து நவநாகரீக மனிதராக வெளிநாட்டினருடன் பயணிப்பதுடன் முக்கோணக்காதலால் சிக்கித் தவிக்கும் இடங்களிலும், காதலியை பிரிந்து தவிக்கும் காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மாமன் மகளாக திவ்யா காதலை சொல்ல தவிப்பதும், மாமனின் காதலை கேள்விப்பட்டு வெளிப்படுத்தும் கோபம், ஆற்றாமையால் கதறி துடிப்பதும், காதலுக்காக இறுதியில் எடுக்கும் முடிவு என்று கிராமத்து பெண்ணாக அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய வரும் வெளிநாட்டு காதலியாக லண்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகை லியா காதலிக்க மொழி தடையில்லை என்பதை நிரூபித்து தட்டுத் தடுமாறி தமிழ் பேசும் அழகும், தன் காதலனை நினைத்து உருகும் காட்சிகள், தன்னால் பிரச்சனைகள் ஏற்படும் போது கனத்த இதயத்துடன் விலகிச் செல்வது என்று அழகு பதுமையாக படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளார்.
மீனவ தலைவராக மதுசூதனன், வில்லனாக காட்பாடி ராஜன், தர்ஷன், மாறன், கஞ்சா கருப்பு ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளுக்கு தங்களது பங்களிப்பை கொடுத்து விறுவிறுப்பாக்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் டோனி ஜான் கடல் மற்றும் கடல் சார்ந்த இடங்களையும் கண்களுக்கு இதமாக கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் சாண்டி சாண்டெல்லோ பாடல்கள் புரியும்படி இசையமைத்து, பின்னணி இசையிலும் அசத்தியுள்ளார்.
படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா இரண்டாம் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மீனவ இளைஞனின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலால், தன் சொந்தத்தின் வெறுப்பினை சம்பாதித்து துயரப்படும் திரைக்கதையில் இறுதியில் திருப்பத்துடன் முடித்து முக்கோணக் காதலை வித்தியாசமான அணுகுமுறையுடன் தோய்வில்லாமல்p சிறப்புற இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.
மொத்தத்தில் ஸ்கை வான்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்திருக்கும் என் காதலே வெளிநாட்டு காதல் மோகத்தால் ஏற்படும் விபரீத மோதல்.