உடன்பால் விமர்சனம் : உடன்பால் பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே நடக்கும் பாசப்போராட்டமல்ல பணப்போராட்டம் | ரேட்டிங்: 3/5
டி கம்பெனி சார்பில் கே.வி.துரை தயாரிப்பில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் ஸ்ரீனிவாசன்.உடன்பால் படத்தை ஆஹா தமிழ் ஒரிஜினல் டிஜிட்டல் தளத்தில் கண்டு களிக்கலாம்.
இதில் லிங்கா, அபர்நிதி, விவேக் பிரசன்னா, சார்லி, காயத்ரி, தனம், தீனா, மாஸ்டர் தர்ஷித் சந்தோஷ், எஸ்.மான்யஸ்ரீ, மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை: சக்தி பாலாஜி, ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர், எடிட்டர்-ஜி.மதன், கலை மாதவன், கதை – ராகவேந்திரன், கார்த்திக் ஸ்ரீனிவாசன், உடை- வைசாலி ரவிசெல்வம், ஒப்பனை-ஷண்முகம், தயாரிப்பு நிர்வாகி-சரத் நிவாஸ், கே.வி.மோதி, பிஆர்ஒ: சதீஷ் ( ஏய்ம்ஸ்)
அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேனாக வேலை செய்யும் விநாயகம் (சார்லி)க்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் காயத்திரி திருமணமாகி வேலையில்லா கணவர் முரளி (விவேக் பிரசன்னா) மற்றும் மகள் நிலாவுடன் (எஸ்.மான்யஸ்ஸ்ரீ) வெளியூரில் வாழ்ந்து வருகின்றார். தன் தந்தை கவனித்து வந்த சினிமா சிடிக்கள் விற்கும் கடையை லிங்கா எடுத்து செய்து வரும் நிலையில் மனைவி பிரேமா(அபர்நிதி) மகன் விகான் பேபி(மாஸ்டர் தர்ஷித் சந்தோஷ்) மற்றும் தந்தை சார்லியுடன் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இன்னொரு மகன் பார்த்திபன்(தீனா) விநாயகம் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி கொஞ்சம் வசதியோடு வாழ்கிறார்.லிங்கா தொழில்நுட்ப வளர்ச்சியால்; கடை வியாபாரத்தில் நஷ்டத்தை அடைந்து பல லட்சங்கள் கடன்காரன் ஆகிறார். மகன்,மகள் இரு குடும்பங்களும் பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் கடன் பிரச்சனையோடு வாழ்ந்து வருகின்றனர். அண்ணன், தங்கை இருவரும் தங்களுடைய கடன் பிரச்சனைகள் தீர தாயின் நினைவு நாளன்று தன் தந்தை சார்லியிடம் வசிக்கும் வீட்டை விற்று பணம் கொடுத்தால், சிரமம் தீர்ந்து விடும் என கேட்கின்றனர். ஆனால் சார்லி தான் வாழும் வீட்டை விற்கமாட்டேன் என திட்டவட்டமாக மறுத்து விட்டு வேலைக்குச் செல்கிறார். அந்த நேரத்தில் சார்லி வேலை செய்யும் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழ எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த ஈடுபாடுகளில் சிக்கி தன் தந்தை சார்லியும் இறந்து விட்டதாக எண்ணி விடுகின்றனர் லிங்காவும், காயத்ரியும்.அந்த சமயம் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக டிவியில் அறிவிப்பு வெளியாகிறது. இதைப் பார்த்த விநாயகத்தின் பிள்ளைகள் இழப்பீட்டு தொகையை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள முடிவெடுக்கின்றனர். அந்த நேரம் பார்த்து சார்லி உயிரோடு வீட்டிற்கு திரும்பி வர அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். சாhலி வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் எதிர்பாராமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார். இதைச் சற்றும் எதிர்பாராத பிள்ளைகள் அதிர்ச்சியடைந்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கின்றனர். அது என்ன? அண்ணன் – தங்கை பிரச்சனை தீர்ந்ததா? வீடு விற்கப்பட்டதா? இறந்த தந்தையை என்ன செய்தனர்? என்பதே மீதிக்கதை.
தந்தை விநாயகமாக சார்லி கடின உழைப்பாளியாக பிள்ளைகளிடம் பாசம், பேரன், பேத்தியிடம் அதீத அன்பு என்று ஒரு நடுத்தர குடும்பத்து தலைவனாக வாழ்ந்தாலும், அவரின் பிள்ளைகளின் பணத்தாசையால் நேரும் சோகம் இறுதிக் காட்சிகளில் கண்களை குளமாக்கிவிடுகிறார். சிறந்த பாத்திரப்படைப்பு கச்சிதம்.
மூத்த மகனாக லிங்கா கடன்காரனாக தவிப்பதும், அதை தீர்க்க அவர் எடுக்கும் முடிவால் ஏற்படும் சிக்கல்கள் என்று இயல்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
விவேக் பிரசன்னா, காயத்ரி, அபர்ணதி, சார்லியின் அக்காவாக வரும் தனம் ஆகியோர் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி இயல்பான நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளனர். மாஸ்டர் தர்ஷித் சந்தோஷ் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.எஸ்.மான்யஸ்ரீ, சார்லியின் இரண்டாவது மகனாக வரும் தீனா, ஒரு காட்சியில் வந்தாலும் அந்த முக்கிய காட்சியில் வரும் மயில்சாமி ஆகியோர் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
சக்தி பாலாஜியின் இசையால் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
மதன் கிறிஸ்டோபர் பாழடைந்த பழைய வீட்டின்; அமைப்பை வைத்துக்கொண்டு காட்சிக்கோணங்களையமைத்து தோய்வின்றி காட்சிகளை நகர்த்தி அசத்தலாக ஒளிப்பதிவு செய்திருப்பதிலேயே அவருடைய திறமை பளிச்சிடுகிறது.
எடிட்டர்-ஜி.மதன், கலை-மாதவன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
கடனால் கஷ்டப்படும் பிள்ளைகள், எதிர்பாராமல் இறக்கும் தந்தையின் பிணத்தை வைத்துக்கொண்டு பணத்தை அபகரிக்க திட்டம் போடும் சூழ்ச்சி நிறைந்த திரைக்கதையை தன்னுடைய விறுவிறுப்பான இயக்கத்தால் அதிர செய்துள்ளார் கார்த்திக் ஸ்ரீனிவாசன். ராகவேந்திரன், இயக்குனர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து எழுதிய கதைக்களம். அதை குடும்ப செண்டிமென்ட் காட்சிகளுடன் இணைத்து, தாதாவை ஏதோ செய்து விட்டார் தந்தை என்பதையறிந்து மகன் பார்க்கும் பார்வை ஒராயிரம் அர்த்தத்தை சொல்லுகிறது. பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் பிள்ளைகள், அனாதையாக எங்கோ கிடக்கும் தந்தை உடல் என்று ஒவ்வொரு காட்சிகளையும் பரபரப்பாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கும் இயக்குனர் கார்த்திக் ஸ்ரீனிவாசனுக்கு பாராட்டுக்கள். பணத்திற்காக தான் செய்யும் தவறான செயல் தனக்கே எதிர்காலத்தில் நடக்கும் என்பதை உணராத மனிதர்கள் வாழ்க்கையைச் சுற்றி படம் வந்துள்ளது.
மொத்தத்தில் டி கம்பெனி சார்பில் கே.வி.துரை தயாரிப்பில் உடன்பால் பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே நடக்கும் பாசப்போராட்டமல்ல பணப்போராட்டம்.இப்படத்தை ஆஹா தமிழ் ஒரிஜினல் டிஜிட்டல் தளத்தில் கண்டு களிக்கலாம்.