இறுகப்பற்று  திரைப்பட விமர்சனம் : இறுகப்பற்று மூன்று நகர்ப்புற திருமண ஜோடிகளின் உறவுகளை சிக்கல்களை அலசுகிறது | ரேட்டிங்: 3.5/5

0
267

இறுகப்பற்று  திரைப்பட விமர்சனம் : இறுகப்பற்று மூன்று நகர்ப்புற திருமண ஜோடிகளின் உறவுகளை சிக்கல்களை அலசுகிறது | ரேட்டிங்: 3.5/5

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் ஆகியோர் இப்படத்தை தயாரித்து யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் இறுகப்பற்று.

இதில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீPநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “இறுகப்பற்று”.

மல்டி ஸ்டாரர் படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன். ஒளிப்பதிவு கோகுல் பெனாய், படத்தொகுப்பு ஜேவி மணிகண்ட பாலாஜி. கலை  இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்கள் பூர்ணிமா ராமசாமி மற்றும் ஏகன் ஏகாம்பரநாதர், மக்கள் தொடர்பு ஜான்சன்.

தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் பலவிதமானவை. தனிகுடுத்தனம் நடத்தும் மூன்று திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களின் உறவுகளை முறித்துக் கொள்ள அச்சுறுத்துகின்றன. அவர்கள் ஒன்றாக இருக்க ஒரு இறுகப்பற்று காரணத்தைக் கண்டுபிடிக்க முடியுமா? இது தான் படத்தின் ஒன்லைன்.

ஒரு நடுத்தர வர்க்க ஜோடி, ரங்கேஷ் (விதார்த்), ஒரு ஐடி ஊழியர் மற்றும் அவரது இல்லத்தரசி பவித்ரா (அபர்நதி).கர்ப்பத்திற்குப் பிறகு பவித்ராவின் எடை அதிகரிக்க ரங்கேஷ் எடை குறைக்க அறிவுரை சொல்ல, அதை பொருட்டாக மதிக்காத மனைவியை இழிவுபடுத்துகிறார். இவர்களுக்குள் ஏற்படும் சண்டை முடிவுக்கு கொண்டு வர விவாகரத்து தான் ஒரே வழி என்று நம்புகிறார். இதனை ஏற்காமல் பவித்ரா கணவனிடம் மன்றாடுகிறார். அடுத்த ஒரு இளம் ஜோடி இருபது வயதுடைய அர்ஜுன் (ஸ்ரீ) மற்றும் திவ்யா (சானியா ஐயப்பன்) ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்குள்ளும் எட்டிப் பார்க்கும் ஈகோ பிரச்சனையால் அவர்கள் கொண்டிருந்த காதல் எங்கே காணாமல் போனது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடு பிரிவதற்கு காரணமாக, திவ்யா விவாகரத்து கேட்கும் அளவிற்கு சென்று விடுகிறது.இந்த இரு ஜோடிகளும்  திருமண உளவியல் ஆலோசகர் மித்ராவை சந்தித்து தங்கள் பிரச்சனையை எடுத்துரைக்க சில அறிவுறைகளை சொல்லி அனுப்புகின்றார். மித்ரா (ஷ்ரத்தா ஸ்ரீPநாத்)  தன்னிடம் ஆலோசனைக்கு வரும் ஜோடிகளின் காரணங்களை தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றாமல் பார்த்துக் கொண்டு அனுசரித்து தன் கணவன் மனோகருடன் (விக்ரம் பிரபு) சண்டை சச்சரவின்றி வாழ்கிறார். சில சமயங்களில் வீட்டில் உளவியல் பாடங்களை எடுத்தாலும் அதையெல்லாம் பொருத்துக்கொண்டு அமைதியான ரொமென்டிக்கான கணவராக வலம் வருகிறார் மனோகர். ஆனால் அதுவே கொஞ்ச காலத்தில் வெறுப்பாக மாறத் தொடங்குகிறது. மனைவி மித்ராவின் நடவடிக்கை ஒரு வித செயலியின் வெளிப்பாடு என்பதை கண்டறியும் மனோகருக்கு மனைவியின் உண்மையான முகம் என்ன என்பதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுவே இருவருக்குள்ளும் சண்டையாக உருவெடுக்க, தன் குடும்பத்தையே உடையாமல் பார்த்துக் கொள்ள தடுமாறுகிறார் மித்ரா. திருமண வாழ்க்கையில் போராடும் இந்த மூன்று ஜோடிகளும் தங்கள் உறவுகளில் காதலை மீண்டும் கண்டுபிடிக்க அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறதா என்பதே படத்தின் மீதமுள்ள கதை.

முன்னணி ஜோடிகளைப் பொறுத்தவரை, வசதியான வாழ்க்கையும்,நேர்த்தியுடன் புதுப்பாணியான ஆடைகளுடன் மிளிரும் ஜோடி மித்ரா-மனோகர், ஷ்ரத்தா – விக்ரம் பிரபு. இவர்களின் வாரத்திற்கு ஒரு முறை கையாளும் ஹானஸ்ட் அவர்  கடைப்பிடிப்பு, தங்கள் குறைகளை சரி செய்ய எடுக்கும் நேர்மைக்கான முன்ஏற்பாடு. ஆனால் ஷ்ரத்தா விக்ரம் பிரபுவிடம் அளவுக்கதிகமாக வசனம் பேசியே பாடம் எடுத்து அலுப்பை ஏற்படுத்தி விடுவது நமக்கே பொறுமை இழந்து விடுகிறது. அளவான நடிப்பை வெளிப்படுத்தி தன் ஆதாங்கத்தை கொட்டும் க்ளைமேக்சில் ரசிக்க வைக்கிறார் விக்ரம் பிரபு. பெரும்பாலும் சிரித்த முகத்துடன் பொறுமையாக குறைகளை கேட்கும் ஷ்ரத்தா தன் பிரச்சனையில்; குழப்பத்துடன், சண்டையின் போது உடைந்து போகும் இடங்களில் தனித்து தெரிகிறார்.

ரக்னேஷ்-பவித்ராவாக விதார்த் – அபர்ணதி ட்ராக் மூலம் ரக்னேஷின் பிரச்சினை, முதலில் வினோதமாகவும், பேரினவாதமாகவும் தோன்றும், விதார்த்; மித்ராவிடம் தன் மனதைக் கொட்டுவதைக் கேட்கும் போது, ஆழ்ந்த தனிப்பட்ட விஷயம் திருமண பந்தத்தில் கோபத்தை ஏற்படுத்துகிறது என்பதை அந்த ஒரு காட்சியில் தன் கதாபத்திரத்தின் தன்மையை தெளிவுபடுத்தி அனுதாபத்தை அள்ளுகிறார். மேலும் அபர்நதி பவித்ராவின் அப்பாவித்தனத்தை தனது நுட்பமான உடல் மொழி மற்றும் அவரது குரல் மாடுலேஷன் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தன் கணவனுக்காக விடாமுயற்சி செய்து அவரின் ஆசையை நிறைவேற்ற எடுக்கும்  முயற்சிகளில் கை தட்டல் பெறுகிறார். ‘இருகபற்று’ படத்தில், குறிப்பாக மறைந்த மனோபாலா மற்றும் அபர்ணதி சம்பந்தப்பட்ட காட்சிகளில், தற்செயலாக இல்லாத நகைச்சுவை அதிகமாக வேலை செய்கிறது. நகைச்சுவை டைமிங்கின் காரணமாக அபர்ணதி அனைவரின் மத்தியிலும் தனித்து நின்றார்.

மறுபுறம், அர்ஜுனுக்கும் திவ்யாவுக்கும் இடையிலான உறவில் உள்ள பிரச்சனை மிகவும் தீவிரமானது. அர்ஜுன் நடத்தை ஒரு வகையான உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் போன்றது. ஆனால் இங்கேயும் இதை கையாளும் விதத்தில் ஆழம் இல்லை, மேலும் அவர்கள் ஏன் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள் மற்றும் ஏன் இந்த சிதைந்த உறவைக் காப்பாற்ற போராட வேண்டும் என்பதை இயக்குனர் நமக்கு தெளிவாகக் காட்டவில்லை. அதிர்ஷ்டவசமாக, இரண்டு இளம் நடிகர்கள் ஸ்ரீ மற்றும் சானியா ஐயப்பன் தங்கள் நடிப்பின் மூலம் இந்த கதாபாத்திரங்களை ஓரளவு கவனித்து வைக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளை உயர்த்தியுள்ளது. கோகுல் பெனாய் ஒளிப்பதிவும் ஜேவி மணிகண்ட பாலாஜி எடிட்டிங்கும் படத்திற்கு முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இயக்குனர் யுவராஜ் தயாளனின் இருகப்பற்று மூன்று திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான உறவு பிரச்சினைகளை சுற்றி வருகிறது. மூன்று கதைகளும் இணையான டிராக்குகளாக இயங்குகின்றன. சில நேரங்களில், இயக்குனர் யுவராஜ் தயாளன் ஒரு கனமான காட்சியை கவனிக்கச் செய்ய நகைச்சுவையைப் பயன்படுத்துகிறார்.  எழுத்து மற்றும் நடிப்பு இரண்டுமே நமக்குள் வாழும் உணர்வைத் தரும் அளவுக்கு விரிவாக உள்ளன. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பொதுவான உறவுகள். இந்த மூன்று ஜோடிகளின் பிரதிநிதித்துவம் உறவுகளின் மகிழ்ச்சியான கட்டங்களை சித்தரிக்கிறது மற்றும் பெரும்பாலும் தவறான தகவல்தொடர்பு காரணமாக தம்பதிகள் எப்படி மெதுவாக காதலில் இருந்து விலக ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் சொல்கிறது.  மேலும் யுவராஜ் தயாளனின் ‘இருகப்பற்று’ திரைப்படம், நவீன காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு உறவிற்கு, அன்பைப் பிடித்துக் கொள்வதும் உறவை முறித்துக் கொள்வதும் இந்த நாட்களில் விவாகரத்து என்ற கருத்து எளிதில் வந்துவிட்டது என்பதும் இதற்கு புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனோபாவம், எதிர்பார்க்கும் அன்பு, மரியாதை, அங்கீகாரம், மதிப்பு கொடுத்தால் தம்பதிகள் வாழ்க்கையை இறுகப்பற்றி சிறு பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுக்காது என்பதை புரிய வைத்துள்ளது.

மொத்தத்தில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் தயாரித்திருக்கும் இறுகப்பற்று மூன்று நகர்ப்புற திருமண ஜோடிகளின் உறவுகளை சிக்கல்களை அலசுகிறது.