இராக்கதன் திரைப்பட விமர்சனம் : இராக்கதன் ஆண்கள் மாடலிங் துறையின் மாய பிம்பம் | ரேட்டிங்: 2/5

0
407

இராக்கதன் திரைப்பட விமர்சனம் : இராக்கதன் ஆண்கள் மாடலிங் துறையின் மாய பிம்பம் | ரேட்டிங்: 2/5

மருதம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.ஜி.பாஸ்கர் மற்றும் ராணி ஹென்றி சாமுவேல் தயாரிப்பில் இளம் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் இயக்கிய திரைப்படம் இராக்கதன்.

இதில் வம்சி கிருஷ்ணா, ரியாஸ் கான், விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன்,  நிழல்கள் ரவி, காயத்ரி ரேமா , சஞ்சனா சிங், சாம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-மானஸ் பாபு ஒளிப்பதிவு, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு, பிரவீன் குமார் இசை, பாடல்கள் பாபு கிறிஸ்டியன் மற்றும் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன், இன்ப பிரகாஷ் கலைப் படைப்பு,ஸ்டண்ட் இயக்குனர் சரவெடி சரவணன், தண்டாயுதபாணி கிரியேட்டிவ் தயாரிப்பாளர், பிஆர்ஒ நிதிஷ் ஸ்ரீராம், ஜான் நரேஷ்.

அர்ஜூன், அலெக்ஸ், அனன்யா மூவரும் சிறு வயது முதலே நண்பர்கள். இதில் அர்ஜூனும் அனன்யாவும் காதலிக்கிறார்கள். அர்ஜூன் மாடலாக வேண்டும் என்பதே கனவு லட்சியமாக இருக்கிறார். இவரின் லட்சியம் நிறைவேறாமல் போக தனது சகோதரியின் திருமணத்திற்காக முடிந்த வேலைகளை செய்தாலும் நாட்டமில்லாமல் இருக்கிறார். இதனிடையே மாடலிங் பயிற்சி அளிக்கும் ஏஜேன்சியில் அழைப்பு வர மகிழ்ச்சியாக சென்னைக்கு பயணமாகிறார்.அங்கே ஏஜென்சி மேனேஜர்ஆஸ்டின் அர்ஜூனை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்கிறார். அதன் பின்னர் மாடலிங் துறையில் நுழைய பல சிக்கல்களையும், எதிர்ப்புகளையும், சமரசங்களும் கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். சென்னையில் அர்ஜூனை பார்ப்பதற்காக அலெக்ஸ் மற்றும் அனன்யா ஏஜென்சிக்கு வருகின்றனர். ஆனால் அர்ஜூனை பார்க்க முடியாமல் தவிக்கும் அனன்யாவை ஹோட்டல் அறைக்கு அனுப்பி விட்டு அலெக்ஸ் அர்ஜூனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று உள்ளே செல்கிறார். மறு நாள் காலையில் அர்ஜூன்,ஆஸ்டின் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்க, அலெக்ஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இந்த கொலைகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் அஜ்மல் நியமிக்கப்படுகிறார். இவரின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அர்ஜூனைப் பற்றியும், ஆஸ்டினைப்பற்றியும் தெரிந்து கொள்கிறார். மாடலிங் பயிற்சியில் என்ன நடந்தது? அஜ்மல் தெரிந்து கொண்ட ரகசிய தகவல்கள் என்ன? எதற்காக அர்ஜூன் கொலை செய்யப்பட்டார்? ஆஸ்டினின் உண்மையான முகம் என்ன? கொலைக்கான காரணம் என்ன? அலெக்ஸ் உயிர் பிழைத்தாரா? நண்பனை கொன்றவர்களை பழி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் வம்சி கிருஷ்ணா சிறப்பாக செயல்படும் இன்ஸ்பெக்டராக அஜ்மலாகவும், விக்னேஷ் பாஸ்கர் பாதிக்கப்பட்ட மாடல் அர்ஜூனாக, தினேஷ் கலைசெல்வன் அவரது நண்பர் அலெக்ஸாகவும், ரியாஸ் கான் மாறுபட்ட வில்லத்தனமாக ஆஸ்டினாகவும்,  நிழல்கள் ரவி, காதலி அனன்யாவாக காயத்ரி ரேமா , மாடலிங் தொழிலதிபராக சஞ்சனா சிங், சாம்ஸ் ஆகியோர் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். மானஸ் பாபு ஒளிப்பதிவும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு படத்திற்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாடலாக இருக்கும் அர்ஜுனைச் சுற்றியே படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. பெண்கள் மாடலிங் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி அறிந்திருந்தாலும் வித்தியாசமாக கவர்ச்சி துறையில் ஆர்வமுள்ள ஆண் மாடல்கள் எதிர்கொள்ளும் சுரண்டலையும், விபச்சாரம், போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் வலைகளில் விழுவதையும் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாடலிங் வாழ்க்கையில் சில தவறான வழிகாட்டுதல் பாதையில் சென்றால் நரகமாகிவிடும் என்பதை உணர்த்தும் படம். மாடலிங் உலகில் உலாவரும் மாயைகள் மற்றும் இறுதியில் ஏமாற்றம் ஆகிய இருண்ட அம்சங்களை வெளிச்சம் போட்டு காட்டி அதில் நுழையும் திறமையானவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்து அதில் மெல்லிய காதல் உணர்வுகள், நட்புகள், மோதல்கள் போன்றவற்றை முடிந்தவரை கொடுத்துள்ளார் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன்.

மொத்தத்தில் மருதம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.ஜி.பாஸ்கர் மற்றும் ராணி ஹென்றி சாமுவேல் தயாரிப்பில் இராக்கதன் ஆண்கள் மாடலிங் துறையின் மாய பிம்பம்.