ஆகஸ்ட் 16,1947 விமர்சனம் : ‘ஆகஸ்ட் 16,1947’ சுதந்தர காற்றை அனுபவிக்க மக்களின் உடல் வலிகளைவிட அவர்களின் மனவலிமையை பிரதிபலிக்கும் பிரகாசமான படம் | ரேட்டிங்: 3.5/5
ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் என்.எஸ்.பொன்குமார்;.
இதில் கௌதம் கார்த்தி, ரேவதி சர்மா, புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேஷன் ஷா, மதுசூதன ராவ், போஸ் வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு – செல்வகுமார், கலை-சந்தானம், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.
தென் தமிழ்நாட்டின் செங்காடு பெரும் மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட கிராமம் பருத்தி விளைச்சலால் புகழ் பெற்றது. ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்ய ஜெனரல் டயருக்கு அறிவுரை வழங்கிய அதிகாரிகளில் ஒருவர்,பிரிட்டிஷ் ஜெனரல் ராபர்ட் கிளைவ் (ரிச்சர்ட் ஆஷ்டன்). இந்த குற்ற தண்டனையாக செங்காடு மலைக்கிராமத்திற்கு அனுப்பப்படுகிறார். அங்கே மலைவாழ் மக்களை அடிமைகளைப்போல் நடத்தி 16 மணி நேரம் வேலை வாங்கி பருத்தி உற்பத்தி செய்து லாபம் கொழிக்க வழி செய்கிறார். ராபர்ட் கிராமவாசிகளை உடல்ரீதியாக சித்திரவதை செய்யும் போது, அவருடைய மகன் ஜஸ்டின் அங்கு இளம் பெண்களை கற்பழித்து பாலியல் வன்கொடுமை செய்கிறார். அதனால் கிராம மக்கள் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு மண்ணில் புதைப்பது அல்லது ஆண் பிள்ளை போல் மாறுவேடத்தில் வளர்கின்றனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும்போது முழு கிராமத்தின் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்று கனவு காணும் ஜமீன்தார் (மதுசூதனராவ்) மக்கள்; படும் அவலங்களை கண்டு கொள்ளாமல் சந்தேகத்திற்கு இடமின்றி ராபர்ட் மற்றும் ஜஸ்டின் விருப்பங்களுக்கு அடிபணிகிறார். செங்காட்டு கிராமத்தில் அனாதையான பரமன் (கௌதம் கார்த்திக்) ஒரு குட்டி திருடன். பல வருடங்களுக்கு முன்பு தன் தாயை இன்னொரு வன்கொடுமைக்கார பிரிட்டிஷ் அதிகாரியிடம் காட்டிக்கொடுத்ததால், பரமன் செங்காட்டு கிராமத்தினருடன் எப்போதும் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறார். அவர் நம்பும் ஒரே நபர் அவரது நண்பர் (புகழ்). இதற்கிடையில், ஜமீன்தார் (மதுசூதன் ராவ்) மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகளை தேன்மொழி (ரேவதி ஷர்மா) ஜஸ்டினுக்கு பயந்து மறைத்து வைத்து விட்டு இறந்து விட்டதாக கூறி நாடகமாடுகின்றனர். இந்த ரகசியம்; பரமனுக்கு மட்டும் தான் தெரியும். சிறுவயதிலிருந்தே ஜமீன் மகள் மேல் அன்பு செலுத்தும் பரமன் அவளுக்காக இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்கிறான். ஒரு கட்டத்தில் ஜஸ்டினுக்கு ஜமீன் மகள் தேன்மொழி உயிரோடு இருப்பது தெரிய வர அவளை அடைய ஜமீனை மிரட்டுகிறான். தேன்மொழியை உயிரோடு புதைத்து பலி கொடுக்க நினைக்கும் ஜமீனிடமிருந்து தேன்மொழியை பரமன் காப்பாற்றினானா? ஜஸ்டினை பரமன் என்ன செய்தான்? சுதந்திரம் அடைந்ததை செங்காடு மக்கள் அறிந்தார்களா? இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த பின்னரும் செங்காட்டு பஞ்சில் ஆங்கிலெயர்கள் தீட்டும் திட்டம் என்ன?.. சுதந்திரம் கிடைத்ததை மக்களிடம் இருந்து ராபர்ட் மறைத்ததிற்கான காரணம் என்ன? புரமன் தேன்மொழி காதல் கை கூடியதா? ஜமீன்தார் என்ன ஆனார்? என்பதே வரலாற்று பின்னணியோடு கேள்விகளுக்கான பதில் ஆகஸ்ட் 16 1947 படத்தின் கதையில் காணலாம்.
கௌதம் கார்த்தி அனாதை பரமனாக கிழிந்த பருத்தி ஆடை, பரட்டை தலை, அழுக்கான முகம், கழுத்தில் வளையம், கிராமமக்களின் வசைமொழிகளோடு எதற்கும் கவலைப்படாத மனோபாவத்துடன் சுற்றித் திரியும் கதாபாத்திரம். ஊர் மக்களின் சுதந்திரத்திற்காக போராடாத ஹீரோ ஆனால் காதலுக்காக யாராலும் எதிர்க்க துணியாத ஜஸ்டினை எதிர்த்து கொன்று தந்தை ராபர்ட்டையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். காதல், சண்டை, சென்டிமெண்ட் என்று அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.
நண்பனாக வரும் புகழ் பரமனுக்கு உறுதுணையாக, ராபர்ட்டிடம் பயந்து பின்வாங்கும் இடங்களிலும், சுதந்திரம் அடைந்து விட்டோம் என்பதை சொல்ல முடியாமல் நாக்கு அறுபட்டு அதை செய்கை மூலம் விவரிக்கும் இடத்தில் நகைச்சுவையும், அனுதாபத்தையும் ஒருசேர பிரதிபலித்து இந்தப் படத்தின் மூலம் கவனிக்கதக்க விதத்தில் அருமையாக செய்துள்ளார்.
ஜமீன் மகளாக காதலியாக ரேவதி சர்மா குடும்பபாங்கான முகத்துடன் நிறைவாக செய்துள்ளார்.
ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேஷன் ஷா இருவருமே வில்லத்தனத்தின் உச்சம். படம் முழுவதும் ரிச்சர்ட் ஆஷ்டன் ஆளுமையில் காட்சிகள் கதிகலங்க வைத்து மிரள வைக்கிறது.
மதுசூதன ராவ் சுயநலவாதியாக தன் மகளை காப்பாற்ற மட்டும் எடுக்கும் முயற்சிகள் இறுதியில் வினையாகி விட தப்பிக்க முடியாமல் தவிக்கும் இடங்களில் அனுதாபத்தை பெறாமல் போகிறார். இவர்களுடன் வயதான தம்பதியினரின் அன்பு, அரசு அதிகாரியாக போஸ் வெங்கட்டின் கண்டிப்பு, செங்காட்டு கிராமத்து மக்களாக வந்து போகும் முகங்கள் அனைவரும் கண் முன்னே யதார்த்தத்தை பரிதிபலித்து சித்திரவதை அனுபவிக்கும் போது மனதை நெருட வைக்கும் கதாபாத்திரங்கள்.
செல்வகுமார் எஸ்கேயின் ஒளிப்பதிவில் செங்காடு கிராமமும் அதன் மக்களும் உங்களை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு அழைத்துச் செல்லும்.மக்கள் மீதான வன்கொடுமைகளின் காட்சிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு பல நிகழ்வுகளில் மனதை உறுத்துகின்றன.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் மனதில் முணுமுணுக்க வைத்து பின்னணி இசையில் கதையோடு பயணம் புரிய கைகொடுத்திருக்கிறது.
மறைந்த டி சந்தானத்தின் கலை இயக்கம் கற்பனை கிராமத்தை உருவாக்கி, வீடுகள், ஆங்கிலேய காலத்திற்கே அழைத்துச்செல்வதும், அதிலும் மலைக்கிராமத்து மக்களின் உடைகள், அதிலும் ஒருவர் தோற்றம் தனது நீண்ட காது மடல்களில் பெரிய பூட்டுகளை அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரங்கூன் படத்திற்கு பின் ஐந்து ஆண்டுகள் கழித்து ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்திருக்கும் படம் ஆகஸ்ட் 16, 1947. சுதந்திரம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன் அந்த தகவலை பரந்த தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதில் காலனித்துவ அரசாங்கம் சில தாமதங்களைச் செய்கிறது. அதிலும் குறிப்பாக ; தகவல் தொடர்பற்ற ஒரு மலைக்கிராமத்தில் பஞ்சு உற்பத்தியில் லாபத்தை பங்கு போடும் ஒப்பந்தத்தை அவசரமாக செய்ய இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியும், அடிமைப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்படும் மக்களுக்கு சுதந்திரத்தை தெரிவிக்காமல் சுவாசிக்க அனுபவிக்க விடாமல் தடுக்கும் பிரிட்டிஷ் அதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியை முடிவு கட்டும் ஒரு இளைஞன் எவ்வாறு கிளர்ச்சி செய்து தன் காதலியையும் காப்பாற்றுகிறான் என்பதை வரலாற்று சம்பவங்களுடன் கற்பனை கலந்த உயிரோட்டமான கதையாக இயக்குனர் பொன்குமார் கொடுத்துள்ளார். சுட்டெறிக்கும் வெயில், தாகம், அவசரம் என்றால் கூட ஒரு நொடி அசைந்தாலும் கிடைக்கும் சவுக்கடி தண்டனை, இளம் பெண்களுக்கு நடக்கும் பாலியில் வன்கொடுமை, பெற்றோர்களின் இயலாமை, கதறல்கள், சுதந்திரத்திற்காக காத்திருக்கும் மக்கள், அடிமைத்தனத்தின் உக்கிரம், வன்கொடுமை காட்சிகள் என்று கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்களை யதார்த்தமாக சித்தரிப்பதில் உறுதியான நம்பகத்தன்மையான காட்சிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு பல நிகழ்வுகளில் மனதை பதற வைத்து அவலத்துடன் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் என்.எஸ்.பொன்குமார்.
மொத்தத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ சுதந்தர காற்றை அனுபவிக்க மக்களின் உடல் வலிகளைவிட அவர்களின் மனவலிமையை பிரதிபலிக்கும் பிரகாசமான படம்.