அப்பாவும் மகனும் ஒரு தரிசு நிலப்பரப்பில் பயணம் செய்வதைச் சுற்றி ‘கூழாங்கல்’ படம் சுழல்கிறது!
நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழங்கும் ‘கூழாங்கல்’ (Pebbles) திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது!
புதுமையான கதைக்களங்களை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனங்களைக் கவர்ந்த ‘கூழாங்கல்’ படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ’ரெளடி பிக்சர்ஸ்’ வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. அறிமுக இயக்குநர் வினோத்ராஜா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதை தந்த அற்புதமான உணர்வை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இந்தத் திரைப்படத்தை பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியது ‘ரெளடி பிக்சர்ஸ்’ நிறுவனம். அந்த வகையில், ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை ’கூழாங்கல்’ வென்றது. இதுமட்டுமல்லாது, கடந்த 2022 இல் 94வது ஆஸ்கர விருதுகளுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இந்தப் படம் இருந்தது மற்றும் அதே வருடம் இண்டிபெண்டண்ட் ஸ்பிரிட் அவார்டில் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் சிறந்த ஐந்து திரைப்படங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களில் அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் தேர்வாகி முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ திரைப்படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. அப்பாவும் மகனும் ஒரு தரிசு நிலப்பரப்பில் பயணம் செய்வதைச் சுற்றி ‘கூழாங்கல்’ படம் சுழல்கிறது. கதை மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையின் கடுமையான உண்மைகளின் சக்திவாய்ந்த ஆய்வு ஆகும்.
அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜா இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விக்னேஷ் குமுளை மற்றும் ஜெய பார்த்தி இருவரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்க, ஞான் ஊட் மற்றும் சிஞ்சு கலை இயக்குநராகவும், கணேஷ் சிவா படத்தொகுப்பும் செய்திருக்கிறார். ஒலி வடிவமைப்பை எம்.ஏ. ஹரிபிரசாத் கவனித்து இருக்கிறார். கருத்தடையான், செல்லபாண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்த வந்த இயக்குநர் ராம் சாருக்கு நன்றி தெரிவித்துள்ள ’ரெளடி பிக்சர்ஸ்’ நயன்தாரா-விக்னேஷ்சிவன், இந்த அப்பா-மகன் பாசப்பிணைப்பு நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.