அனுக்கிரகன் சினிமா விமர்சனம் : அனுக்கிரகன் தெய்வ அருள் பெற்ற பாலகன் தந்தையின் கஷ்டங்களை தீர்த்து மகிழ்விக்கும் வித்தகன் | ரேட்டிங்: 3/5
சக்தி சினி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருமதி. சண்முகப்ரியா முருகானந்தம் வீரராகவன் தயாரித்திருக்கும் அனுக்கிரஹன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்கிருஷ்.
இதில் எஸ்.விஜய்கிருஷ்ணா (சந்தோஷ்), முரளி ராதாகிருஷ்ணன் (கிஷோர்), ஸ்ருதி ராமகிருஷ்ணன் (சந்தோஷ் மனைவி), தீபா உமாபதி (கீதா),மாஸ்டர் ராகவன் முருகன் (இளம் வயது கிஷோர்), ஹேமன் முருகானந்தம் (இறைவன்),நிஷால் சுந்தர் (இளம் வயது சந்தோஷ்), கிஷோர் ராஜ்குமார் (கோபியாக),பாரி வாசன் (மாமன்) ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : ரேஹான், ஒளிப்பதிவு : வினோத் காந்தி, படத்தொகுப்பு : கே.எஸ்.சதீஷ் குமார், மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்.
முதல் காட்சியில் கிஷோர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தன்னுடைய உடைகளை ஒரு சாக்கு பையில் எடுத்து சென்று எரிப்பது போல் கதைக்களம் தொடங்குகிறது. அதன் பின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் விரிவடைகிறது.கிஷோர் (முரளி ராதாகிருஷ்ணன்) பெரிய கம்பெனியை நிர்வகித்து வருகிறார். இவரின் பால்யகால நண்பர் எஸ்.விஜய்கிருஷ்ணா (சந்தோஷ்) இசை மீது இருக்கும் ஆர்வத்தால் தகுந்த வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பெரும் அளவில் அவரின் இசை ஆசையை நிறைவேற்ற கிஷோர் பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். கிஷோர் பெண்கள் மீது ஆர்வம் இல்லாததால், தானுண்டு தன் வேலை உண்டு என்று திருமணம் செய்து கொள்ளாமல் தனித்தே வாழ்கிறார். சந்தோஷ் ஸ்ருதி ராமகிருஷ்ணனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு ராகவன் முருகன் என்ற மகன் இருக்க, மகனிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கும் சந்தோஷ் தன் மகனுக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கிறார். ஒரு நாள் தந்தை அழுவதை பார்க்கும் ராகவன், அதற்கான காரணத்தை தாய் ஸ்ருதியிடம் கேட்கிறான். அதற்கு காரணம் தந்தை சிறு வயதிலிருந்தே கேட்டது எதுவும் கிடைக்காமல் கஷ்டப்பட்டதாகவும், அவரின் இசை ஆர்வத்திற்கு வீட்டில் போதிய ஆதரவு இல்லாததால், கஷ்டப்பட்டு முன்னேறினாலும் இன்னும் இசையமைப்பாளர் ஆகும் ஆசை நிறைவேறாமல் இருப்பதால் தான் என்று பதிலளிக்கிறார். தன் மேல் பிரியம் வைத்திருக்கும் தந்தைக்கு அவருக்கு கிடைக்காத சந்தோஷங்கள், ஆசைகளை நிறைவேற்ற முடிவு செய்து அதை நிறைவேற்ற நினைக்கிறான். அப்பொழுது தெய்வீக சக்தியின் நட்பு கிடைக்க, (ஹேமன் முருகானந்தம்) தலையீட்டால், அவர் தனது தந்தை 11 வயது மாணவராக இருந்த காலத்திற்கு செல்கிறான்.அதன் பின் தன் சிறு வயது தந்தையின் நட்பை எப்படி பெறுகிறார்? தந்தையின் ஆசைகளை எப்படி நிறைவேற்றுகிறார்? கடந்த காலத்திற்கு சென்று விடும் கிஷோர் நிகழ்காலத்திற்கு எப்படி வருகிறார்? தந்தையின் மகனாக இருந்து பின்னர் நண்பனாக மாறி சந்தோஷங்களை கொடுத்த பின்னர் மகனாக மீண்டும் கிஷோர் எப்படி பிறக்கிறார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
இளைஞர் கிஷோராக முரளி ராதாகிருஷ்ணன் சஸ்பென்சுடன் தொடங்கும் கதைக்களத்திற்கு முதுகெலும்பு இவர் தான். கடந்த காலத்திற்கு சென்று தன் தந்தையை நண்பனாக பாவித்து அவருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் இளம் வயது பாசமிகு மகனாகவும், தன் தந்தை, தாய் திருமணத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் இடத்திலும், பின்னர் தாய் கருவுற்றிருக்க கிஷோராக பிறக்க போவதற்காக எடுக்கும் முடிவு என்று படத்தில் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சி ததும்ப சிறப்பாக செய்துள்ளார்.
மாணவன் கிஷோராக மாஸ்டர் ராகவன் முருகன் சிறு வயது தந்தையை காண சென்று அவருக்கு பேருதவியாக இருப்பதும், நிகழ்காலத்தில் தந்தையின் சந்தோஷத்திற்காக எடுக்கும் முடிவு என்று அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.விஜய்கிருஷ்ணா சந்தோஷ் கதாபாத்திரத்திலும், மாணவ பருவத்தில் நிஷால் சுந்தராகவும், இவர்களின் பங்களிப்பு ஏழ்மையின் வலியை, ஏளனத்தை எதிர்கொள்ளும் நேரத்திலும், சாதிக்க முடியாமல் தவிக்கும் தவிப்பு, சோகத்தையும், ஆற்றாமையையும் ஒரு சேர கொடுத்துள்ளனர்.
சந்தோஷின் காதல் மனைவியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் கிஷோரை ஒருதலையாக காதலிக்கும் கீதா கதாபாத்திரத்தில் தீபா உமாபதி என்று இரு நாயகிகள் படத்திற்குகேற்ற அழகு பதுமைகளாக அளவான நடிப்பை வழங்கியுள்ளனர்.
தயாரிப்பாளர் மகன் மாஸ்டர் ஹேமன் முருகானந்தம் (இறைவன்), கிஷோரின் நண்பன் கோபியாக கிஷோர் ராஜ்குமார், சந்தோஷின் மாமனாக பாரி வாசன் மற்றும் பலர் படத்திற்குரிய முக்கிய காட்சிகளின் சாட்சியாக வந்து போகின்றனர்.
ரேஹானின் இசை மற்றும் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் வினோத் காந்தியின் பளீச் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பாளர் கே.எஸ்.சதீஷ் குமார் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு படத்திற்கு பலம்.
மகன் தந்தையின் சிறு வயது கஷ்டங்களை போக்க, பாசமிகு நண்பனாக பாசத்தை வித்தியாசமான கோணத்தில் மூன்று வித காலக்கட்டங்களாக காட்டப்படும் குழப்பமான திரைக்கதைக்கு தெய்வீகம், விஞ்ஞானம், கற்பனை கலந்து விடாமுயற்சியோடு அனைவருக்கும் புரியும்படி இயல்புடன் இயக்கி கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் சுந்தர்கிருஷ். தந்தையின் சந்தோஷத்தை மீட்டெடுக்க எதையும் செய்ய துணிந்த மகனின் கதை.
மொத்தத்தில் சக்தி சினி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருமதி. சண்முகப்ரியா முருகானந்தம் மற்றும் முருகானந்தம் வீரராகவன் இணைந்து தயாரித்திருக்கும் அனுக்கிரகன் தெய்வ அருள் பெற்ற பாலகன் தந்தையின் கஷ்டங்களை தீர்த்து மகிழ்விக்கும் வித்தகன்.