“டிஸிஃப்மா – டீசேல்ஸ் சர்வதேச பிலிம் மற்றும் மீடியா அகடாமி’ (DESIFMA – Desales International Film & Media Academy) தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்கும் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
“டிஸிஃப்மா – டீசேல்ஸ் சர்வதேச பிலிம் மற்றும் மீடியா அகடாமி’ (DESIFMA – Desales International Film & Media Academy) திரைப்பட பயிற்சி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’. இதில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், பிரேம், ஆர்ஜே பரத், சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆரோ வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபி காரா இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் பாடல்கள் எழுதியுள்ளார். இளையராஜா.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். டிஸிஃப்மா சார்பில் ஜோசப் சேவியர் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஆர்.சி.ஐயப்பன், பி.கெளசல்யா, பிரனவ் பாண்ட் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளார்கள்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பேச்சாளரும், தமிழக பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி, தயாரிப்பாளர் டாக்டர்.தனஞ்செயன், நடிகர் பாபு ஆண்டனி, எம்.எஸ்.எப்.எஸ்-ன் உலக தலைவர் பாதர் ஆபிரஹாம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். இவர்களுடன் எம்.எஸ்.எப்.எஸ்-ன் பாதரியார்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் எம்.எஸ்.எப்.எஸ்-ன் உலக தலைவர் ஜெனரல் அருத்தந்தை ஆபிரஹாம் பேசுகையில், “டிஸிஃப்மா-வுக்கு இன்று மிக முக்கியமான நாள். டிஸிஃப்மா-வின் முதல் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடக்கிறது. இங்கு வாழ்த்த வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் திண்டுக்கல் லியோனி, தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் பாபு ஆண்டனி மற்றும் எம்.எஸ்.எப்.எஸ் அருத்தந்தை சேவியர், நவீன், வில்லியம், டிஸிஃப்மா ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
DeSiFM இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதை தொடங்கிய போது கொரோனா பிரச்சனை உருவெடுத்தது. அதனால், டிஸிஃப்மா வின் பணிகள் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் அப்போது தான் கொரோனா ஒரு உண்மையை கற்றுக்கொடுத்தது. அதாவது சூழ்நிலைகள் என்பது எதுவாக இருந்தாலும், நீங்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பை சரியாக செய்து முடிக்க வேண்டும், என்பதை புரிய வைத்தது. அதன்படி, டிஸிஃப்மா பேராசியர் ஜெயக்குமார் லாரன் மிக சிறப்பாக செயல்பட்டார். அவருடைய செயல்பாட்டினால், டிஸிஃப்மா இப்படி ஒரு நல்ல திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறது.
‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ படத்தின் மூலம் எங்களுடன் கைகோர்த்து பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்திக்கொள்வதோடு, நீங்கள் மிகப்பெறிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
திரைப்படங்கள் மூலம் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும், மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதம் சார்ந்த ஒரு அமைப்பு திரைப்படம் தயாரித்திருப்பது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். இந்த பணியை தொடர்ந்து சிறப்பாக செய்ய நாங்கள் விரும்புகிறோம். நன்றி.” என்றார்.
நடிகர் பாபு ஆண்டனி பேசுகையில், “நான் நடித்த முதல் படம் ‘பூவிழி வாசலிலே’ கடைசியாக நடித்த படம் ‘பொன்னியின் செல்வன்’. சுமார் 35 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இங்கு என்னை அழைத்ததற்கு நன்றி. எம்.எஸ்.எப்.எஸ்-க்கும் எனக்கும் உள்ள தொடர்பால் தான் இங்கு வந்தேன். தற்போது எம்.எஸ்.எப்.எஸ்-ன் உலக தலைவராக இருக்கும் ஆபிரஹாம் எனது மாணவர். புனேவில் அவருக்கு நான் ஆசிரியராக இருந்திருக்கிறேன். அவர் மூலம் எனக்கு மீண்டும் எம்.எஸ்.எப்.எஸ் உடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. நான் எம்.பி.ஏ படித்ததும் இந்த கல்லூரியில் தான் அப்படி ஒரு தொடர்பும் உள்ளது.
‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ என்ற இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் என்று அனைவருக்கும் வாழ்த்துகள். படத்தின் இயக்குநார் ஜெயக்குமார் லாரன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர்.தனஞ்செயன் பேசுகையில், “’அற்றைத்திங்கள் அந்நிலவில்’ என்ற தலைப்புக்காகவே இயக்குநர் ஜெயக்குமார் லாரன் அவர்களை வாழ்த்த வேண்டும். மிக அழகான சுத்தமான தமிழ் தலைப்பு. இதுபோன்ற தலைப்புகள் வைப்பது குறைந்து விட்டது. இந்த படம் மிக குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்ட படம் என்று சொன்னார்கள், சரியான திட்டமிடல், சரியான கதை தேர்வு இருந்தால், குறைந்த நாட்களில் அழகான படத்தை எடுக்க முடியும் என்பதை இயக்குநர் ஜெயக்குமார் நிரூபித்துள்ளார்.
DeSiFM என்ற சினிமா பயிற்சி மையத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஒரு படமாக இந்த படம் உருவாகியிருக்கிறது. ஒரு பயிற்சி நிறுவனம் திரைப்படம் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதில் பயிலும் மாணவர்களுக்கு, இது ஒரு பாடமாக இருக்கும். மாணவர்களுக்கு மட்டும் இன்றி, பேராசியர் ஜெயக்குமாரே இதை ஒரு பயிற்சியாக எடுத்துக்கொண்டு குறைந்த நாட்களில் இப்படி ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இது மாணவர்களுக்கு சிறந்த பாடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சினிமா பயிற்சி பள்ளி நடத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல, நானும் ஒரு பயிற்சி மையத்தை நடத்திகொண்டு இருக்கிறேன். ஆனால், இவர்களுக்கு மிகப்பெரிய உறுதுணை இருப்பதாக சொன்னார்கள். பிரான்ஸில் தொடங்கப்பட்டு, இப்போது இங்கு படம் எடுக்கும் வரையில் இவர்களுக்கு பலர் துணையாக நிற்கிறார்கள். எனவே, இவர்கள் நிச்சயம் பெரிய வெற்றி பெறுவார்கள். ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
இயக்குநர் ஜெயக்குமார் பேசுகையில், “இப்படி ஒரு விழா இங்கு நடப்பதற்கு காரணமாக இருக்கும் இறைவனுக்கு நன்றி. இந்த அருமையான விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து வாழ்த்திய என் ஆசிரியர் திண்டுக்கல் லியோனி சாருக்கு நன்றி. அவரிடம் தான் நான் அறிவியல் படித்தேன். அவர் அறிவியல் ஆசிரியர் என்பது யாருக்கும் தெரியாது. அந்த ரகசியத்தை இப்போது சொல்லிவிட்டேன். அதேபோல், எம்.எஸ்.எப்.எஸ்-ன் உலக தலைவர் ஜெனரல் பாதர் ஆபிரஹாம், இந்த நிகழ்ச்சிக்காக ரோமில் இருந்து வந்திருக்கிறார் அவருக்கு நன்றி. பாதர் ஆபிரஹாமின் குருவும், பிரபல நடிகருமான பாபு ஆண்டனி சாருக்கு நன்றி. சினிமாவை நன்கு அறிந்தவர், பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் டாக்டர்.தனஞ்செயன் சாருக்கு நன்றி. மற்றும் எம்.எஸ்.எப்.எஸ் சபையின் அருத்தந்தைகள் மற்றும் DeSiFM-வை சேர்ந்த அனைவருக்கும் நன்றி.
திரைப்பட பயிற்சி மையம் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது என்பது இது தான் முதல் முறை. அதை DeSiFM செய்திருப்பது பெருமையாக இருக்கிறது. திரைப்பட பயிற்சி மையத்தை பொருத்தவரை மாணவர்கள் படிப்பார்கள், குறும்படங்கள் எடுப்பார்கள், அதன் பிறகு அவர்களுக்கு டிப்ளோமோ சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். ஆனால், ஒர் முழுமையான திரைப்படம் தயாரிப்பது என்பது யாரும் செய்யவில்லை. இந்த யோசனையை நான் லயோலா கல்லூரியில் இருக்கும் போதே சொன்னேன். லயோலா போன்ற பெரிய கல்வி நிறுவனத்தால் வெற்றிகரமான திரைப்படங்களை கொடுக்க முடியும், என்று நான் சொன்னேன். ஆனால், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி என்பதால் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. அப்போது, எம்.எஸ்.எப்.எஸ்-ன் இந்திய தலைவராக பாதர் ஸ்டீபன் இருந்தார். அவர் தான் நிச்சயம் இதை நாம் செய்வோம், என்று நம்பிக்கை அளித்தார். அவருடைய நம்பிக்கை தான் இன்று வெற்றிகரமான படமாக உருவாகியுள்ளது.
இப்படி ஒரு யோசனையை செயல்படுத்துவதற்கு முன்பு பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி கூட இருக்க கூடாது, என்பதில் தெளிவாக இருந்தோம். எந்த ஒரு சிறு காரணத்தினாலோ சபையின் பெயருக்கு களங்கம் ஏற்பட கூடாது, என்று சொன்னார்கள். நான் லயோலா கல்லூரியில் மீடியா படிப்பில் 18 வருடங்கள் பேராசியராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது மாணவர்களிடம் நான் சொல்வது ஒன்று மட்டும் தான், தேவையிலாத ஆபாசக் காட்சிகளை வைத்து படம் எடுக்காதீர்கள், நல்ல கருத்துக்களையும், சிந்தனைகளையும் வைத்து படம் எடுங்கள், என்று சொல்வேன். அதனால், சபையினருக்கு நான் நிச்சயம் தரமான படத்தை மட்டுமே கொடுப்பேன், என்று உறுதியளித்தேன். அதன் பிறகு தான் படம் எடுக்க சம்மதித்தார்கள்.
படம் தொடங்கிய உடன், கொரோனா, ஊரடங்கு என்று பல பிரச்சனைகள் இருந்தாலும், பெங்களூரில் படப்பிடிப்பு நடத்தினோம். 18 நாட்களில் இந்த படத்தை முடித்தோம். சரியான திட்டமிடல் இருந்ததால் தான் இப்படி ஒரு தரமான படத்தை 18 நாட்களில் எடுக்க முடிந்தது. படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்கள், அதுவும் படம் விரைவாக முடிய ஒரு காரணம்.
படத்தை முடித்துவிட்டு தான் இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தோம். அவர் படத்தை பார்த்துவிட்டு படம் சிறப்பாக இருக்கிறது, நிச்சயம் நான் இசையமைக்கிறேன், என்று சொன்னார். சொன்னது போல் சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். அதேபோல் ஒளிப்பதிவாளருடன் நான் பல குறும்படங்கள் பணியாற்றியிருக்கிறேன். அவருடைய பணியை பார்த்து தான் இந்த படத்தின் வாய்ப்பு கொடுத்தேன், அவரும் சிறப்பாக செய்து கொடுத்தார். என்னுடன் இந்த படத்தில் பயணித்த உதவி இயக்குநர்கள், இணை தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் அருந்தந்தை சேவியர், என அனவருக்கும் நன்றி.
ஒரு தரமான படமாக மட்டும் இன்றி, எந்தவித தேவையில்லாத காட்சிகளோ அல்லது திணிக்கப்பட்ட காட்சிகளோ இல்லாத படமாக ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ படத்தை இயக்கியிருக்கிறேன். நிச்சயம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும், நன்றி.” என்றார்.
திண்டுக்கல் லியோனி பேசுகையில், “’அற்றைத்திங்கள் அந்நிலவில்’ என்ற இந்த அருமையான படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. என்னுடைய மாணவர் ஜெயக்குமார் லாரண் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த மேடையில், வாத்தியார், மாணவர் என்று நாங்கள் மட்டும் அல்ல இன்னொரு செட்டும் இருக்கிறார்கள். அது தான் நடிகர் பாபு ஆண்டனியும், பாதர் ஆபிரஹாமும். ஆனால், மாணவர் ஆபிரஹாம் எப்படி இருக்கிறார், வாத்தியார் பாபு ஆண்டனி எப்படி இருக்கிறார் என்று பாருங்கள், அதேபோல், என்னையும், மாணவர் ஜெயக்குமார் லாரனையும் பாருங்கள். இப்படி தான் என்னை பார்க்க ஒரு வயதானவர் வந்தார். என் உதவியாளர் என்னிடம் சொன்ன போது வர சொல்லுங்க என்று சொன்னேன். அவர் வந்தவுடன், என்ன ஐயா வேண்டும் என்று அவரிடம் கேட்ட போது, சார் நான் உங்க மாணவன் என்று சொன்னார். நான் அதிர்ச்சியடைந்து விட்டேன், என்ன இப்படி இருக்கே என்று கேட்டதற்கு, இதற்கு நீங்க தான் காரணம் என்று அவர் கூறினார். நீ வயதானவனாக மாற நான் காரணமா? என்றேன், உடனே அவர் சார், நான் பார்ப்பதற்கு தான் இப்படி இருக்கேன், மற்றபடி நான் வாழ்க்கையில் நல்ல நிலையில் தான் இருக்கிறேன், அதற்கு நீங்க தான் காரணம், என்றார். அதேபோல், திடீரென்று என் வீட்டுக்கு பல போலீஸ் காரர்கள் வந்தார்கள், ஏதோ என்னை கைது செய்ய தான் வந்துவிட்டார்கள் என்று நினைத்தேன், பிறகு தான் தெரிந்தது உதவி போலீஸ் கமிஷ்னர் என் வீட்டுக்கு வருகிறார் என்று. வந்ததும், அவர் எனக்கு சல்யூட் அடித்தார். கேட்டால், அவரும் என் மாணவர் என்று சொன்னார். அந்த வகையில், எனது மாணவரான ஜெயக்குமார் லாரன், இப்படி ஒரு இயக்குநராக இங்கு இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இந்த படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்க வில்லை, பலவித யோசனைக்கு பிறகே எடுத்திருக்கிறார்கள். அதாவது 5 ஐயர்கள் சேர்ந்து பிரியாணி கடை வைக்க வேண்டும் என்று பிளான் போட்டால் எப்படி இருக்குமோ, அதுபோல தான் இவர்கள் இந்த படத்தை எடுத்ததும். புகைபிடிக்கும் காட்சி, மது அருந்துவது, ஆபாச காட்சிகள் என்று எந்த ஒரு தவறான காட்சிகளும் படத்தில் இருக்க கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்திருக்கிறார்கள். படம் என்றாலே ரத்தமும், சதையுமாக இருப்பதோடு, காதல் காட்சிகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், இவர்கள் அதை மிக நாகரீகமாக கையாண்டிருக்கிறார்கள். ரத்தம், சண்டைக்காட்சிகள், பழைய பாணியிலான காதல் காட்சிகள் என்று பார்த்து பார்த்து புளித்துபோய் வெறுத்துபோன ரசிகர்களுக்கு இந்த ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ புதிய அனுபவத்தை கொடுப்பதோடு, ஒரு விருந்தாகவும் அமையும் என்பது என் நம்பிக்கை.
இப்படி ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியாக்களின் கையில் தான் இருக்கிறது. காரணம், நல்ல பொருட்களை நாம் தான் கூவி கூவி விற்க வேண்டும். கீரை, வெண்டக்காய், கத்திரிக்காய் போன்றவற்ற தெருவில் கூவி கூவி விற்பார்கள், அவை அனைத்தும் உடலுக்கு நல்லதை கொடுக்க கூடியவை. அதை நாம் வாங்க அவங்க கிட்ட ஒரு மணி நேரம் பேரம் பேசுவோம். ஆனால், விஸ்கி, பிராண்டி என்று யாராவது வண்டியில் வைத்து விற்கிறார்களா?, ஆனால், அந்த கடை எங்கிருந்தாலும் தேடி சென்று வாங்குவார்கள். 10 மணிக்கு மூடி விடுவார்கள், என்று தலை தெறிக்க ஓடுவார்கள். அதனால், நல்ல பொருட்களை நாம் தான் மக்களிடம் கூவி கூவி விற்க வேண்டும். அதுபோன்ற ஒரு நல்ல திரைப்படமான ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ படத்தை நாம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இந்த தலைப்பே அழகான இலக்கிய தலைப்பாக இருக்கிறது. பாரியின் மகள்கள் தனது தந்தையை நினைத்து பாடும் பாடல் தான் அற்றைத்திங்கள் அந்நிலவில், அதை தலைப்பாக வைத்ததே இப்படத்தின் சிறப்பு. இதே வரிகளை, மக்களுக்கு புரியும்படி கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலாக கொடுத்திருக்கிறார். பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறும். அதுபோல இந்த படமும் வெற்றி பெறும்.
நடிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல, அதை நான் அனுபபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஒரு படத்தில் நான் நடிக்கும் போது ஒரே ஒரு எக்ஸ்பிரஷனுக்காக நான் பட்ட கஷ்ட்டம் எனக்கு தான் தெரியும். அப்போது தான் புரிந்தது நடிப்பு என்பது சாதாராண விஷயம் அல்ல என்று. அத்தகைய நடிப்பை நடிகர்களிடம் இருந்து வாங்கும் இயக்குநர்களின் பணி சிறப்பு வாய்ந்தது. வாகனத்தை ஓட்டுபவர்களை டிரைவர் என்கிறோம், விலங்குகளை பழக்குபவர்களை டிரைனர் என்கிறோம், மனிதர்களிடம் நடிப்பை வாங்குபவர்களை தான் இயக்குநர் என்கிறோம். அப்படி ஒரு சிறப்பான பணி இயக்குநர் என்பது, அதை மிக சிறப்பாக செய்திருக்கும் என் மாணவர் ஜெயக்குமார் லாரன், மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துவதோடு, DeSiFM பயிற்சி நிறுவனத்தின் இந்த முயற்சியும் வெற்றி பெற வேண்டும். ஒரு பயிற்சி நிறுவனம் திரைப்படம் எடுப்பது சாதாரண விஷ்யமில்லை. அதை இவர்கள் சிறப்பாக செய்து மாணவர்களுக்கு பெரிய அனுபவத்தை படிக்கும் போதே கொடுத்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த முயற்சி தொடர வேண்டும், ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ பெரிய வெற்றி பெற வேண்டும்.” என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
மேலும், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எம்.எஸ்.எப்.எஸ் சபையின் பாதரியார்கள் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ திரைப்படத்தையும், அதில் பங்குபெற்ற கலைஞர்களையும் வாழ்த்தி பேசியதோடு, நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு நன்றி கூறினார்கள்.