பர்த் மார்க் சினிமா விமர்சனம் : பர்த் மார்க் உளவியல் சார்ந்த இடியாப்ப சிக்கலில் மாட்டி தவிக்கும் கர்ப்பிணி பெண்ணின் அவலநிலை | ரேட்டிங்: 2.25/5
ஸ்ரீராம் சிவராமன் இணைந்து விக்ரம் ஸ்ரீPதரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் பர்த் மார்க்.
இதில் ஷபீர் கல்லரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலட்சுமி சில நடிகர்கள் மட்டுமே நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழு:- இசை : விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு : உதய் தங்கவேல், தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராமு தங்கராஜ், எடிட்டர் : இனியவன் பாண்டியன், ஆடை வடிவமைப்பாளர் : ஸ்ருதி கண்ணத்ண,கூடுதல் திரைக்கதை எழுத்தாளர் : அனுசுயா வாசுதேவன், தயாரிப்பு நிர்வாகி : ரவிக்குமார்,உதவி இயக்குநர்கள்: டோனி மார்ஷல், சூர்யா விஜயகுமார், மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்
இராணுவ வீரர் டேனியல் (ஷபீர் கல்லரக்கல்) மற்றும் ஜெனிபர் (மிர்னா) தம்பதியினர். டேனியல் கார்க்கில் போரில் எதிரி நாட்டில் பிடிபட்டு சித்ரவதை அனுபவித்து ஆறு மாதம் கழித்து விடுவிக்கப்பட்ட நிலையில் போஸ்ட் டிராமடிக் ஸ்ட்ரஸ் என்ற மனஉளைச்சல் சீர்குலைவு அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வீடு திரும்புகிறார். அதன் பின் டேனியல் விருப்பப்படி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜெனிபர்; அடர்ந்த மலை பகுதியில் உள்ள தாவந்திரி இயற்கை பிறப்பு மையத்திற்குச் பிரசவத்திற்காக செல்கின்றார். அங்கு இவர்களுக்கு பேச்சு திறன் குறைபாடுள்ள தாவந்திரி அலுவலர் வழிகாட்டுகிறார். அங்கு மது, புகை பழக்கம் கூடாது என்று சொல்லும் அலுவலருக்கும் டேனியலுக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் தம்பதியர் இருவருக்கும் ஒரு விடுதி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள், பிறப்பு மையத்தின் வழிபாட்டு முறைகள் பூஜைகள், கடைபிடிக்கும் ஆயுர்வேத மருந்துகள், பயிற்சிகள், கவனிக்கும் மருத்துவர் என்று பலவிதங்களில் ஜெனிபருக்கு குழப்பமான மனநிலையை ஏற்படுத்துகிறது. அதே சமயம் டேனியலின் நடவடிக்கையிலும் பல மாற்றங்களை காண்கிறார் ஜெனிபர்.அந்த இடத்தை விட்டு சென்று விடலாம் என்று தன் கணவர் டேனியலிடம் கூறுகிறார். ஆனால் அதற்கு சம்மதிக்காத டேனியல் பிரசவத்தை அங்கேயே பார்க்க வேண்டும் என்று ஜெனிபரை வற்புறுத்துகிறார். வேறு வழியின்றி இயற்கை மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துக் கொள்கிறார் ஜெனிபர். டேனியலிடம் அடிக்கடி தகராறு செய்யும் பேச்சு திறன் குறைபாடுள்ள அலுவலரும் திடீரென்று காணாமல் போகிறார். டேனியல் சில சமயங்களில் மனஉளைச்சல் ஏற்பட்டு மனைவியை சந்தேகப்படுவதையும், பிறக்கப் போகும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படப் போவதையும் அவரின் டைரிக் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளும் ஜெனிபர் அதிர்ச்சியாகிறார். அதன் பின் ஜெனிபர் டேனியலை என்ன செய்தார்? டேனியல் குழந்தையை கொல்ல நினைப்பதை தடுத்தாரா? சுகபிரசவம் நடந்ததா? இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனவேற்றுமை அகன்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சார்பட்டா பரம்பரையில் டேன்சிங் ரோஸாக மயக்கும் நடிப்பை வெளிப்படுத்திய ஷபீர் கல்லரக்கல் டேனியல் கதாபாத்திரத்தில் வலுவான நடிப்பை வெளிப்படுத்தி மனைவி மீது இருக்கும் காதலால் சந்தேக மனநிலையை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதும், ஆக்ரோஷத்தையும், கோபத்தையும் அதனை டைரியில் எழுதி தனித்துக் கொள்வதும், வித்தியாசமான நடவடிக்கைகள், இறுதியில் வலியால் துடிக்கும் மனைவிக்கு சுகபிரசம் பெற உதவி செய்வதும் என்று பல்வேறு கடந்து செல்லும் உணர்ச்சிகளை எளிதாக வெளிப்படுத்துகிறார்.
மிர்னா கர்ப்பிணிப் பெண்ணின் சிக்கலான பாத்திரத்தை படம் முழுவதும் மிகவும் கச்சிதமாக சுமந்துள்ளார். கர்ப்பிணி பெண்களின் மனநிலை, நடக்கும் விதம், குழந்தையின் அசைவை கண்டு மகிழ்வது, பயிற்சிகளை சிரமத்தோடு மேற்கொள்வது, கணவனின் செய்கையால் அதிர்ச்சியாவது, குழந்தையை காப்பாற்ற போராடும் தாயாக ஜெனிபர் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து ஈடுபாட்டுடன் இயல்பாக பொருந்தி தேர்ந்த நடிப்பை வழங்கி படத்திற்கு வலு சேர்த்துள்ளார்.
இவர்களுடன் பொற்கொடி செந்தில், இந்திரஜித், தீப்தி மற்றும் பி.ஆர்.வரலக்ஷ்மி ஆகியோர் பாராட்டத்தக்க துணை வேடங்களில் சிலர் நடித்திருந்தாலும் வலுவாக பாத்திர வடிவமைப்பு இல்லாததால், புரியாத புதிர் போல் காட்சிபடுத்திய விதத்தால் திடீரென்று காணாமல் போன உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை சம்பவங்களுடன் நன்றாக இணைந்து ஆரவாரமாக கொடுத்துள்ளார்.
உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு இயற்கை எழில் கொஞ்சும் மலைபிரதேசத்தின் இயற்கை அழகையும், ஆயுர்வேத மருத்து சிகிச்சைகளையும், வெள்ளை நிறத்திலான தூய்மையான அறைகள், தம்பதியர் தங்கும் விடுதி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சிகிச்சை முறைகளின் நிகழ்வுகள், க்ளைமேக்ஸ் காட்சிகள் என்று தன் பாணியில் ஈடுபாட்டோடு கொடுத்துள்ளார். உதய் தங்கவேலின் காட்சியமைப்புகள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.
இனியவன் பாண்டியன் தனது எடிட்டிங் மூலம் எளிமையாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்கிறார். வசனங்கள் நன்றாக உள்ளன.
முதல் காட்சியில் கண்ணை கட்டிக் கொண்டு திருமண பந்தத்தில் இணையும் தம்பதியராக காட்டப்பட்டு நான்கு பாகங்களாக பிரித்து கதையை விவரிக்கும் காட்சிகளுடன் பர்த்மார்க் படம் தொடங்குகிறது. மெதுவாக நகரும் கதைக்களத்தால் பிரசவம் மற்றும் நடைமுறைகள் பற்றிய ஆவணப்படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. தம்பதியர்களின் மனப்போராட்டம் முதல் பிரசவ போராட்டம் வரை கதை நகர்கிறது. இயற்கை சுக பிரசவம் என்ற கான்சப்டை வைத்து படம் தொடங்கினாலும், போகப் போக கதைக்களம் கணவன்-மனைவி இருவருக்குள்ளும் நடக்கும் குடும்ப பிரச்சனையாக பழி வாங்க துடிக்கும் விதமாக தெளிவில்லாமல் தடுமாறி திசை மாறி சென்று விடுகிறது.இருந்தாலும் இயக்குனர் விக்ரம் ஸ்ரீPதரன் எடுத்திருக்கும் புதிய முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.
ஸ்ரீராம் சிவராமன் இணைந்து விக்ரம் ஸ்ரீPதரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் பர்த் மார்க் உளவியல் சார்ந்த இடியாப்ப சிக்கலில் மாட்டி தவிக்கும் கர்ப்பிணி பெண்ணின் அவலநிலை.