”55 ஆண்டு காலம் அரசியல் வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவன் நான்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

0
139

”55 ஆண்டு காலம் அரசியல் வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவன் நான்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு முன்னால் திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினோம். பொதுக்கூட்டம் என்று சொன்னால் அது அரசியல் காரணங்களுக்காகக் கூட்டப்பட்ட வழக்கமான பொதுக்கூட்டம் அல்ல.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டில் எத்தகைய மாற்றத்தை நாங்கள் உருவாக்கித் தருவோம் என்பதற்கான மிக முழுமையாக திட்டமிடுதலாக அந்தக் கூட்டத்தை கூட்டி இருந்தோம்.அதாவது மிகப்பெரிய இலட்சியங்களை விளக்கக் கூடிய மாபெரும் மாநாடாக அது அமைந்திருந்தது. நமது ஆட்சி எத்தகையதாக அமையும் என்பதைச் சொன்னேன். அடுத்த பத்தாண்டுக்கான செயல்திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே திட்டமிட்டுச் சொன்னேன்.

1. வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு!

2. மகசூல் பெருக்கம் – மகிழும் விவசாயி!

3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!

4. அனைவர்க்கும் தரமான கல்வி மற்றும் உயர்ரக மருத்துவம்!

5. எழில் மிகு நகரங்களின் மாநிலம்!

6. உயர் தர ஊரகக் கட்டமைப்புகள்!

7. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் தமிழ்நாடு!

– இவை தான் அந்த வாக்குறுதிகள்.

‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்று அவை திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

* பொருளாதாரம்

* விவசாயம்

* குடிநீர்

* கல்வி

* நகர்ப்புற வளர்ச்சி

* ஊரக வளர்ச்சி

* சமூக பாதுகாப்பு – ஆகிய ஏழு இலக்குகளோடு எங்களது பயணம் அமையும் என்று குறிப்பிட்டேன்.

அந்த இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

நாளைய தினம் மார்ச் 1 – எனது பிறந்தநாள்.அதுவும் 70 ஆவது பிறந்தநாள். வாழ்வின் முக்கியமான நாள்.

மனித வாழ்க்கையில் 70 ஆண்டுகள் பயணப்பட்டு நான் வந்திருக்கிறேன். என்றால் இதில் சுமார் 55 ஆண்டு காலம் அரசியல் வாழ்க்கையாக என்னை அமைத்துக் கொண்டவன் நான்.

எனது குடும்பம் என்பது தனிப்பட்ட எனது குடும்பம் மட்டுமல்ல, – தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைத்து மிக மிக இளமைக் காலத்திலேயே அரசியலுக்கு வந்தவன் நான்.

‘அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?’ என்று கேட்டபோது, ‘இல்லையில்லை அரசியலில் தான் நான் இருந்திருப்பேன்’ என்று பதில் சொன்னவன் நான்.அரசியல் என்பதை பதவி, அதிகாரம், பொறுப்பு என்பதாக இல்லாமல்- அதனைக் கடமையாகவும் தொண்டாகவும் சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள்

தந்தை பெரியாரும் – பேரறிஞர் அண்ணாவும்- முத்தமிழறிஞர் கலைஞரும்- இனமானப் பேராசிரியர் அவர்களும். இவர்களது வழித்தடத்தில் வந்த நான் கிடைக்கின்ற பொறுப்புகளின் மூலமாக மக்களுக்குச் சேவையாற்றும் இலக்குகளை எல்லாக் காலத்திலும் எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன்.

எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை.எனக்கு நானே இலக்கு வைத்துக் கொள்கிறேன்.அந்த இலக்கை அடையவே எந்நாளும் உழைக்கிறேன். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் – என்பதுதான் பொதுவான இலக்கு ஆகும். அதனால் தான் தினந்தோறும் திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.