55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா -2024 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது

0
209

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா -2024 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது

கேன்ஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இணையாக இந்த விழா அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்

புதுதில்லி, 55-வது இந்திய சர்வதேச  திரைப்பட விழா, 2024 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC), கோவாவின் பொழுதுபோக்கு சங்கம் (ESG) ஆகியவை இணைந்து 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை (IFFI) நடத்த உள்ளன. இந்த விழா வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன் தொடங்க தயாராக இருப்பதால், கதைசொல்லிகளும், திரைப்பட ஆர்வலர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா குறித்து தில்லியில் நடைபெற்ற அறிமுக  செய்தியாளர் கூட்டத்தில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் பங்கேற்றுப் பேசினார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் திருமதி நீரஜா சேகர், சர்வதேச திரைப்பட விழா இயக்குநர் திரு சேகர் கபூர், மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவர் திரு பிரசூன் ஜோஷி, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தனது உரையில், உலக அரங்கில் இந்த விழாவின் மதிப்புமிக்க பங்கை எடுத்துரைத்தார். “கேன்ஸ் போன்ற உலகளாவிய விழாக்களுடன் ஒப்பிடுகையில், ஐஎஃப்எஃப்ஐ ஒரு மைல்கல் நிகழ்வாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். இந்த திருவிழா அனுபவத்தை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தப்படும் தனித்துவமான முயற்சிகளை டாக்டர் எல் முருகன் எடுத்துரைத்தார்.

இந்த சர்வதேச திரைப்பட விழாவை உலக அளவில் கொண்டாடப்படும் சினிமா நிகழ்வாக நிலைநிறுத்த வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில், திரைப்பட தொழில்துறையினர் இந்த விழாவை தங்கள் சொந்த விழாவாக கருதி செயல்பட வேண்டும் என்று டாக்டர் முருகன் கேட்டுக்கொண்டார்.

ஐஎஃப்எஃப்ஐ 2024-ன் கருப்பொருள்  ‘இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள்’ மீது கவனம் செலுத்துகிறது. இது படைப்பாற்றலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் திறனை அங்கீகரிக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ இந்தியா உலகின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு தேசமாக வேகமாக வளர்ந்து வருகிறது   என்றார். இந்த தொழில்துறையில் புதிய, வளர்ந்து வரும் படைப்பாளிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார்.

ஐஎஃப்எஃப்ஐ 2024-ன் முக்கிய சிறப்பம்சங்கள்:

இந்த ஆண்டு 101 நாடுகளில் இருந்து 1,676 சமர்ப்பிப்புகளை இந்த விழா பெற்றுள்ளது. இது இந்த விழாவின் வளர்ந்து வரும் சர்வதேச நிலைப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். 81 நாடுகளைச் சேர்ந்த 180 சர்வதேச திரைப்படங்கள் இதில் இடம்பெறும்.

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது:

இந்த புகழ்பெற்ற விருது  ஆஸ்திரேலிய இயக்குனர் பிலிப் நாய்ஸுக்கு வழங்கப்பட உள்ளது. அவர் வித்தியாசமான கதை சொல்லல் அம்சத்துடன் படங்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவர்.
இந்தியன் பனோரமா:

இது இந்தியாவின் சினிமா பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும். இந்தியன் பனோரமா பிரிவில் இந்தியாவின் வளமான கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 திரைப்படங்கள் மற்றும் 20 கதை அம்சம் அல்லாத படங்கள் திரையிடப்படும்.