53 நாடுகள், 47 மொழிகள், 91 படங்கள்… சென்னை சர்வதேச பட விழா தொடக்கம்!

0
233

53 நாடுகள், 47 மொழிகள், 91 படங்கள்… சென்னை சர்வதேச பட விழா தொடக்கம்!

சினிமா ஆர்வலர்களின் திருவிழாவாக கருதப்படுவது சர்வதேச திரைப்பட விழாக்கள். 18-வது சென்னை சர்வதேச திரைப் படவிழா இம்மாதம் 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை சத்யம் குழும திரையரங்குகள் மற்றும் SDC Anna திரையரங்கில் இவ்விழாவில் பங்கேற்கும் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

மொத்தம் 53 நாடுகளைச் சேர்ந்த, 47 மொழிகள் கொண்ட 91 திரைப்படங்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றன. இப்படங்கள் அனைத்தும் மொத்தமான 8 வகைமைகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன அவை ‘TFFC – Tamil Feature Film Competition, IP – Indian Panorama, WC – World Cinema. CFF – Country Focus France, IDP – Iran, Different Perspective, GC – German Cinema, GH – Glimpses of Hungary, CC – Chilean Cinema’. இவ்வாறு 8 பிரிவுகளின் கீழ் திரைப்படங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஜானர்களின் கீழ் படங்களை தேர்வு செய்து பார்க்க உதவியாக இருக்கும்.

இதில் India Panorama பிரிவில் பாஸ்வேர்டு, அமலா, அவிஜாட்ங்க், அக்கா குருவி உள்ளிட்ட 17 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இப்பிரிவின் கீழ் 4 தமிழ்த் திரைப்படங்கள் பங்கேற்கின்றன. மேலும் தமிழ் திரைப்படப் பிரிவில் க/பெ, ரணசிங்கம், சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், கன்னிமாடம் உள்ளிட்ட 13 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

துவக்க விழா திரைப்படமாக ‘The girl with a bracelet’ எனும் பிரான்ஸ் நாட்டு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இப்படம் WC – World Cinema எனும் வகைமையின் கீழ் திரையிடப்பட உள்ளது.

எத்தியோப்பியா, அல்பேனியா, அங்கோலா, வியட்நாம், கிர்கிஸ்தான், ருவாண்டா, லெபனான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படங்கள் இவ்விழாவில் முதல் முறையாக பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. அங்கோலா நாட்டுத் திரைப்படமான Farewell Amor, லெபனான் திரைப்படமான Passion simple ஆகியவை இதில் அடக்கம். ஆனால் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை திரைப்பட விழாவில் Difret எனும் எத்தியோப்பிய நாட்டுத் திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அம்ஹாரிக் மொழி திரைப்படமான அது, அந்நாட்டில் தடை செய்யப்பட்ட படம். இப்படியாக பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் திரைப்பட விழாக்களில்
காணக் கிடைக்கும்.

8ஆவது சென்னை திரைப்படவிழாவை நடத்த தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. விழாவில் வெற்றிபெறும் படங்களுக்கு நிறைவு விழா நாளில் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும். இவை தவிர யூத் ஐகான் விருது உள்ளிட்ட சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும். நிறைவு விழா திரைப்படமாக i was, i am, i will be எனும் ஜெர்மன் நாட்டு திரைப்படம் திரையிடப்பட உள்ளது.