50 வருடத்திற்கு முன் 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த காதல் காவியமான ‘வசந்தமாளிகை’ மீண்டும் 100 தியேட்டர்களில் ரிலீசாகிறது!
காலத்தால் அழியாத காவியப்படமான வசந்தமாளிகை வெளிவந்து 50 வருடங்களாகிறது. 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.கே.ராமசாமி, மனோரமா, பண்டரிபாய், ரமாபிரபா, ஹெலன், ஏ. சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சிங்கப்பூர், மலேசியா, நாடுகளிலும் வசூலை அள்ளிய இந்தப்படம் இலங்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அன்றைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
கலைமகள் கை பொருளே,
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…
யாருக்காக இது யாருக்காக ….
இரண்டு மனம் வேண்டும்…..
குடிமகனே பெரும் குடிமகனே…
போன்ற முத்தான பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். கே.வி.மகாதேவன் அசத்தலாக இசையமைத்து இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படம் வெளிவந்து 50 வருடமாகிறது – இதை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கி ரசிகர்களுக்கு தருவதற்காக வி.சி. குகநாதன் முயன்றார். அதற்காக ராமு அவர்களின் முழு ஈடுபாட்டில் வசந்தமாளிகை டிஜிட்டல்மயமாகி உள்ளது.
சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகரான வி.நாகராஜன் ஜுலை மாதம் 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் திரையிட முழு முனைப்பில் ஈடுபட்டுள்ளார். இன்றைய ரசிகர்களும் பார்த்து பாராட்டும் படமிது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் , வசந்த மாளிகை ” உயிரோட்டமான படமாக இருக்கும் அதனால்தான் நம்பிக்கையோடு ரிலீஸ் செய்கிறேன்” என்று வி. நாகராஜன் கூறுகிறார்.