3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேஸில் களமிறங்கும் நடிகர் ஜெய்!

0
151

3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேஸில் களமிறங்கும் நடிகர் ஜெய்!

நடிகர் ஜெய்யுடைய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தீராத ஆர்வம் மற்றும் அதீத காதல், பல ஆண்டுகளாக அனைவரும் அறிந்ததே. நடிகர் ஜெய் தொடர்ந்து கார் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அவரது மிகுதியான ஆர்வமும், தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இருந்துவந்துள்ளது. கார் ரேஸில் அவ்வப்போது பங்கேற்று வரும் நடிகர் ஜெய், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு MRF மற்றும் JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். மூன்று நாட்கள் போட்டியாக இந்த பந்தயம் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஜெய்யுடைய கார் எண்.6.

இந்த ரேஸ் பந்தய போட்டிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10, 2021) தொடங்குகிறது. சனிக்கிழமை (டிசம்பர் 11, 2021) தகுதிச் சுற்றும், ரேஸ் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12, 2021) அன்றும் நடைபெறுகிறது. வழக்கமாக, இந்தியா முழுவதும் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் டெல்லி ஆகிய மூன்று தடங்களில் மட்டுமே போட்டிகள் நடக்கும். இந்த ஆண்டு, போட்டி சென்னை மைதானத்தில் (MMRT – Madras Motor Racing Track) நடக்க இருப்பதால், சென்னைவாசிகள் மயிர்க்கூச்செரியும் அனுபவத்தை பெறமுடியும். நடிகர் ஜெய் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் நடிகர் ஜெய்க்கு எண்ணித்துணிக திரைப்பட குழு ஸ்பான்சர் செய்கிறது. வழக்கமாக அவருக்கு வருண் மணியன் Radiance Reality நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது. திரை வல்லுநர்கள் திரைத்துறையுடன் மட்டும் நிற்காமல் ஜெய் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஸ்பான்சர் செய்வதும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது ஆர்வம் காட்டுவதும், மிகவும் அழகான தருணமாக இருக்கிறது.

2021 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் அவர்களுக்கு மிக முக்கியமான வருடமாக அமைந்துள்ளது, ஏனெனில் அவர் நடித்து வரும் திரைப்படங்கள், அவரின் நடிப்பில் திருப்புமுனையை தரும் வகையில் நேர்மறையான பாராட்டுகளையும், வரவேற்பையும் குவித்துள்ளது. மேலும் இந்த வருடத்தில், அவர் திரைத்துறையில் இசையமைப்பாளாராக அறிமுகமாவது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது அவரது விளையாட்டு வீரர் அவதாரம், அவருக்கு மற்றொரு மகுடமாக அமைந்துள்ளது.