‘2 நாட்களில் 15 லட்சம் பேர் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்’ – பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர், ‘கேப்டனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தீவுத்திடலில் இடம் ஒதுக்கி கொடுத்து இறுதி ஊர்வலத்திற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரே நாளில் இடங்களை ஏற்பாடு செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், அமைச்சர் வேலு அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டனின் இறுதி ஊர்வலம் நடைபெற உறுதுணையாக இருந்த போலீசாருக்கு ராயல் சல்யூட். அதேபோல வழி நெடுக கேப்டனுக்கு வரவேற்பு கொடுத்த அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் நமது கேப்டன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த புள்ளிவிவரங்களின் படி 2 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேலான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நமது கேப்டன் செய்த தர்மமும் அவரின் நல்ல எண்ணமும், மக்களுக்கு உதவும் குணமும் தான் காரணம்.
தலைமை அலுவலகம் சிறியதாக இருந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியவில்லை. இறுதி அஞ்சலி செலுத்தவந்த அனைத்து தலைவர்களுக்கும் தேமுதிக சார்பாக நன்றி. ராகுல் காந்தி அவர்களும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். கேப்டன் கையில் அணிந்திருந்த கட்சி மோதிரத்தை அவருடனே வைத்து நல்லடக்கம் செய்திருக்கிறோம்.
எப்படி மெரினாவில் தலைவர்களுக்கு சமாதி அமைத்திருக்கிறார்களோ அதேபோல தலைவருக்கும் இங்கு சமாதி அமைக்கப்பட்டும். அவர் நம்மில் ஒருவராக நம்முடன் தான் இருக்கிறார். அவர் சொர்க்கத்தில் இருந்து நம்மை வாழ்த்தி கொண்டுதான் இருப்பார்’ என்று தெரிவித்தார்.