வீரமே வாகை சூடும் விமர்சனம்: அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் விறுவிறுப்புக்கும் உத்திரவாதம்

0
138

வீரமே வாகை சூடும் விமர்சனம்: அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் விறுவிறுப்புக்கும் உத்திரவாதம்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள படம் வீரமே வாகை சூடும்.
இப்படத்தில் விஷால், டிம்பிள் ஹயாதி , யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்என்ஆர் மனோகர்,  பாபுராஜ், குமரவேல்,பில்லி முரளி, ரவீனா, கேஎஸ்ஜி வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், பிளாக் ஷிப் தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு-கவின்ராஜ், படத்தொகுப்பு-என்.பி.ஸ்ரீகாந்த், கலை-எஸ்எஸ்.மூர்த்தி, உடை-வாசுகி பாஸ்கர், ஒலி அமைப்பு-தபஸ் நாயக், சண்டை-அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ், தயாரிப்பு நிர்வாகி- பாலா கோபி, மக்கள் தொடர்பு-ஜான்சன்.

போலீஸ் கான்ஸ்டபிள் மாரிமுத்துவின் மகன் விஷால் போலீஸ் எஸ்ஐயாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். முதலில் விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்க, அவரை பிரபல ரவுடியின் தம்பி குணா லவ் டார்ச்சர் செய்கிறார். இரண்டாவது அதே கல்லூரியில் படிக்கும் ஜார்ஜ் மரியம்மின் மகள் மாணவி தீப்தி சக பணக்கார மாணவர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார். மூன்றாவதாக வில்லன் பாபுராஜின் மாசு படுத்தும் தொழிற்சாலைக்கு எதிராக போராடும் போராட்டக்காரர் குமரவேல். இந்த மூன்று கிளைக் கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக பயணிக்கிறது. அதன் பின் போலீஸ் உயர்அதிகாரி மகன் தீப்திக்கு பதிலாக தவறுதலாக ரவீனா ரவியை கடத்திக்கொண்டு பரனூர் காட்டில் இருக்கும் தொழிற்சாலைக்கு வர, அங்கே ஏற்கனவே குமரவேலை வில்லன் பாபுராஜ் கடத்தி கொலை செய்திருப்பதை ரவீனா ரவி தற்செயலாக பார்த்து விடுகிறார். இதனால் ரவீனாரவியை அனைவரும் சேர்ந்து கொலை செய்து விடுகின்றனர். தன் தங்கையை கொன்றவர்களை பழி வாங்க புறப்படுகிறார் விஷால். ஆனால் யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டறிந்து செல்வதற்குள் ஒவ்வொருவராக மரணம் அடைய வில்லனை நெருங்க முடியாமல் திணறுகிறார் விஷால். இறுதியில் வில்லனை நெருங்கினாரா? தங்கையின் சாவுக்கு பழி வாங்கினாரா? தீப்தியை காப்பாற்றினாரா? போலீஸ் வேலையில் சேர்ந்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

போரஸாக விஷால் அதிரடி ஆக்ஷன் நாயகனாக படம் முழுவதும் ஆக்ரோஷமான, மிரட்டலான சண்டைக் காட்சிகளிலும், தங்கையின் பிரிவை தாங்க முடியாத அண்ணனாக, பணக்கார அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற போராடும் சாமான்ய மனிதராக அசத்தலாகவும், சாமார்த்தியமாகவும் நடித்துள்ளார்.

டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக வந்து போகிறார். இவரை விட தங்கை ரவீனா ரவி மற்றும் பிளாக் ஷிப் தீப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து கதையின் மையப்புள்ளியாக படத்தில் மிளிர்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பலம்.

கவின்ராஜின் காட்சிக்கோணங்கள் டாஸ்மாக் பார், பாலத்தின் கிழே நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகள், கொலைக்கு காரணமானவர்களை தேடிச்செல்லும் காட்சிகள் என்று உத்திரவாதமான அசத்தலான ஒளிப்பதிவை வழங்கி சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

படத்தொகுப்பு-என்.பி.ஸ்ரீகாந்த், கலை-எஸ்எஸ்.மூர்த்தி படத்திற்கேற்ற காட்சிகளை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.

எந்த ஒரு தகவலும், தடயமும் கிடைக்காத கொலையின் பின்னணியில் இருக்கும் பெரிய பதவிக்காக காத்திருக்கும் அரசியல்வாதியை, தன் சாமர்த்தியத்தாலும், சாதுர்யமாக எடுக்கும் முடிவாலும் கடைசி வரை போராடி கண்டுபிடித்து அழித்து வெற்றி வாகை சூடுவதே படத்தின் கமர்ஷியலான திரைக்கதை. தன்னை விட வில்லன் அதிவேகத்தில் முடிவு எடுத்து ஒவ்வொரு முறையும் தடங்கல் செய்து தடைபோட, இறுதியில் ஹீரோ வில்லனை விட புத்திசாலித்தனமாக யோசித்து  க்ளைமேக்சில் வில்லனை வதம் செய்வதும், மூன்று கோணங்களில் கதை பயணித்து ஒரு முக்கிய புள்ளியில் ஒன்றாக இணைந்து முற்றுப்புள்ளியாக மாறுவதற்காக இயக்குனர் து.ப.சரவணன் எடுத்திருக்கும் முயற்சிக்கும், உழைப்பிற்கும் வித்தியாசமாக கொடுத்திருக்கும் விதத்திற்கும் பாராட்டலாம். அதே சமயம் காதல் காட்சிகளும், நகைச்சுவை காட்சிகளும் படத்திற்கு மைனஸ்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்திருக்கும் வீரமே வாகை சூடும் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் விறுவிறுப்புக்கும் உத்திரவாதம்.