லிப்ட் விமர்சனம்

0
113

லிப்ட் விமர்சனம்

ஹேப்சி தயாரித்து லிப்ட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வினித் வரபிரசாத்;
இதில் கவின், அம்ரிதா, கிரண் கொண்டா, காயத்ரி ரெட்டி, பாலாஜி வேணுகோபால், முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை-பிரிட்டோ மைக்கேல், படத்தொகுப்பு-ஜி.மதன், கலை-எம்எஸ்பி.மாதவன், ஒலி வடிவமைப்பு-தபஸ் நாயக், நடனம்-சதீஸ் கிருஷ்ணன், ஒளிப்பதிவு-எஸ்.யுவா, சண்டை-ஸ்டன்னர் சாம், பாடல்கள்- நிஷாந்த், நிர்வாக தயாரிப்பாளர் – ஈ.சரவணன், பிஆர்ஒ- யுவராஜ்.

பொறியாளரான கவின் டீம் லீடராக சென்னை ஐடி கம்பெனியில் சேருகிறார். அம்ரிதா ஒரு வாரம் முன்பு எச்.ஆர் ஆக அதே கம்பெனியில் பணியில் சேருகிறார். இருவருக்கும் சிறு மோதல் முன்பே இருந்ததால், கம்பெனியில் சண்டையோடு தான் ஆரம்பமாகிறது. இதனிடையே கவினின் உயர் அதிகாரி முக்கிய ஆவணங்களை முடித்து கொடுக்குமாறு சொல்ல, அன்று கவினுக்கு வீட்டிற்கு செல்ல தாமதமாகிறது. இரவு வேலை முடித்து காருக்கு செல்ல லிப்ட்டில் பயணிக்கும் கவினுக்கு பார்க்கிங்கிலிருந்து காரை எடுத்தாலும் வெளியே செல்ல முடியாமல் அனைத்தும் மூடப்பட்டிருப்பதை உணர்கிறார். தொலைபேசியை ஒன்பதாவது மாடியில் இருக்கும் தன் அறையில் வைத்து விட்டு வந்ததை உணர்ந்து மீண்டும் லிப்ட்டில் செல்கிறார். அதே சமயம் அங்கே அம்ரிதாவும் ஒரு அறையில் மாட்டிக்கொண்டிருக்க, அவரை விடுவித்து தொலைபேசியை எடுத்துக்கொண்டு லிப்டில் இறங்குகின்றனர். ஆனால் லிப்ட் தரைதளத்திற்கு செல்லாமல் அனைத்து  தளத்திற்கும் இஷ்டப்படி ஆமானுஷ்ய சக்தியால் இயக்கப்பட, என்ன செய்வதென்று தெரியாமல் முடிந்தவரை தப்பிக்க முயற்சிக்கின்றனர்.ஆனால் என்ன முயற்சி செய்தாலும் கட்டிடத்திற்குள்ளேயே சுற்றி சுற்றி வருவதை கண்டு அச்சமடைகின்றனர். இறுதியில் இருவரும் தப்பித்து அந்த கட்டிடத்திலிருந்தும், லிப்டிலிருந்தும் வெளியே வந்தார்களா? இவர்களை பயமுறுத்த காரணம் என்ன? என்பதே திகில் கலந்த க்ளைமேக்ஸ்.

கவினும், அம்ரிதாவும் தங்களுக்கு கொடுத்த கதாபத்திரத்தில் சிறப்பாக பிரதிபலித்து, முகபாவனையிலேயே நடிப்பை வெளிக்காட்டி அனைவரையும் பயமுறுத்தியிருப்பதில் ஜெயித்திருக்கிறார்கள். இவர்களுடன் கிரண் கொண்டா, காயத்ரி ரெட்டி, பாலாஜி வேணுகோபால், முருகானந்தம் மற்றும் சிலர் படத்திற்கு பக்கமேளங்கள்.

நிஷாந்த் பாடல் கலந்த பிரிட்டோ மைக்கேலின் இசை படம் முடிந்த பின்னர் ஆட்டம் போட வைக்கிறது. அவரது பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு பயமுறுத்தலை கொடுக்கிறது.

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் அச்சுறுத்தலான காட்சிகளுக்கு உத்தரவாதம் கொடுத்து திகிலடைய வைத்திருப்பதில் அசத்திவிடுகிறார்.

ஜி.மதனின் படத்தொகுப்பும் எம்எஸ்பி.மாதவனின்; கலையும் கச்சிதம்.
ஐடி கம்பெனி லிப்ட்டை பிரதானப்படுத்தி அதில் ஆமானுஷ்ய சக்தி, பேய் வி.எஃப்.எக்ஸ், சவுண்ட் எஃபெக்ட்ஸ், பின்னணி இசை கலந்து நட்புடன் கிலியை ஏற்படுத்தி, முதல் படத்திலேயே நூறு சதவீத சதம் அடித்து வெற்றியுடன் களத்தை ஆரம்பித்தித்திருக்கிறார் இயக்குனர் வினித் வரபிரசாத். பல விருதுகள், பாராட்டுக்குள் நிச்சயம் குவியும், பேசப்படும் படமாக அமையும்.

மொத்தத்தில் லிப்ட் வினித் வரபிரசாத் இயக்குனருக்கும், நடிகர் கவினுக்கும் ஏறுமுகமான படம், அனைவரையும் பயமுறுத்தும் அசத்தலான படம்.