‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாகும் – லோகேஷ் கனகராஜ்

0
308

‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாகும் – லோகேஷ் கனகராஜ்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆசிர்வாத் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என்றும் திரையரங்களில் தான் வெளிவரும் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், “கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ளவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை திறக்கவில்லை எனில் பலரும் கஷ்டப்படுவார்கள். விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என நம்புகிறேன். தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் தயாரிப்பு நிறுவனம் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும். அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கான பணிகள் துவங்கிவிட்டன. ‘மாஸ்டர்’ ரிலீசுக்குப் பின்னர் அந்தப் படம் குறித்த அறிவிப்புகள் வரும்’ என்று லோகேஷ் கனகராஜ் கூறினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.