மாநாடு விமர்சனம் : மாநாடு படத்தின் ரோலர் கோஸ்டர் ரைடில் ஜாலியாக செல்லலாம், மெய் மறந்து ரசிக்கலாம்

0
236

மாநாடு விமர்சனம் :
மாநாடு படத்தின் ரோலர் கோஸ்டர் ரைடில் ஜாலியாக செல்லலாம்,
மெய் மறந்து ரசிக்கலாம்

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மாநாடு.

இதில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே.சூர்யா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்,  ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல்,  கருணாகரன், மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு- ரிச்சர்டு எம்.நாதன், படத்தொகுப்பு-பிரவீன் கே.எல், பிஆர்ஒ-ஜான்.

ஊட்டியில் தன் நண்பன் பிரேம்ஜி காதலை சேர்த்து வைக்க துபாயிலிருந்து அப்துல் காலிக் (சிம்பு) வர, அதே விமானத்தில் சீதாலட்சுமி (கல்யாணி) வருகிறார். இருவரும் ஒரே திருமணத்திற்கு செல்வதால் நண்பர்களாகின்றனர். ஊட்டிக்கு  சென்றவுடன் நண்பன் கருணாகரன் உதவியுடன் முஸ்லிம் மணப்பெண்ணை கடத்தி பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்க காரில் அழைத்துச் செல்கிறார். வரும் வழியில் எதிர்பாராத விபத்து ஏற்பட போலீசில் அனைவரும் சிக்கிக்கொள்கின்றனர். பாழடைந்த பங்களாவிற்கு அழைத்துச் செல்லப்படும் சிம்புவையும் அவரின் நண்பர்களையும் அடைத்து வைத்து மிரட்டுகின்றனர். இதற்கு மூல காரணம் அரசியல்வாதி  ஒயி.ஜி.மகேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரி தனுஷ்கோடி (எஸ்.ஜே.சூர்யா). சி;ம்பு அங்கு நடைபெறும் மாநாட்டில் முதல்வரை கொல்ல வேண்டும் இல்லையென்றால் அவரின் நண்பர்களை கொலை செய்து விடுவதாக பயமுறுத்த, வேறு வழியில்லாமல் சிம்பு மாநாட்டில் முதல்வரை கொல்கிறார், அவரும் குண்டு பாய்ந்து இறக்கிறார். திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தால் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார் சிம்பு. டைம் லூப் என்ற நேர வளையத்திற்குள் மாட்டிக் கொள்ளும் சிம்பு தான் மட்டும் தான் என்று நினைத்திருக்க எஸ்.ஜே.சூர்யாவுவிற்கும் இதே நிலைமை தான் என்று தெரிய வருகிறது. சிம்பு எப்படி அதிலிருந்து விடுபட்டு முதல்வரை காப்பாற்றி, தன்னையும் காப்பாற்றிக் கொள்கிறார்? அதே போல் எஸ்.ஜே.சூர்யா எப்படி முதல்வரை கொல்ல மாற்று வழியில் செல்கிறார்? இறுதியில் யார் ஜெயித்தார்கள்? என்பதே க்ளைமேக்ஸ்.

சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நண்பனின் காதலை சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வதும், இதற்கு காரணம் டைம் லூப் என்பதை அறிந்து விடுபட எடுக்கும் நடவடிக்கைகளில் தடைகற்களாக எஸ்.ஜே.சூர்;யா இருப்பதை அறிந்து படபடவென காட்சிகள் நகரும் விதத்தில் சிம்புவின் வித்தியாசமான அதிரடியான நடிப்பு கை கொடுத்துள்ளது. அதிலும் விமானத்திலிருந்து இறங்கி வாகை சந்திரசேகரை காப்பாற்றும் இடம் ரணகளம். சிம்புவின் புதிய ஸ்டைலிஷான பிம்பம், புதிய எனர்ஜியோடு, இறுதிக்காட்சியில் நட்பு செண்டிமெண்ட் கலந்து வசனம் பேசுவதில் வேற லெவலில் அதகளம் பண்ணி அப்ளாஸ் வாங்கி விடுகிறார்.

எஸ்.ஜே.சூர்யா போலிஸ் அதிகாரி தனுஷ்கோடியாக சிம்புவிற்கு இணையான கதாபாத்திரம். அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் அவருக்கே உரித்தான பாணியில் மாடுலேஷன் பேச்சு, மூச்சுக்கு முன்னூறு தரம் தலைவரே என்று வெவ்வேறு தோணியில் அலறுவது, வந்தான்,சுட்டான்,போனான், ரீப்பீட்டு என்று படபடவென வசன உச்சரிப்பு, ஒவ்வொரு முறையும் படுக்கையிலிருந்து அலறியடித்து எழும் போது வித்தியாசமான முகபாவங்கள், சக போலீசை திட்டும் போதும், ஒய்.ஜி.மகேந்திரனிடம் புரிய வைக்க மல்லுக்கட்டும் போதும் என்று எஸ்.ஜே.சூர்யா வந்த பிறகு தான் கதையில் ஒரு விறுவிறுப்பு, சுறுசுறுப்பு ஏற்பட இடைவேளைக்குப்பிறகு நான் ஸ்டாப் என்டர்டெயின்மெண்ட்டுக்கு உத்தரவாதம் தருகிறார். வெல்டன்.

கல்யாணி பிரியதர்ஷன் தோழியாக வந்து சிம்புவிற்கு உதவி செய்து விட்டு செல்கிறார்.

முதல்வராக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இவரை விட ஒய்.ஜி.மகேந்திரன் பதவிக்காக சூழ்ச்சி செய்து கொல்ல துடிக்கும் வில்லன் வேடத்தில் பளிச்சிடுகிறார். டேனியல், கருணாகரன், மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி ஆகியோரின் பாத்திரப்படைப்பு படத்தில் தொடர்ந்து வரும்போது வித்தியாசம் காட்சி அசத்தியுள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை மாறும் காட்சிகளுக்கேற்ப மாடுலேஷனில் பின்னணி இசையும் பிரமிக்க வைக்கிறது.

ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பத்pவு மாநாடு என்ற டைட்டிலுக்குகேற்ற காட்சிக்கோணங்களை அமைத்து, ஒவ்வொரு முறையும் வேறு கோணங்களில் காட்சியை விவரிக்கும் விதம் அலுப்பு ஏற்படாதவாறு, கண் முன்னே நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி அசர வைத்து பிரமிப்புடன் காட்சிகளை நகர்த்தி பலமான அஸ்திவாரம் போட்டு வெற்றிக்கு வழி வகுத்துள்ளார்.

படத்தின் வெற்றிக்கு முதல் அடி எடுத்து வைத்திருப்பவர் பிரவீன் கே.எல், இவரின் கச்சிதமான படத்தொகுப்பு தான் படத்திற்கு உயிர்நாடி. திரும்ப திரும்ப வரும் காட்சிகள் எதுவரை காட்ட வேண்டும், அதன் பின் ரசிகன் புரிந்து கொள்வான் என்பதை உணர்ந்து, வெட்ட வேண்டிய இடத்தை வெட்டி, ஒட்ட வேண்டிய இடத்தை ஒட்டி படத்தின் கதைக்கேற்ப வசனங்களையும், சம்பவங்களையும் சரிசமமாக கொடுத்து படத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் எடுத்துச் சென்று புரியாத தளத்தை புரிந்துகொள்ளும்படி செய்திருப்பதில் கில்லாடியாக செயல்பட்டிருக்கிறார் பிரவீன்.கே.எல்.

நேர வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளும் ஹீரோவும் வில்லனும் நினைத்ததை நடக்கச்செய்ய எடுக்கும் முயற்சியில் ஒருவரை ஒருவர் புத்திசாலித்தனமாக யோசித்து, நடக்கும் சம்பவங்களை மாற்றி அமைக்க எடுக்கும் பகிரங்க பிரியர்த்தனத்தில் அரசியல் நெடி கலந்து, நட்பை பிரதானமாக கொண்டு திரைக்கதையமைத்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. ஹாலிவுட் படங்களின் டைம் லூப் மாதிரி தமிழ் சினிமாவிற்கு புதிதாக களமிறங்கி அதை புரியும் வண்ணம் காட்சிப்படுத்தி சிக்கலான முடிச்சை சுவாரஸ்யமாக கொடுத்து த்ரில்லிங்கான அனுபவத்தை பெறச் செய்திருப்பது ஆச்சர்யம்.ஒரே நாளில் மாட்டுக்கொண்டு ஒரே சம்பவங்கள் திரும்ப திரும்ப நடப்பதை  முன் கூட்டியே உணர்ந்திருப்பதால், யோசித்து எடுக்கும் முடிவுகள் தப்பாகாமல் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்தி காட்சிப்படுத்தி கொடுத்திருக்கும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் திறமைக்கு கிடைத்த பெரிய வெற்றி இந்தப்படம். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் வெளியீட்டு பிரச்னையில் பலவித போராடங்களை கடந்து வெற்றிகரமாக தியேட்டரில் ஒடி கொண்டிருக்கும் வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் மாநாடு படத்தின் ரோலர் கோஸ்டர் ரைடில் ஜாலியாக செல்லலாம், மெய் மறந்து ரசிக்கலாம்.