பூமிகா விமர்சனம்

0
168

பூமிகா விமர்சனம்

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டியோஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரத்திந்திரன் ஆர் பிரசாத்.

ஐஸ்வர்யா ராஜேஷ், விது, அவந்திகா, சூர்யா கணபதி, மாதுரி, பாவேல் நவகீதன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-ராபர்டோ ஜஸாரா, இசை-பிருத்வி சந்திரசேகர், கலை – ஆர் மோகன், எடிட்டிங் – ஆனந்த் ஜெரால்டின், ஸ்டண்ட்-டான் அசோக், பிஆர்ஒ-சுரேஷ்சந்திரா.

உளவியல் ஆலோசகரான ஐஸ்வர்யா ராஜேஷ்(சம்யுக்தா) தன் கணவர் விது (கவுதம்), மகன் சித்து, விதுவின் தோழி சூர்யா கணபதி(காயத்ரி) விதுவின் தங்கை மாதுரி(அதிதி) ஆகியோருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள புதுமந்தி என்ற மலைகிராமத்திற்கு பெரிய புரொஜக்ட் புதிய முயற்சியில் கட்டடம் கட்ட தன் கணவருக்கு உறுதுணையாக செல்கிறார்.அங்கே ஆள் நடமாவாட்டமே இல்லாத பங்களாவில் இவர்கள் தங்க அவர்களுக்கு வேலைக்காரர் பாவேல் நவகீதன் பல உதவிகளை செய்கிறார். இதனிடையே சூர்யா கணபதியின் செல்போனில் இறந்த பழைய நண்பரின் எண்ணிலிருந்து பல குறுந்தகவல்கள் வர ஆரம்பிக்க, இதனால் அனைவரும் கலக்கமடைகின்றனர். அதன் பின் ஆமானுஷ்ய சக்தி அவர்களை பயமுறுத்த, அதற்கான காரணத்தை தேடி அந்த இரவில் அலைகின்றனர். இவர்களின் தேடலில் விடியல் கிடைத்ததா? எதற்காக இவர்களை கொலை வெறியுடன் அந்த ஆமானுஷ்ய சக்தி துரத்துகிறது? அந்த இடத்தில் புதைந்து கிடக்கும் மர்மம் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கணவர் வெற்றி பெற பல உதவிகளை செய்யும் மனைவியாக, தன் குழந்தையின் மவுனத்தை கலைத்து பேசும் திறனை மேம்படுத்த எடுக்கும் முயற்சிக்கும் தாயாகவும், அதே சமயம் தன்னுடன் வந்துள்ள இரண்டு பெண்களின் பயத்தை போக்கி தைரியத்தை கொடுக்கும் உத்வேகம் நிறைந்த தோழியாகவும் தனக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்தை சிரத்தையுடன் கையாண்டிருக்கிறார்.
விது கணவராக அனைவருக்கும் பாதுகாவலனாகவும், மர்மத்தை போக்க எடுக்கும் முயற்சியில் மாட்டிக் கொண்டு தவிக்கும் மனிதராக திறம்பட செய்திருக்கிறார். இவர்களுடன் சூர்யா கணபதி, மாதுரி, இயற்கையை போற்றும் பாவேல் நவகீதன், பூமிகாவாக வரும் ஆட்டிசம் பாதித்த இளம்பெண் அவந்திகா வந்தனப்பூ சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்திற்கு தூணாக திகழ்கிறார்.

ராபர்டோ ஜஸாரா ஒளிப்பதிவு ஒரு நாளில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை இருள் சூழ்ந்த சூழ்நிலையில் சிறப்பாக காட்சிக்கோணங்களை கொடுத்தும் பிளாஷ்பேக் காட்சிகளில் பிரம்மாண்ட பள்ளியின் அமைப்பும், இயற்கை அனிமேஷன் காட்சிகளிலும் படம் பிடித்து கொடுத்து முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படம் முழுவதும் பயமுறுத்தியிருக்கிறார்.

பிருத்வி சந்திரசேகரின் இசையும், பின்னணி இசையும் அச்சு அசலாக திகில் உணர்வை ஏற்படுத்து கொடுத்துவிடுகிறார்.

ரத்திந்திரன் ஆர் பிரசாத் கை வண்ணத்தில் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக இரண்டாம் பாதியோடு மர்மம் திகில் நிறைந்த த்ரில்லர் காட்சிகளை முதல் பாதியில் வைத்து அதனால் ஏற்படும் விளைவுகளை இறுதிக் காட்சியில் தெளிவாக எடுத்துரைக்கும் விதம் அருமை. பிரபலமான ரோஸ்யார்ட் பள்ளியின் அழிவின் மர்மத்தை அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கோட்பாடுகளின் உண்மையை உணர்த்தி சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குர் ரத்திந்திரன் ஆர்.பிரசாத்.

மொத்தத்தில் பூமி அன்னையை நேசிப்பவள், அதற்காக எதைவும் செய்ய துணிந்தவள் இந்த பூமிகா.