பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் விஷால் புகார் மனு! தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி விளக்கம்!

0
236

பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் விஷால் புகார் மனு! தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி விளக்கம்!

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பாளர் மற்றும் விநோகிஸ்தராக மட்டும் அல்லாமல் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் தொழிலையும் செய்து வருகிறார். இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனை சென்ற பிப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டார். கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.சவுத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை என்றும், அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி அதற்கு பதிலாக ஒரு புதிய அக்ரிமென்ட் 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஆம்பள என்ற திரைப்படத்திற்கு கோத்தாரி என்ற பைனான்சியர் பணத்தை வாங்கிக்கொண்டு ப்ரோ நோட் திரும்பி தராமல் பிரச்சினையில் ஈடுபட்டதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் புரோனோட் திரும்ப பெறாததால் அதை பயன்படுத்தி, ஆம்பள படத்தை வெளியிட தடை கோரி சட்டபூர்வமான நடவடிக்கையை கோத்தாரி மோசடியாக எடுத்ததாகவும், அதேபோன்று ஆர்பி சவுத்ரி புரோநோட் தொலைந்து விட்டதாக தெரிவித்து அடிப்படையில், தனக்கு மீண்டும் இதுபோன்ற பிரச்சினையில் ஈடுபடக்கூடாது என புகார் அளித்துள்ளதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் சார்பில் அவருடைய மேனஜர் ஹரிகிருஷ்ணன், புகார் மனுவை காவல் துறையிடம் அளித்துள்ளார். அந்த புகார் மனுவோடு ஆர்.பி. சவுத்ரி தரப்பு செக் மற்ற இதர ஆவணங்களுக்காக அளித்த 100 ரூபாய் ஸ்டாம்ப் அக்ரிமெண்ட் காப்பியும் இணைத்துள்ளனர். இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.பி.சவுத்திரி விளக்கம்

நடிகர் விஷால் கொடுத்துள்ள புகார் மனு பற்றி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் விஷாலுக்கு இரும்புத்திரை என்ற படத்திற்காக நானும், பட அதிபர் திருப்பூர் சுப்பிரமணியமும் சேர்ந்து கடனாக பணம் கொடுத்தோம். அந்த பணத்தை விஷால் திருப்பி கொடுத்து விட்டார். ஆனால் கடனுக்காக விஷால் கொடுத்திருந்த ஆவணங்களை, திருப்பூர் சுப்பிரமணியம் வைத்திருந்தார். அவர் அந்த ஆவணங்களை தனது நண்பரும் சினிமா இயக்குனருமான சிவகுமாரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

சிவகுமார் திடீரென மரணம் அடைந்து விட்டார். விஷாலுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய ஆவணங்களை சிவகுமார் எங்கு வைத்திருந்தார், என்பதை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி விஷாலிடம் சொல்லி, வக்கீல் மூலம் ஆவணங்கள் காணாமல் போனது பற்றியும், விஷால் கடனை திருப்பி கொடுத்து விட்டார் என்றும், எதிர்காலத்தில் இது தொடர்பாக எந்த பிரச்சினையும் கொடுக்க மாட்டோம் என்றும் பத்திரமாக எழுதி கொடுத்து விட்டோம்.

இந்தநிலையில் விஷால் ஏன் போலீசுக்கு போனார் என்று தெரியவில்லை. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆவணங்களை தொடர்ந்து தேடச்சொல்லி இருக்கிறேன். ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில், அவற்றை பத்திரமாக விஷாலிடம் கொடுத்து விடுவோம். இதுதான் உண்மை. இதில் ஒரு பிரச்னையும் இல்லை. இப்போது வெளி ஊரில் இருக்கிறேன். சென்னை வந்ததும் இது தொடர்பாக பேசி பிரச்னைகளை சரிசெய்து விடலாம்’’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.