பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

0
297

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

தமிழ்த் திரையுலகில் புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்று உருவாகவுள்ளது. அதன் தலைவராக பாரதிராஜா பொறுப்பேற்கவுள்ளார்.

‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்று நீண்ட காலமாக இருக்கிறது. இந்தச் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன. இன்னும் 2 அணிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார்கள்.

இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தில், தற்போது படம் தயாரிப்பவர்கள் என்று பட்டியலிட்டால் சுமார் 200 பேர்தான் இருப்பார்கள். மீதி அனைவருமே படம் எடுத்தவர்கள்தான், ஆனால் இப்போது படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்தச் சங்கம் செயல்பட்டு வருவதாகக் கருதுகிறார்கள். இதனால், தற்போது தொடர்ச்சியாக படம் தயாரிப்பவர்கள் நலனுக்காக புதிய சங்கமொன்றை உருவாக்கவுள்ளனர்.

இந்தச் சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், சத்யஜோதி தியாகராஜன் பொருளாளராகவும் செயல்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சங்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்தில் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசும்போது, இதன் தொடக்க விழா குறித்தும் பேசி அவரையே தொடங்கி வைக்கவும் கேட்டுள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தப் புதிய சங்கம் குறித்து, தயாரிப்பாளர்கள் சிலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். விரைவில் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்போது, காரசாரமான விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சங்கத்தின் ஆதரவு தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, “கொரோனாவால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யமுடியவில்லை. எனவே அவர்கள் தேவைகளை நிறைவு செய்யவும் படம் எடுப்பவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இந்த சங்கம் பாடுபடும். படம் எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்காகவே இந்த சங்கம் உருவாகிறது. உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இது தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போட்டியான சங்கம் இல்லை” என்றார்.

தெலுங்கில் தாய்ச் சங்கமாக ஒரு தயாரிப்பாளர் சங்கமும், தற்போது படம் தயாரிப்பவர்கள் ஒரு சங்கமாகவும் செயல்பட்டு வருகிறார்கள். அதன் பாணியிலேயே தமிழ்த் திரையுலகிலும் தயாரிப்பாளர்களுக்கென்று இரு சங்கங்கள் செயல்பட உள்ளன.