பலரை அழைத்தேன் அபிஷேக்தான் வந்தார் – இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேச்சு!

0
50

பலரை அழைத்தேன் அபிஷேக்தான் வந்தார் – இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேச்சு!

நடிகரும் இயக்குனருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அசாத்தியங்களை சாத்தியமாக்குவதை எப்போதும் தன் இயல்பாகவே மாற்றிக்கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு, பார்த்திபன் எழுதி இயக்கி அவர் ஒருவர் மட்டுமே நடித்த “ஒத்த செருப்பு” திரைப்படம் தேசியவிருது உட்பட பல சர்வதேச விழாக்களில் விருது பெற்று தரமான படமாக ரசிகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு மேல் அவரால் என்ன செய்துவிடமுடியும் என பலரும் எண்ணிய நிலையில், அவரது அடுத்த பெரும் படைப்பு “இரவின் நிழல்”.

BIOSCOPE USA மற்றும் AKIRA PRODUCTIONS தயாரித்த இத்திரைப்படத்தின் – கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – இராதாகிருஷ்னண் பார்த்திபன். மீண்டும் ஒரு அசாதாரணமான முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் பார்த்திபன். உலகின் முதல்’ NON-LINEAR SINGLE SHOT MOVIE’ என்ற பெருமையுடன், தமிழ் திரை உலகுக்கே உலக அரங்கில் பெருமை சேர்க்கப் போகும் திரைப்படம் இந்த “இரவின் நிழல்” – ஆம் !

இப்படத்தின் இசை வெளியீடு ஜுன் 5 – 2022, IIT Madras Research Park- சென்னை -யில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கூடுதல் சிறப்பாய் “ரோஜா முதல் இரவின் நிழல்” வரையிலான இசைப்புயல் A R ரஹ்மான் அவர்களின் இசைப்பயணத்திற்கான கொண்டாட்ட விழா, ஒரு திருவிழா போல நடைபெற்றது. (MUSICAL JOURNEY OF A.R.RAMAN)

இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன், ஏ.ஆர். ரஹ்மான், அபிஷேக் பச்சன், சரத்குமார், ராதிகா மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பார்த்திபன், “ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். இந்த விழாவிற்கு பல நண்பர்களை அழைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என கூறினார்கள்.

இருந்தபோதிலும் பாலிவுட்டிலிருந்து நண்பர் அபிஷேக் பச்சன் வந்து சிறப்பித்துள்ளார். நான் அவரை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தைதான் இயக்கியுள்ளேன். இருந்தாலும் இந்த நிகழ்வுக்காக அவர் வந்துள்ளார்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அபிஷேக் பச்சன், “பார்த்திபன் இயக்கத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். அவர் மிகச் சிறந்த படைப்பாளி” என்று பேசினார்.

பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார். அதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இரவின் நிழல் படத்தின் பாடலை அபிஷேக் பச்சன் வெளியிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இரவின் நிழல் படத்தில் இடம்பெறும் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் மேடையில் வாசித்தார். அதைத்தவிர ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்தை கொண்டாடும் விதத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்வேதா மேனன், ஜேம்ஸ் வசந்தன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட பலர் அவரின் பாடல்களை மேடையில் பாடி அசத்தினர்.