நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி மரணம் – திரைத்துறையினர் இரங்கல்

0
221

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி மரணம் – திரைத்துறையினர் இரங்கல்

நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் காலமானார். அது இது எது?, கலக்கப்போவது யாரு? போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். தனி ஆளாக ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்விக்கும் திறன்கொண்டவரான அவர், சில நாட்களாக இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியாக சின்னத்திரை ரசிகர்களின் இல்லங்களுக்கே சென்று நடிப்பால் ரசிக்கவைத்து, சிரிக்கவைத்தவர். நடிகர் வடிவேலுவின் உடல் மொழியுடன் தன் தனித்துவமான நடிப்புத்திறனால் பிரபலம் அடைந்தார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த வடிவேலு பாலாஜி மதுரையைச் சேர்ந்தவர்.

நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னை வந்த அவருக்கு தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் அது இது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான வெளியான கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இதயத்தில் பிரச்னை ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் வீடு திரும்பிய நிலையில், நேற்றைய தினம் மயக்கம் ஏற்பட்டு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் வடிவேல் பாலாஜி காலமானார். அவருக்கு வயது 42. அவரது மறைவுக்கு அவருடன் பணியாற்றிய நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நடிகை ஆர்த்தி வடிவேல் பாலாஜிக்கு ரொம்ப நல்ல குணம். அவருக்கு உதவும் தன்மை இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்வது என்றே புரியவில்லை. அவர் இருக்கிற இடத்தை கலகலவென வைத்திருப்பார். நிறைய திறமைகள் மிக்கவர். அவருக்கு டான்ஸ் வரும் என்பதை நிரூபிப்பதற்காக அவ்வளவு கடுமையாக உழைப்பார் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

நடிகர் ரோபோ சங்கர், வடிவேலு பாலாஜி மரணம் குறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என்னுடன் 19 ஆண்டுகள் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். வடிவேல் பாலாஜி மரணமடைந்த செய்தியைக் கேட்டு எனக்கு பேச்சு வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக அனைவரையும் கட்டிப்போட்டு சிரிக்க வைக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞன். மரணம் இப்படியெல்லாம் வருமா என்பதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.

10 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என் மனைவி உள்ளிட்ட நண்பர்கள் சென்று நலம் விசாரித்து திரும்ப வந்துவிடுவாய் நண்பா என்று கூறிவிட்டு வந்தார்கள். அடுத்த 10 நாட்களில் இப்படி ஒரு செய்தியைக் கேட்கும் போது என்னால் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் மீது கொஞ்சம் வெறுப்பு வருகிறது. நல்ல கலைஞனுக்குக் கூட இப்படி ஒரு சாவைக் கொடுப்பதா என்று. வடிவேல் பாலாஜியின் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.

நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், “சின்னத் திரையில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.நடிகர் உதயா தனது ட்விட்டர் பதிவில், “நகைச்சுவை நடிகர் மிகவும் திறமையான கலைஞன் வடிவேல் பாலாஜி மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. 15 நாட்களுக்கு முன்பு தன் மகனின் படிப்பு விஷயமாக என்னிடம் பேசினார் தாடி பாலாஜி மூலமாக, இன்று இல்லை என்று நினைக்கும் போது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

வடிவேல் பாலாஜியுடன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சேர்ந்து நடித்துள்ள நடிகர் ராமர், மிகப்பெரிய திறமைசாலி. எனக்கு எப்படி சொல்வதென்றே தெரியவில்லை என்று வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நாளை மதியம் சேத்துப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.