தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் – அதிர வைத்த அக்‌ஷய் குமார்

0
411

தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் – அதிர வைத்த அக்‌ஷய் குமார்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய்குமார். இவர் தற்போது ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் ‘பெல் பாட்டம்’படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் ஹியூமா குரேஷி மற்றும் லாரா தத்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

நடிகர் அக்‌ஷய்குமார் சமீபத்தில் பியர் க்ரில்ஸ் உடன் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு சமீபத்தில் அதன் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. அப்போது யானைக் கழிவில் உருவாக்கப்பட்ட தேநீரை பியர் க்ரில்ஸ் கொடுக்க அதை அக்‌ஷய்குமார் அருந்தினார்.

இதுகுறித்து இன்ஸ்டா நேரலை உரையாடலின் போது ஹியூமா குரேஷி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அக்‌ஷய்குமார், “எனக்கு பெரிய அளவில் சிரமமாக இல்லை. கவலைப்படும் நிலையில் இல்லை. உற்சாகமாக இருக்கிறேன். ஆயுர்வேத காரணங்களுக்காக நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன். எனவே யானைக் கழிவில் உருவாக்கப்பட்ட தேநீரைக் குடித்தது எனக்கு பரவாயில்லை” என்றார்.

அக்‌ஷய்குமாரின் இந்த பதிலைத் தொடர்ந்து கூகுளில் அதிகம் பேர் பசுவின் சிறுநீர் குறித்து தேடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த ஆரம்ப காலகட்டத்தில் பசுவின் கோமியம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் கொரோனாவைக் குணப்படுத்துவதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் இது அறிவியல் பூர்வமாக நீருபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம் மேற்கு வங்காள பாஜக மாநில செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திலிப் கோஷ், பசுவின் சிறுநீர் குடித்தால் கொரோனா வைரஸ் குணமாகும் என்றும், ஆயுர்வேத மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.