தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள்..!

0
554

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள்..!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைமையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க’த்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள் வெளியாகியுள்ளன.

அவைகள் இங்கே :

TFAPA விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு பொது தகவல் / வழிமுறைகள்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில்(TFAPA) உறுப்பினராக சேர விரும்பும் தயாரிப்பாளர்கள் பின்வரும் விதிமுறைகளை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும்.

(உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட பெயர்களில் சேர்க்கப்படுவார்கள்; Company பெயரிலோ அல்லது Firm பெயரிலோ அல்ல)

உறுப்பினர் தகுதி விவரங்கள் : (TFAPA-ன் சட்ட விதிகள்)

By Law No.1 : தமிழ் மொழியில் திரைப்படங்களைத் தயாரித்தவர்கள் மற்றும் தற்போது தயாரித்து கொண்டு இருப்பவர்கள், தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சங்கத்தின் உறுப்பினராக இணையலாம்.

By Law No.2 : தயாரிப்பாளர்கள் உறுப்பினராக தங்கள் தனிப்பட்ட பெயர்களில் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்; Company அல்லது Firm-ன் பெயரில் அல்ல.

உறுப்பினர் தகுதி பின்வரும் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் :

(1) முதன்மை உறுப்பினர்கள் (வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள்) :

(i) தமிழில் இதுவரை மொத்தமாக ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு நேரடி தமிழ் படங்களை தயாரித்து அவர்களின் பெயரில் தணிக்கை செய்து வெளியிட்டு இருக்கவேண்டும்,

(அல்லது)

கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 3 நேரடி தமிழ் படங்களை தயாரித்து தங்களின் பெயரில் தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியிட்டு இருக்க வேண்டும்.

இந்த தயாரிப்பாளர்கள் பின்வரும் விதிமுறைகளின்படி முதன்மை உறுப்பினர்களாவார்கள்.

முதன்மை உறுப்பினருக்கான விதிகள் :

1. உறுப்பினர் Membership தயாரிப்பாளரின் பெயரில் மட்டுமே இருக்கும் அவரது கம்பெனி பெயரில் அல்ல. எனவே, ஒரு உறுப்பினர் பல கம்பெனி பெயரில் திரைப்படங்களைத் தயாரித்து இருந்தாலும் அவருக்கு ஒரு முதன்மை உறுப்பினர் Membership மட்டுமே வழங்கப்படும்.

2. Partnership நிறுவனங்களுக்கு, கூட்டாளர்களிடமிருந்து (Partners)லிருந்து அங்கீகரிக்கப்பட்ட நபர் ஒருவர் மட்டுமே சங்கத்தின் உறுப்பினராக இருப்பார். உறுப்பினராக இருப்பவர் Partnership-ல் இருந்து வெளியேறினால் அந்த கம்பெனியில் மீதமுள்ள Partners மற்றொரு Partnerயை உறுப்பினராக பரிந்துரைக்க முடியும், அதன்படி சங்கம் அதை அங்கீகரிக்கும்.

ஒருவேளை இரண்டு Partners மட்டுமே உள்ள கம்பெனியில்.. ஒருவர் Partnership விட்டு வெளியேறினால், இரண்டு Partner-களும் சங்கத்தில் உறுப்பினராக யார் இருப்பார்கள் என்பதை முடிவு செய்து ஒப்புக் கொள்ள வேண்டும்.

3. மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும், Partnership உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்றால், முந்தைய அங்கீகரிக்கப்பட்ட நபரே சங்கத்தின் உறுப்பினராக தொடர்வார்.

4. தனிப்பட்ட உறுப்பினர் நேரடியாக செயல்பட முடியாத காரணம் இருக்கும்பட்சத்தில் அந்த உறுப்பினரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் (Authorised Person) உறுப்பினராக இருக்கலாம்.

உறுப்பினரின் ஒப்புதல் இருக்கும்வரை அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் (Authorised Person) சங்கத்தின் உறுப்பினராக இருப்பார்.

5. கூட்டு நிறுவனங்களுக்கு வரும்போது கூட்டுப் பெயர்களில் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டால், அந்த நிறுவனத்தால் சங்கத்தின் உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு படங்களின் எண்ணிக்கையில் அந்த தணிக்கை சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும்.

6. தயாரித்து தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியான படங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

7. அனைத்து படங்களின் எண்ணிக்கையும் அந்த ஆண்டின் ஜனவரி 1-ம் தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்,

மேலும் ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர் பட வெளியீடு மதிப்பீடு செய்யப்படும்.

—————————————-

(II) இணை உறுப்பினர்கள் (வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்கள்) :

(a) கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தை தயாரித்து, தணிக்கை செய்து வெளியிட்டவர்கள் மட்டுமே சங்கத்தின் இணை உறுப்பினர்களாக இருப்பார்கள்,

இது ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1-ம் தேதி அடிப்படையில் கணக்கிடப்பட்டு தீர்மானிக்கப்படும்.

(b) இணை உறுப்பினர்கள் வரையறுக்கப்பட்ட முதன்மை உறுப்பினருக்கான தகுதி காரணியை கடந்துவிட்டால் அவர்களும் முதன்மை உறுப்பினராக மாற்றப்படுவார்கள்.

ஐந்து வருட காலத்தில் எந்தவொரு படத்தையும் தயாரிக்காத அல்லது 3 படங்களுக்கு குறைந்த படங்கள் தயாரித்த முதன்மை உறுப்பினர்கள் மீண்டும் இணை உறுப்பினராக மாற்றபடுவார்கள்.

—————————————-

(III) அடிப்படை உறுப்பினர்கள் ‘Probationary Members’ (வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்கள்) :

தற்போது ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் (அதாவது, புதிய தயாரிப்பாளர்கள்) இந்த குழுவின் கீழ் இருப்பார்கள். அவர்களின் படம் வெளியானதும் உடனடியாக அசோசியேட் உறுப்பினர்களாக மாறுவார்கள்.

—————————————

(IV). கார்ப்பரேட் உறுப்பினர் :

கார்ப்பரேட் நிறுவனம் அல்லது பப்ளிக் லிமிடெட் அல்லது பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கான அங்கிகரிகப்பட்ட நபர்(Authorised Person)-ஐ உறுப்பினராக்கலாம், அவர்கள் நிறுவனம் தயாரித்த படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதன்மை அல்லது இணை அல்லது தகுதி உறுப்பினராக வரையறுக்கப்படுவார்கள்.

அத்தகைய கார்ப்பரேட் உறுப்பினர்களுக்கு, படத்தின் தணிக்கை சான்றிதழ் நிறுவனத்தின் பெயரில் இருக்க வேண்டும்.

====================

அசோசியேட் உறுப்பினர்கள் முதன்மை உறுப்பினராக உயர்வதற்கு தேவையான தகுதி இருப்பின் தயாரித்து வெளியிடப்பட்ட படங்களின் விவரங்களின் அடிப்படையில் சங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலாண்மைக் குழு அத்தகைய விண்ணப்பங்களின் அடிப்படையில் அசோசியேட் உறுப்பினர்களை முதன்மை உறுப்பினராக ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடி குழுவில் உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள்.

தேர்தலுக்கு முந்தைய காலத்தைப் பொறுத்தவரையில், அத்தகைய அசோசியேட் உறுப்பினர்கள் தேர்தல் தேதிக்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்னதாக படத்தை வெளியிட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

====================

உறுப்பினர் கட்டணம் கட்டமைப்பு :

1. சங்க விதியின்படி முதன்மை உறுப்பினருக்கான தகுதியுள்ள தயாரிப்பாளர்கள் முதன்மை உறுப்பினராக சேர செலுத்த வேண்டிய கட்டணம் Rs.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) + GST (Non-Refundable).

2. அசோசியேட் உறுப்பினர் / அடிப்படை உறுப்பினர்களுக்கான கட்டணம் Rs.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) + GST.

3. கார்ப்பரேட் உறுப்பினர்களுக்கு, கார்ப்பரேட் ஹவுஸ் / பிரைவேட் லிமிடெட் அல்லது பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் தகுதி அளவுகோல்களின்படி அசோசியேட் அல்லது முதன்மை உறுப்பினர்களாகி, அதற்கேற்ப நுழைவுக் கட்டணத்தை செலுத்தலாம்.

அதன்படி இது கார்ப்பரேட் / பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தின் பெயரில் இருக்கும்.

4. ஏப்ரல்-1 முதல் அடுத்த ஆண்டு மார்ச்-31-வரை தொடங்கும் நிதியாண்டுக்கான வருடாந்திர சந்தா கட்டணம் ரூ.5,000/-(ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)+GST.

புதிதாக இணையும் உறுப்பினர் நாள் / மாதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் வருடாந்திர சந்தா பதிவு செய்யப்பட்ட நாளன்றே முழுமையாக செலுத்தவேண்டும்.

மேலும் அடுத்தடுத்த வருடாந்திர சந்தாவினை அடுத்த நிதியாண்டில் தொடர்ந்து செலுத்த வேண்டும்.

மேலே உள்ள நுழைவுக் கட்டணம் / சந்தா கட்டணம் அனைத்தும் காசோலை அல்லது DD-யாக சென்னையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

5. ஒரு அடிப்படை உறுப்பினரோ அல்லது இணை உறுப்பினரோ முதன்மை உறுப்பினராக தகுதி பெறும் நேரத்தில் அந்த உறுப்பினர் கூடுதலாக ரூ.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) + GST கட்டணம் செலுத்த வேண்டும்.

===================

உறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :

1. உறுப்பினராகும் தயாரிப்பாளரின் இரண்டு அடையாளச் சான்றுகளின் புகைப்பட நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

2. பான் கார்டு – PAN CARD (கட்டாயம்).
3. பாஸ்போர்ட் / வாக்காளர்கள் ஐடி / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் – இவற்றில் ஏதேனும் ஒன்றை முகவரி ஆதாரமாக வழங்க வேண்டும்.

4. தயாரிப்பாளரின் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
அடிப்படை உறுப்பினராக விண்ணப்பிக்கும் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பு பணி நடக்கும் Lab / Qube-லிருந்து ஒரு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நன்றி.

இவண்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்

95660 08275

[email protected]