‘ஜெய்பீம்’ பட சர்ச்சை – நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு

0
136

‘ஜெய்பீம்’ பட சர்ச்சை – நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு

சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் படி ‘ஜெய்பீம்’ இயக்குநர் மற்றும் நடிகர் சூர்யா மீது வேளச்சேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்த படம் ‘ஜெய்பீம்’. ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடும் வழக்கறிஞரின் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில், முன்னாள் நீதிபதி சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டனும், அவரது மனைவியாக லிஜோமோல் ஜோஸும் நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சர்ச்சை வெடித்தநிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர்கள், இயக்குநர்கள், ரசிகர்கள் களமிறங்கினர். நடிகர் சூர்யாவை மன்னிப்பு கேட்க சொல்லியநிலையில், இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கிடையில், இந்தப் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அதன்படி, சென்னை வேளச்சேரியை சேர்ந்த சந்தோஷ் (27), ஸ்ரீ ருத்ர வன்னியர் சேனா என்ற அமைப்பின் நிறுவன தலைவராக உள்ளார். இவர், வேளச்சேரி காவல் நிலையத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னிய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், கொச்சை படுத்தும் வகையிலும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் அமைந்திருப்பதாக கடந்த 8-11-2021 அன்று புகாரளித்திருந்தார்.

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்ககோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடியிருந்தார். கடந்த 29-ம் தேதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில் இன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது 295 (A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.