ஜகமே தந்திரம் விமர்சனம் : கார்த்திக் சுப்புராஜின் அரைவேக்காட்டுத்தனமான சினிமா! – மீரான்முகமது

0
727

‘ஜகமே தந்திரம்’ விமர்சனம் : கார்த்திக் சுப்புராஜின் அரைவேக்காட்டுத்தனமான சினிமா! – மீரான்முகமது

பொதுவாக நான் தமிழ் திரைப்படங்களுக்கு விலாவாரியாக விமர்சனம் எழுதுவதில்லை. இரண்டு வரிகளோடு முடித்துக் கொள்வேன். அபூர்வமாக வரும் சில நல்ல படங்களுக்கு தனியாக பதிவிடுவேன். அது விமர்சனமாக இருக்காது.
ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கு இருவரி விமர்சனம் எழுதி விட்டேன் (அருகில் உள்ளது). ஆனால் அதை தாண்டி படத்தை பற்றி சில விஷயங்கள் பேச வேண்டியது உள்ளதால் இந்த பதிவு. இது அந்த படத்தின் விமர்சனம் அல்ல. மாறாக எந்த அளவிற்கு கார்த்திக் சுப்புராஜால் ஒரு அரைவேக்காட்டுத்தனமான சினிமா வெளிவந்திருக்கிறது என்பதை சொல்லத்தான் இந்த பதிவு.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ‘தி பேமிலி மேன்’ இணைய தொடரின் 2வது பாகம் வெளிவந்தது. இது ஈழ விடுதலை போராட்டத்தை அண்டர்கிரவுண்ட் தாதாக்களின் வேலை போன்றும், ஈழ விடுதலைப்போர் வீரர்கள், தியாகிகள் சர்வதேச தீவிரவாதிகள் போன்றும், ஈழத் தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்ட, கருப்பிகள் போன்றும் சித்தரிக்கப்பட்டார்கள். இதற்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம்.
‘தி பேமிலி மேன் 2’ தொடர் திட்டமிட்டு தமிழர்களை கொச்சைப்படுத்தும் ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டது. எதிரிகள் அப்படித்தான் செய்வார்கள். நாமும் எதிர்த்தோம். ஆனால் ‘ஜகமே தந்திரம்’ படம் நம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரால். தன்னை பெரிய இயக்குனராக காட்டிக் கொள்கிற ஒருவர் எடுத்திருக்கிற படம்.
ஈழத்தில் நடந்தது என்ன? ஈழ விடுதலை போராட்டம் என்றால் என்ன? புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல், தெளிவும் இல்லாமல் ஏனோ தானோ வென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனம் போன போக்கில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
‘தி பேமிலி மேன்’ தொடரை எடுத்தவன் எதிரி, அவனை எதிர்த்து நாம் போராடிக் கொண்டே இருக்கலாம். கார்த்திக் சுப்புராஜ் மாதிரி அரை வேக்காடுகளை என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.
படத்தின் கதையை சொல்கிறேன்… நான் சொல்வது புரியும்.
லண்டன் நகரில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு காட்பாதர் மாதிரி இருக்கிறவர் சிவதாஸ். ஈழ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, அவர்களுக்கு சட்டபாதுகாப்பு, சமூக பாதுகாப்பு கொடுப்பது மாதிரியான பணிகளை செய்கிறார். அதாவது நாயகன் வேலு நாயக்கர் மாதிரி.
அதற்கு தேவையான பணத்துக்காக ஆயுத கடத்தல், தங்க கடத்தல் வேலைகளைச் செய்கிறார். அதே லண்டனில் பீட்டர் என்கிற ஹெடெக் தாதா லண்டனில் உள்ள வெளிநாட்டினரை, குறிப்பாக ஈழத் தமிழர்களை நாட்டை விட்டு விரட்டி, ஒன்லி வெள்ளையன் நாடு என்பதை உருவாக்க நினைக்கிறார். இந்த இருவருக்குமான மோதலில் சிவதாஸை வீழத்த மதுரையில் இருந்து சுருளி என்கிற லோக்கல் தாதாவை, அதாவது தனுஷை அழைத்து வருகிறார் பீட்டர்.
லண்டன் வரும் சுருளி, அந்தக்கால ஜெய்சங்கர் படத்தில் வரும் ஐடியாக்களை கையாண்டு, சிவதாஸை வீழ்த்துகிறார். அதற்கு பரிசாக லண்டனின் ஒரு தெருவையே தனுசுக்கு எழுதி வைக்கிறார் பீட்டர். அதில் அவர் ‘லிட்டில் மதுரை’ என்று ஏரியாவை உருவாக்கி ஜாலியாக வாழ்கிறார்.
அதன்பிறகுதான் சிவதாஸ் நல்ல மனிதர், தமிழர்களுக்கு பாடுபடுகிறவர் என்பதை உணர்ந்து, அவரது இடத்துக்கு வந்து, பீட்டரை வீழ்த்தி, இவரே காட்பாதர் ஆகிறார். இதுதான் படத்தின் கதை.
ஒருவர் தடுக்கி விழுந்தாலே, அடுத்த நிமிடம் போலீஸ் ஓடி வந்து நிற்கிற லண்டனில்தான் இத்தனையும் நடக்கிறது. லண்டன் போலீஸ், பிரதமர், இங்கிலாந்து மகாராணி எல்லோருமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்து விட்டதாக ஒரு வசனத்தை சேர்த்தாவது கொஞ்சம் லாஜிக்கை காப்பாற்றி இருக்கலாம். சரி அதை விடுங்க, கார்த்திக் சுப்புராஜ் படத்தில் லாஜிக்காவது, மண்ணாங்கட்டியாவது.
இந்தப் படம் உலக நாடுகள் முழுக்க இப்போது வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் ஈழத் தமிழர்கள் என்றால் எப்போதும் அழுது புலம்பித் திரிகிறவர்கள், அல்லது ஆயுதத்தோடு கொலை வெறியாகி அலைகிறவர்கள். புலம் பெயர்ந்த நாடுகள் அனைத்திலும் அண்டர்கிரவுண்ட் வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் என்பதாக காட்டுகிறது படம்.
அது மட்டுமல்லாமல் தேசிய தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருப்பது போன்றும், அவருக்காக பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் ஆயுதம் சேகரித்து வருவதாகவும் சித்தரிக்கிறது.
சொந்த மண்ணில் எல்லாவற்றையும் இழந்து விட்டு உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு பல நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த மக்களை மேலும் சிக்கலில் மாட்டிவிடுகிற மட்டமான கற்பனை இது..
கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட அரைகுறை இயக்குனர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம்… உங்களுக்கு என்ன வருமோ அதைச் செய்யுங்கள், ஈழத் தமிழர்களை விட்டு விடுங்கள்.
தமிழ்நாடும், தமிழ்நாட்டு தமிழர்களும் தங்களை எந்த காலமும், எந்த வடிவிலும் காப்பாற்ற மாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து ரொம்ப காலமாகி விட்டது.
நன்றி: மீரான்முகமது முகநூல் பதிவு