சூ மந்திரகாளி விமர்சனம்

0
260

சூ மந்திரகாளி விமர்சனம்

அன்னம் மீடியாஸ் அன்னக்கிளி வேலு தயாரிப்பில் வெளிவந்துள்ள சூ மந்திரகாளி படத்தை எழுதி இயக்கியவர் ஈஸ்வர் கொற்றவை.

இதில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி, கிஷோர் தேவ், முகில்,மரகதம் சிவபிரகாசம், நிரஞ்சனா,தனன்யா, கோவிந்த் மாயன், வி.ஸ்ரீதர், சிங்காரவேலன், மேட்டூர் சேகர், வெங்கடேஷ் பாபு, மு.க.சின்னன்னன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-முகம்மது ஃபர்ஹான், மேலாளர்-மாரியப்பன் கணபதி, தயாரிப்பு நிர்வாகி-அருண் ராஜா, இசை-சதீஷ் ரகுநாதன், எடிட்டர் -கோகுல், கலை- ஜே.கே.ஆண்டனி, நடனம்-தீனா, சண்டை – டேஞ்சர் மணி, பாடல்கள் – குகை.மா.புகழேந்தி, பிஆர்ஒ- சதீஷ் (ஏய்ம்)

பொறாமை குணம் படைத்த பங்காளிப்பூர் மற்றும் பில்லி சூன்யம் வைக்கும் மலையில் உள்ள சிங்கப்பூர் என்ற இரண்டு கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதை. பங்காளிப்பூரில் வசிக்கும் கார்த்திகேயன் தன் கிராம மக்கள் வயிற்றெரிச்சல், பொறாமை குணம் நிறைந்து தங்களுக்குள்ளே சூன்யம் வைத்து கொண்டு முன்னேறாமல் இருப்பதை பார்த்து கவலை கொள்கிறார். இவர்களை நல்வழிப்படுத்த மாந்திரிகம் தெரிந்த சிங்கப்பூர் கிராமத்திற்கு சென்று அதில் வல்லவரை தேடி பிடித்து பங்காளிப்பூர் கிராமத்திற்கு அழைத்து வந்து கிராம மக்களை திருத்த வேண்டும் என்று எண்ணுகிறார். அந்த சிங்கப்பூர் கிராமத்திற்கு புதுமணதம்பதிகள் மட்டுமே செல்ல முடியும் அதுவும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டால் உடனே அந்த ஊரை விட்டே சென்று விட வேண்டும் என்ற கெடுபிடி நிறைந்திருந்ததால் கார்த்திகேயன் தன் நண்பனை பெண் வேடம் போட்டு மனைவியாக அழைத்துச் செல்கிறார். இருவரும் அந்த கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து அதில் மிக்க திறமைசாலியாக இருப்பது சஞ்சனா புர்லி என்பதை கண்டறிகின்றனர். கார்த்திகேயனுக்கு சஞ்சனா மீது காதல் வர அவரை திருமணம் செய்து கொண்டு அழைத்து செல்ல நினைக்கிறார். ஆனால் சஞ்சனாவிற்கோ வேறு திட்டமும் ஆசையும் இருக்க கார்த்திகேயனை வெறுக்கிறார். இறுதியில் கார்த்திகேயன்-சஞ்சனா காதல் கை கூடியதா? கார்த்திகேயன் திட்டம் நிறைவேறியதா? கிராமத்தை திருத்தினாரா? என்பதே மீதிக்கதை.

முருகனாக கதாநாயகனாக கார்த்திகேயன் வேலு, காதலியாக அழகு பதுமையாக சஞ்சனா புர்லி, சாமியாகவும் தேவசேனாவாகவும் இரட்டை வேடம் போட்ட நண்பராக வரும் கிஷோர் தேவ் அச்சு அசலாக அசாத்திய நடிப்பு அற்புதம், கருணாவாக முகில், மரகதம் சிவபிரகாசம், குருவியாக நிரஞ்சனா,அருவியாக தனன்யா, பங்காளிகளாக கோவிந்த் மாயன், வி.ஸ்ரீதர், சிங்காரவேலன், மேட்டூர் சேகர், வெங்கடேஷ் பாபு, மு.க.சின்னன்னன் ஆகியோரின் அதகளமான கிராமத்து கலகலப்பூட்டும் நடிப்பு அனைவரையும் சிரித்து ரசிக்க வைக்கிறது.

முகம்மது ஃபர்ஹானின் ஒளிப்பதிவு படத்திற்கேற்ற காட்சிக்கோணங்கள், விஎஃப் எக்ஸ் தொழில்நுட்பமும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அமைத்திருந்தாலும் சிறப்பாக உள்ளது.

சதீஷ் ரகுநாதனின் இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நிறைவாக பூர்த்தி செய்திருக்கிறார்.

எழுத்து, இயக்கம்-ஈஸ்வர் கொற்றவை. நல்ல நகைச்சுவை கலந்த திரைக்கதை, புதுமுகங்களை வைத்து சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை. பொதுவாக எல்லோருடைய மனதிலும் இருக்கும் கெட்ட எண்ணங்கள் வெளியே தெரியாமல் பார்த்து நடந்து கொள்வார்கள் ஆனால் இந்த கிராமத்தில் போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல், நல்லதை தடுப்பது. தீய எண்ணம், சூன்யம் வைப்பது என்று வெளிப்படையாக அனைவரும் செய்யும் காமெடி கலந்த காட்சிகள் சிரிக்க வைப்பது புதுவித அனுபவம் கலந்து ரசிக்க வைத்துவிடுகின்றனர். அதே சமயம் சிங்கப்பூர் கிராமத்து மக்களின் மாந்தரீக சக்தியால் திருடன் ஒடிக்கொண்டே இருப்பதும், அனைத்து சாமியார்களும் புதுப்புது விஷயங்களை செய்து அசத்துவதும், இசைமரத்தில் இசை கேட்க காத்திருப்பதும், அடுத்த ஊர் மக்கள் இங்கே வந்து மாட்டிக்கொண்டு முழிப்பதும், காதல் வர பல வழிகளை கையாள்வதும், பெண்ணாக நடிக்கும் நண்பனே எதிரியாவதும் என்று பார்த்து பார்த்து இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை தன் கற்பனைத்திறனாலும். காமெடி கலாட்டாவிலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பதிலேயே அவரது முயற்சி வெற்றி பெற்றிருப்பது தெரிகிறது.

மொத்தத்தில் சூ மந்திரகாளி கவலையை மறந்து சிரிக்க வைக்கும் ஒரு நல்ல படம்.