சினம் கொள் திரை விமர்சனம்: ஈதமிழர்களின் மூச்சு காற்றை சுவாசிக்க வைத்து அவர்களின் உண்மை நிலையை விவரித்து உயிர் கொடுத்துள்ள அற்புதமான அசத்தலாக நினைவில் நீங்கா படம் சினம் கொள்

0
236

சினம் கொள் திரை விமர்சனம்: ஈதமிழர்களின் மூச்சு காற்றை சுவாசிக்க வைத்து அவர்களின் உண்மை நிலையை விவரித்து உயிர் கொடுத்துள்ள அற்புதமான அசத்தலாக நினைவில் நீங்கா படம் சினம் கொள்

ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்யலட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்யலட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க சினங்கொள் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜோசப். பொங்கல் அன்று ஈழம் பிளை (https://eelamplay.com/ta) என்ற ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம், தீப செல்வன், தனஞ்செயன், பாலா, மதுமிதா, பேபி டென்சிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – எம்.ஆர்.பழனிக்குமார், இசை – என்.ஆர்.ரகுநந்தன், வசனம் மற்றும் பாடல்கள் – தீபச் செல்வன், எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம், கலை – நிஸங்கா ராஜகரா, சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் – நித்தியானந்தம், தயாரிப்பு நிர்வாகம் – சு.வெங்கடேஷ், மக்கள் தொடர்பு-புவன்.

இலங்கையில் நடந்த இறுதிப்போருக்குப் பின் சிறையில் எட்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வரும் முன்னாள் போராளியான அமுதன் (அரவிந்தன் சிவஞானம்), தனது மனைவியை தேடி முல்லைத்தீவு வருகிறார். அப்போது அவரது வீடு இருந்த வட்டப்பிலை மற்றும் நிலங்களை ராணுவம் அபகரித்துக் கொண்டது தெரிய வர, மனைவி எங்கு சென்றார் என்பதை அறியாது திகைக்கிறார். இருக்க இடம் இல்லாமல் சுற்றி அலையும் போது அவருடன் போராளிகளாக செயல்பட்ட தம்பதிகளான தோழரையும் தோழியையும் சந்திக்க நேரிட, அவர்களின் உதவியோடு தனது மனைவி மற்றும் மகளை கண்டு பிடிக்கும் அரவிந்தன், அவர்களோடு சந்தோஷமாக சிறு வீட்டில் வாழ்கிறார். நண்பரின் உதவியோடு லைசன்ஸ் இல்லாமல் கால் டாக்சி ஒட்டுனராக வேலை செய்கிறார். அந்த கால் டாக்சியில் வரும் பணக்கார தமிழ்பெண்ணை மர்மமான நபர்கள் வழிமறித்து அந்தப் பெண்ணை கடத்திக் கொண்டு போய் விடுகின்றனர். இதனால் அதிர்ச்சியாகும் அமுதன் தன் நண்பன் மூலம் போலீசில் புகார் கொடுக்கச் சொல்கிறார். போலீஸ் தீவிரமாக ஒட்டலிலும், பெற்றோரையும் மடக்கி விசாரிக்கின்றனர். எதிர்பாராதவிதமாக போலீஸ் அமுதனை சந்தேகித்து தேட ஆரம்பிக்க, அவரது மனைவி, உறவினர்களை பிடித்து அடித்து விசாரிக்கின்றனர். கடத்தப்பட்ட பெண் யார்? அமுதனை சுற்றி நடக்கும் சதியில்; இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? இடையில் தோழர் தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம் என்ன? அமுதன் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து பெண்ணை காப்பாற்றினாரா? அவர் இழந்த மகிழ்ச்சியான வாழ்க்கை அவருக்கு மீண்டும் கிடைத்ததா? என்பதே படத்தின் அசர வைக்கும் மீதிக்கதை.

முன்னாள் போராளியாக அமுதன் (அரவிந்தன் சிவஞானம்), போராளி தோழர்களை கண்டு மகிழ்ச்சி கொள்ளும் போதும், அவர்களின் வாழ்வாதாரத்தை நினைத்து வருந்துவதும், தனது மனைவியை தேடி அலையும் போதும், மனைவியையும் மகளையும் காணும்போதும் உணர்வுபூர்வமான நடிப்பு தெரிகிறது. கடத்தப்பட்ட பெண்ணை மீட்டெடுக்கும் காட்சிகளில் தனது போராளி குணமும் கம்பீரமும், கடத்தல் கும்பலில் முக்கியபுள்ளியை கண்டுபிடித்து தன் மீனவ தோழர்களுடன் சேர்ந்து பெண்ணை மீட்டு பத்திரமாக ஒப்படைக்கும் போது வெளிப்படும் சந்தோஷம், இறுதியல் சிறையில் அனுபவித்த கொடுமைகளினாலும், அதன் எதிரொளியாக வாழவேண்டிய நேரத்தில் திடீரென்று அமுதன் எதிர்பாராமல் இறக்க மீண்டும் மனைவியையும், மகளையும் அனாதைகளாக விட்டுச்செல்லும் போது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி விடுகிறார். பாராட்டுக்கள்.

அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, யாழினி வேடத்தில் நடித்திருக்கும் லீலாவதி, பிரேம், தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக நடித்திருக்கும் தனசெயன், பாலா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் புதுமுகங்கள், எளிமையான, இயல்பான, நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி அசத்தலாக வாழ்ந்து காட்டியுள்ளனர்.

இறுதிப்போருக்குப் பின் மிச்சம் மீதியிருக்கும் இலங்கையின் அழகை நம் கண்களில் காட்டி பிரமிப்பு ஏற்படுத்துவதிலும், அழிந்த சின்னங்கள், அழியாத நினைவுகள், கீழ் இருந்து வானத்திற்கு செல்லும் ஷாட்டில் மொத்த இயற்கை எழிலையும் அற்புதமாக, அசத்தலாக கொடுத்து இலங்கையை வேறொரு கண்ணோட்டத்தில் காணச் செய்த ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.பழனிகுமாரின் காட்சிக்கோணங்கள் கை தட்டல் ரகம்.

நேர்த்தியான தீபச்செல்வனின் வசனம் மற்றும் பாடல் வரிகள் ஈழத்தமிழர்களின் வலிகளை வசனத்திலேயே கடத்தி பதிவு செய்வதும் அதற்கு துணையாக என்.ஆர்.ரகுநந்தன் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இதற்கு முன் பார்த்த ஈழத் தமிழர்களின் படம் என்றாலே ஒரு சோகம், வலி, போர், சண்டை, போர்கள பூமியாகவே பார்த்து பழகிவிட்ட படியால் ஈழத் தமிழர்களை பற்றிய படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பதை முற்றிலும் மற்றிக்காட்டியுள்ளார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப். பல வருடங்கள் சிறையில் துன்பப்பட்டு, அவமானப்பட்டு தண்டனை முடிந்து வெளியே வரும் போது தழும்புகளைத் தடவிக்கொண்டு அம்மண்ணில் மீண்டும் துளிர்விடவேண்டுமென்ற பரந்த நம்பிக்கைகளோடு தன் சொந்தங்களை மீண்டும் தேடிக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் சில சமயங்களில் வெற்றியடைந்து மீண்டும் இணைந்து சந்தோஷமாக வாழ்க்கை தொடங்குகின்றனர். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மறந்து புதிய வாழ்க்கைக்கு பழக சிரமப்படுவதும், முன்பை விட வேகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் அங்கிருக்கும் பணக்கார ஆதிக்க வர்க்கத்தால் பறிக்கப்படும் போது வேதனை அனுபவிக்கின்றனர். இனி ஆயுதத்தைக் கையால் தொடுவதில்லை, அமைதி வழியே தன் வழி என்று இருக்கும் நிலையில், போலீஸ், கடத்தல் கும்பல் இவர்களின் பார்வையில் போராளியாகவே தென்படுவதில் இருக்கும் சிக்கல்கள். என்ன தான் போராளிகள் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தாலும் அவர்கள் ஐந்து வருடத்திலேயே இறந்து விடுவது உறுதி என்பதையும், அங்கேயே அவர்களுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டுத் தான் அனுப்பப்படுகின்றனர் என்பதை மறைமுகமாக சொல்லி தற்போதைய ஈழதமிழர்களின் இன்றைய நிலை என்ன என்பதை எந்த சமரசமும் இல்லாமல் ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக அதே நேரத்தில் தமிழ் ஈழத்துக்கு போராடிய போராளிகளின் கடமை உணர்வு என்றைக்கும் உறுதியாக நிலைத்திருக்கும் என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.

மொத்தத்தில் ஸ்கை மேஜிக் பட நிறுவனம் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம்; இணைந்து தயாரித்துள்ள படம் “சினம் கொள்” தமிழர்களின் மூச்சு காற்றை சுவாசிக்க வைத்து அவர்களின் உண்மை நிலையை விவரித்து உயிர் கொடுத்துள்ள அற்புதமான அசத்தலான நினைவில் நீங்கா படம்.