சஞ்ஜீவன் விமர்சனம் : சஞ்ஜீவன் வித்தியாசமான விளையாட்டு கதைக்களத்தை இன்னும் சுவாரஸ்யம் கலந்த பயணமாக கொடுத்து அசத்தியிருக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
190

சஞ்ஜீவன் விமர்சனம் : சஞ்ஜீவன் வித்தியாசமான விளையாட்டு கதைக்களத்தை இன்னும் சுவாரஸ்யம் கலந்த பயணமாக கொடுத்து அசத்தியிருக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சஞ்ஜீவன் படத்தை மணி சேகர் இயக்கியுள்ளார்.
இதில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கார்த்திக் ஸ்வர்ணகுமார், இசை-தனுஜ் மேனன்,  படத்தொகுப்பு- ஷிபு நீல் பி.ஆர், மணி சேகர், பாடல்கள்- சபரிவாசன் ஷண்முகம், பிஆர்ஒ-சதீஷ்வரன்.

வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, யாசின் ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். விமல் ராஜாவின் தந்தை கம்பெனியில் இந்த நால்வரும் வேலை செய்கின்றனர். இதில் வினோத் லோகிதாஸ் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர், அமைதியானவர், ஆர்ப்பாட்டமில்லாமல் தெளிவான முடிவை எடுக்கக்கூடியவர். வினோத் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் வேலை செய்து கொண்டு ஸ்னூக்கர் விளையாட்டில் கில்லாடியாக திகழ்கிறார். இவர்கள் அனைவரும் மாலை வேலைகளில் ஸ்னூக்கர் கிளப்பில் சந்திக்கும் பழக்கமுடையவர்கள். ஒரு சமயம் நண்பர்கள் பார்ட்டியில் வினோத் திவ்யா துரைசாமியை சந்தித்து நட்புடன் பழக பின்பு காதலாக மாறுகிறது. ஸ்னூக்கர் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வினோத்,அதில் நுட்பமாக விளையாடி எதிரியை தோற்கடித்து பட்டம் வெல்கிறார். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் வினோத் நால்வருடன் ஏற்காட்டிற்கு இன்பச் சுற்றுலா செல்கின்றார். வினோத் எவ்வளவு எச்சரித்தும் நால்வரும் குடிபோதையில் இருக்க, விமல் அதிவேகமாக  காரை ஒட்ட விபத்துக்குள்ளாகிறது. பலத்த காயங்களுடன் காரிலிருந்து வெளியே வரும் வினோத் நண்பர்களை காப்பாற்ற ஆம்புலன்சிற்கு போன் செய்கிறார். அதன் பின் நடந்தது என்ன? நண்பர்கள் பிழைத்தார்களா? உதவி செய்த வினோத்திற்கு நடந்த சோகம் என்ன? என்பதே மீதிக்கதை.

வினோத் லோகிதாஸ் ஸ்னூக்கர் விளையாட்டு வீரராக, அமைதி கலந்த இயல்பான நடிப்பில் மனதில் கம்பீரமாக பதிகிறார். அம்மா, காதல், நட்பு என்று சிறிய வட்டத்திற்குள் தன் வாழ்க்கையை முடித்து கொள்ளும் கேரக்டர். பணக்கார திமிர் அடிக்கடி தலை தூக்கினாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் நண்பர்களிடம் மாட்டிக் கொள்ளும் கேரக்டர் விமல் ராஜா.போனிலேயே காதலிக்கு தூது விட்டு, பின்னர் காதலி யார் என்று தெரிந்து கொள்ளும் நண்பர்களுக்கு மத்தியில் கிண்டல்,கேலிக்கு பயப்படாமல் தனக்கு பிடித்ததை செய்யும் ஜாலிமேன் கேரக்டரில்  ஷிவ் நிஷாந்த் அற்புதமாக செய்துள்ளார். சத்யா மற்றும் கோபக்கார நண்பராக யாஷின் என்று இவர்களுடன் காதலியாக திவ்யா துரைசாமி படத்தின் கலகலப்பான காட்சிகளுக்கும், சோகமான காட்சிகளுக்கும் தங்களின் பங்களிப்பை அழுத்தமாக கொடுத்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். குறிப்பாக போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக் கொள்ளும் காட்சி கஞ்சா என்று நினைத்து வாங்கி வரும் ரவை காமெடி கைதட்டல் பெறுகிறது.

படத்தில் முதல் பாதி ஸ்னூக்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள், இரண்டாம் பாதி கார் பயணம். சேசிங் என்று முற்றிலும் மாறுபட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஸ்வர்ணகுமார் காட்சிக் கோணங்களில் விறுவிறுப்பர்க கொடுத்து முத்திரை பதித்துள்ளார். ஸ்னூக்கர் காட்சிகள் புரியாதவர்களுக்கும் புரியும் வண்ணம் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

சபரிவாசன் ஷண்முகம் பாடல் வரிகளில் தனுஜ் மேனன் இசையும்,பின்னணி இசையும் படத்தின் முக்கியமான காட்சிகளில் அதிர்வை ஏற்படுத்துகிறது.
ஷிபு நீல் பி.ஆர், மணி சேகர் படத்தொகுப்பு படத்திற்கு பலம்.

தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் படம் என்ற அறிவிப்புடன் வெளியாகியிருக்கும் சஞ்ஜீவன் படத்தின் முதல் பாதி அதற்கேற்றாற்போல் ஸ்னூக்கரை மையப்படுத்தி, நண்பர்களின் நக்கல், நய்யாண்டி, காதல் என்று கலகலப்புடன் பயணிக்கிறது. இரண்டாம் பாதி முற்றிலும் மாறுபட்டு சுற்றுலா பயணம், விபத்து என்று வேறு திசையில் பயணித்து டிராஜிடியாக முடிகிறது. இந்த திரைக்கதையில் குடிபோதையில் அதிவேகம் ஆபத்து என்பதை சொல்லி அதற்கு பலிகாடு வேறொருவரை காட்டி படத்தின் அர்த்தத்தை மாற்றி எதிர்பாராத விதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணி சேகர். இந்த க்ளைமேக்ஸ் காட்சி ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. சஞ்ஜீவன் என்றால் அழிவில்லாத நிரந்தரமானவன் என்ற டைட்டிலை வைத்து விட்டு நல்ல பழக்கம் கொண்டவர் இறக்க, தீய பழக்கம் கொண்டவர்கள் பிழைத்து கொள்வது போல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் நெருடலாக உள்ளது. எனினும் இயக்குனரின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சஞ்ஜீவன் வித்தியாசமான விளையாட்டு கதைக்களத்தை இன்னும் சுவாரஸ்யம் கலந்த பயணமாக கொடுத்து அசத்தியிருக்கலாம்.