கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் கமல்…. விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்

0
143

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் கமல்…. விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்

சென்னை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கடந்த 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், கமல்ஹாசன் நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்றும் டிசம்பர் 4-ந்தேதி முதல் தனது வழக்கமான பணிகளை தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிலும், பிக்பாஸ் படப்பிடிப்பிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் விக்ரம் பட வேலைகள் தாமதமாகி உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் சார்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தபடியே கமல்ஹாசன் பேசிய காட்சிகளை திரையில் ஒளிபரப்பினர். அதில், ‘‘கொரோனா தடுப்பூசி போட்டதால் எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா அச்சம் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

விக்ரம் படத்தில் கமல்ஹாசனும், வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியும் நடிக்கும் சண்டை காட்சியை படமாக்க பொள்ளாச்சியில் அரங்கு அமைத்து வந்தனர். தற்போது அரங்கு அமைக்கும் பணியை நிறுத்தி உள்ளனர். அந்த அரங்கை சென்னையில் அமைத்து சண்டை காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் கொரோனா தொற்றில் இருந்து குணமானதும் பொள்ளாச்சிக்கு பதில் சென்னையிலேயே விக்ரம் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.